தயாராகிறது!'மோசடி மன்னன்' விஜய் மல்லையாவுக்கு சிறை...
உள்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை
புதுடில்லி: வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தொடர்புடைய விஜய் மல்லையாவை, 61, நாடு கடத்துவதற்கு, அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிறைகளில் உள்ள வசதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு எதிராக, வழக்குகள் தொடரப்பட்டன.
கோரிக்கை
இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின், லண்டனுக்கு தப்பிச் சென்றார். மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை வைத்தது.அதன்படி, லண்டன் நீதிமன்றத்தில், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், டிச., 4ல், இறுதி விசாரணை துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்வதற்காக, 20ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த முறை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'இந்தியாவில் உள்ள சிறைகளில், போதிய வசதி இல்லை; அங்கு, மல்லையாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது' என, அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கிடையில், வேறு இரு வழக்குகளில், நாடு கடத்தும் மத்திய அரசின் கோரிக்கையை, அந்நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்தன.
சிறைகளில் போதிய வசதியில்லை; அங்கு மனித உரிமை மீறல் நடக்கிறது என, அதற்கு காரணம் தெரிவிக்கப் பட்டது.
மிகுந்த கவனம்
அதனால், மல்லையா வழக்கில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என, மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் உள்ளது. மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதம் குறித்து பதிலளிக்கும்படி, உள்துறை அமைச்சகத்தை, வெளியுறவு அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, சிறைகளில் உள்ள வசதி குறித்து, உள்துறை செயலர், ராஜிவ் கவுபா தலைமையில், ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்க உள்ளது.
இது குறித்து, உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
நம் நாட்டில் உள்ள சிறைகளில், போதிய வசதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. பல முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என, பல்வேறு தரப்பு மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்கும் போது, எந்த சிறையில் அடைப்பது என்பது குறித்து, இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது.
அது தொடர்பாக, நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு, அது, பிரிட்டன் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும்.பிரிட்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், நம் நாட்டு சிறைகளில் உள்ள வசதி குறித்தும், மல்லையாவை எந்த சிறையில் அடைக்கலாம் என்பது குறித்தும், முறையாக
தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கசாப் சிறை,'ரெடி'
சிறைகளில் வசதியில்லை என்ற, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதத்துக்கு பதிலளிக்கும் வகையில், 'தேவையான வசதிகளுடன் கூடிய சிறை, மும்பையின், ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் உள்ளது' என, மஹாராஷ்டிர அரசு கூறியுள்ளது .'ஐரோப்பிய தரத்துடன் கூடிய வசதிகள் உடைய
சிறை, இந்தியாவில் இல்லை. நீரிழிவு நோய் உள்ளதால், மல்லையாவுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி அளிப்பதுடன், அவருக்கு, ஐரோப்பிய பாணியிலான கழிப்பறை வசதியும் அளிக்கப்பட வேண்டும்' என, மல்லையாவின் வழக்கறிஞர்கள், பிரிட்டன் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மஹா., மாநிலம், மும்பையைச் சேர்ந்த சிறை துறை கூடுதல், டி.ஜி.பி.,- பி.கே. உபாத்யாய், சமீபத்தில், மத்திய அரசுக்கு புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை அளித்துள்ளார்.
அதன் விபரம்:
மல்லையா தரப்பில் கேட்பது போன்ற வசதிகளுடன் கூடிய சிறை, மும்பை ஆர்தர் சாலை சிறை வளாகத்தில், 12வது பிரிவில், சிறை உள்ளது. அங்கு, 'ஏசி' வசதி மட்டும் கிடையாது. ஐரோப்பிய பாணியிலான, கழிப்பறை வசதி தேவைப்பட்டால், அதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
விசாரணை கைதியாக இருக்கும் வரை, நீதிமன்றம் உத்தரவிட்டால், வீட்டில் இருந்து சமைத்த உணவு அனுமதிக்கப்படும். 2008ல் நடந்த, மும்பை தாக்குதலில் பிடிபட்ட, பாக்., பயங்கரவாதி, அஜ்மல் கசாப்புக்காக, பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த சிறை பிரிவு அமைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment