Saturday, November 18, 2017


அடுத்த கன மழை தமிழகத்திற்கு எப்போது?

Added : நவ 18, 2017 01:18

'தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை இன்னும் ஒரு வாரத்திற்கு பின் வலுவடையும்' என, இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், நவம்பர், 14 முதல் வடகிழக்கு பருவ மழை ஓய்ந்து விட்டது. ஒருசில இடங்களில் அவ்வப்போது, அதிகபட்சம், 10 செ.மீ.,க்குள் மழை பெய்கிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை ஓய்ந்து, வெயில் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில், அடுத்து மழை எப்போது வலுப்பெறும் என, ஒரு வாரத்துக்கான கணிப்பை, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: தற்போது, இந்திய கடற்பகுதியில் இயல்பான சூழல் உள்ளது. 'எல் நினோ' கடலியல் சூழல் சராசரியாகவே உள்ளது. அதனால், திடீர் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. வங்கக்கடலில்,21ல், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, வலுப்பெற்று நகரும் திசையை பொறுத்து, தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் கணிக்கப்படும். அதேபோல, இம்மாத இறுதியில், வடகிழக்கு பருவ மழை மீண்டும் வலுப்பெறும். 27ல், வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில், புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், 23ம் தேதிக்குப் பின் மழை வலுப்பெறும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், மேல் அடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் போன்ற மாற்றங்களால், மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சீன கடலில் மீண்டும் புயல் : வங்கக் கடலுக்கு கிழக்கே, தாய்லாந்து வளைகுடாவுக்கு அடுத்துள்ள, தென் சீன கடலில், பிலிப்பைன்ஸ் அருகே, புதிய புயல் சுழல்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை, அமெரிக்காவின் ஒருங்கிணைந்த புயல் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் அருகில் உள்ள, சூலு என்ற கடற்பகுதியில், புயலுக்கு முந்தைய காற்றழுத்த தீவிர மண்டலம் உருவாகி உள்ளதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புயல், வியட்நாம் மற்றும் கம்போடியாவை நோக்கி பயணித்தால், மீண்டும் வங்க கடல் பகுதியில் மாற்றம் ஏற்பட்டு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடகிழக்கு கடலோர மாவட்டங்களில், மழைஅதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024