மரணமடைந்த பெண்ணின் தாய், சகோதரிக்கு இலவச மருத்துவ சிகிச்சை கோரி வழக்கு
Added : நவ 19, 2017 01:15
சென்னை:பெண்களை பின் தொடர்வது, கேலி செய்வது போன்ற வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், பயிற்சி பெற்ற பெண் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை, ஜன., ௫க்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:காதலை நிராகரிப்பதாலும், திருமணம் செய்ய மறுப்பதாலும், அப்பாவி இளம் பெண்கள், சிறுமியர் மீது, வெறி பிடித்த மனித மிருகங்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது; அதேநேரம், நிராகரிக்கும் உரிமையும் உள்ளது.
தங்கள் விருப்பத்துக்கு எதிராக பெண்கள் செயல்பட்டால், அவர்கள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி, கொலை செய்கின்றனர் அல்லது முகத்தை அலங்கோலப்படுத்துகின்றனர்.இதனால், பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் நிலை கொடுமையானது. அவர்கள் படும் வேதனை, நிரந்தரமாகி விடுகிறது. கல்லுாரி, பள்ளி மாணவி யரின் பின் சென்று,காதலிக்கும்படி வற்புறுத்துவது, தாக்குவது என்ற மனப்போக்கு தற்போது வளர்ந்து வருகிறது.
சமீபத்தில், ஆதம்பாக்கத்தில், திருமணம் செய்ய மறுத்ததால், இந்துஜா என்ற இளம் பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதில், அந்த பெண் மரணமடைந்தார். தடுக்க வந்த தாயார், சகோதரி, படுகாயம் அடைந்துள்ளனர்.மருத்துவக்கல்லுாரி மாணவி அளித்த புகாரில், சட்டக் கல்லுாரி மாணவன் ஒருவன், சமீபத்தில் கைது செய்யப்பட்டான். 'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய்நஷ்டஈடு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிப்புக்கும், பெட்ரோல் வீச்சால் ஏற்படும் பாதிப்புக்கும், வேறுபாடு ஒன்றும் இல்லை. அதனால், இரண்டையும் இணையாக கருத வேண்டும்.எனவே, ஆதம்பாக்கத்தில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், மரணமடைந்த பெண்ணின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா ஆகியோருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில், பயிற்சி பெற்ற பெண் இன்ஸ்பெக்டரை நியமித்து, இத்தகைய வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்படு பவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., ௫க்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.
No comments:
Post a Comment