Tuesday, November 7, 2017

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் மோடி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நேற்று அவரது இல்லத்தில்,பிரதமர் மோடி சந்தித்து, உடல் நலம் விசாரித்தார்.சென்னையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த, பிரதமர் மோடி, நேற்று பகல், 12:00 மணியளவில், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு வந்தார்.



வரவேற்பு

அவரை, வாசலில் நின்று, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி ஆகியோர், பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.பின், பிரதமர் மோடியை, முதல் மாடியில் உள்ள கருணாநிதி அறைக்கு, அழைத்துச் சென்றனர். அங்கு, பிரதமர் மோடியை, கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி வரவேற்றார். கருணாநிதியின் கையை பிடித்து, பிரதமர் உடல்நலம் விசாரித்தார்.

பிரதமர் வந்துள்ளது குறித்து, கருணாநிதியின் காதருகில் சென்று, ஸ்டாலின் கூறியதும், பிரதமர் மோடியை பார்த்து, கருணாநிதி சிரித்தார்.
கருணாநிதி எழுதிய, 'குறளோவியம்' மற்றும் முரசொலி பவள விழா மலரின் ஆங்கில பதிப்புகளை, பிரதமர் மோடிக்கு பரிசாகவழங்கினர்.பிரதமருடன் வந்திருந்த கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும், கருணாநிதியிடம் நலம் விசாரித்தனர்.

பின், வீட்டின் கீழ் தள அறையில் தங்கியிக்கும், கருணாநிதியின் மனைவி தயாளுவை, பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.கருணாநிதி வீட்டில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, வெளியில் திரண்டிருந்த கட்சியினரை பார்த்து, உற்சாகமாககையசைத்தார்.

பகல், 12:26 மணிக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றதும், கருணாநிதியை, வீட்டின் வாசலுக்கு ஸ்டாலின் அழைத்து வந்தார். கருணா நிதியுடன்கனிமொழி, 'செல்பி' எடுத்துக் கொண்டார். அங்கு, திரளாக கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

கனிமொழி கூறியதாவது: டில்லியில் உள்ள, தன் வீட்டில் ஓய்வு எடுக்க வர வேண்டும் என, கருணாநிதிக்கு, பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்.பிரதமருக்கு, கருணாநிதி கை கொடுத்தார்; புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

நன்றி

கருணாநிதியை, பிரதமர் சந்தித்ததில், அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. எல்லாவற்றையும், அரசியலாக பார்க்க முடியாது.மரியாதை வைத்திருக்கக் கூடிய மூத்த தலைவர் என்ற முறையில், கருணாநிதியை பிரதமர் சந்தித்தார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் மோடிக்கு, எங்கள் குடும்பத்தின் சார்பில் மனதார நன்றியை தெரிவித்தோம்.
கருணாநிதியின் உடல் நலம் நன்றாக உள்ளது. விரைவில், தொண்டர்களை சந்திக்கும் நிலைக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கனிமொழி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024