Monday, November 13, 2017


நர்ஸ்கள் நியமனத்தில் ரூ.25 கோடி வசூல்

 நவ 13, 2017 02:02

மதுரை: ''நர்ஸ்கள் நியமனம், பணியிட மாறுதலுக்கு புரோக்கர்கள் மூலம் 25 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்தது குறித்து விசாரிக்க வேண்டும்,'' என, மதுரை சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:'அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்கள் 779 பேர் நியமிக்கப்படுவர்' என உத்தரவிடப்பட்டது. நியமனத்திற்கு முன், பணியில் உள்ள நர்ஸ்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஏப்., 19 முதல் 22 வரை நர்ஸ் பணியிடங்கள், பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங்கை கண்துடைப்பாக நடத்தினர். இதில் பெரும்பாலானோருக்கு விரும்பிய இடம் கிடைக்கவில்லை.இதுகுறித்து மதுரை, கன்னியாகுமரி உட்பட எட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 2017 ஜனவரியில் இருந்து மே 15 வரை பணியில் சேர்ந்த நர்ஸ்கள் விபரம் வழங்க, தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தேன்.
இதில், ஏப்ரலில் கவுன்சிலிங் நடக்கும் முன்பே 124 பேர்களுக்கு நியமனம், மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது தெரிந்தது. புரோக்கர்கள் மூலம் தலா 7 லட்ச ரூபாய் வீதம் 25 கோடி ரூபாய் வரை வசூல் நடந்துள்ளது.இம்முறைகேடு குறித்து அறிய கவுன்சிலிங்கிற்கு முன்பே மாறுதல், பணிநியமனம் பெற்ற நர்ஸ்களிடம் விசாரிக்க வேண்டும். சென்னையில் நாளை (நவ.,14) நடக்க உள்ள கவுன்சிலிங்கிற்கு வருமாறு, நவ.,10 இரவு தான் உத்தரவிட்டுள்ளனர். இதனால், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, நாளை (நவ.,14) கவுன்சிலிங்கை ரத்து செய்துவிட்டு விதிப்படி 10 நாட்கள் கால அவகாசம் தந்து, டிஜிட்டல் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங் நடத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024