Tuesday, November 14, 2017

குழந்தைகள் இயந்திரங்களா?


By  மன்னை. பாஸ்கர்  |   Published on : 14th November 2017 02:48 AM 
"உன் கூடத்தான படிக்கிறா அந்தப் பிரியா, அவ மட்டும் எப்புடி எல்லாப் பாடத்துலயும் முழு மார்க் வாங்குறா?' நீயும் இருக்கியே, ஏதாவது ஒரு தப்புப் பண்ணிட்டு 4 மார்க் குறைச்சு வாங்குறதே உனக்கு பொழப்பா போச்சு.
 "எப்பப் பாரு விளையாட்டுதான். ஒரு நாளாவது நீயா உட்கார்ந்து படிச்சிருக்கியா?' தெனமும் படி, படின்னு பாட்டு பாடனும். இல்ல.. அடிச்சாதான் படிக்கிறது. எப்பதான் திருந்தப் போறியோ..!
 இதுபோன்ற குரல்கள்தான் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீடுகளில் பெரும்பாலும் எதிரொலிக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் நடுத்தர மக்கள் வீடுகளில் இந்த வசவுகள் கொஞ்சம் அதிகமாகவே கேட்கும். தாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் கேட்கவே வேண்டாம்.
 ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு பெற்றோர் இடும் கட்டளைகளைக் கேட்டால் சிரிப்புதான் வரும். உனக்கு கிரிக்கெட் பேட் வேணுமா? வீடியோ கேம் வேணுமா? சைக்கிள் வேணுமா? இல்லை என்ன வேணுமோ கேள். உடனே வாங்கித் தருகிறோம்.
 ஆனால், எல்லா தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி விட வேண்டும் என்பதுதான் பிள்ளைகளிடம் பெற்றோர் பேசும் பேரம்.
 கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்த பெற்றோர், அதை வைத்து விளையாட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே என்று பிள்ளைகளுக்குக் கோபம்.
 சில குழந்தைகள் நாம் சொல்வதையெல்லாம் எதிர்ப்பேச்சு பேசாமல் கேட்டுக் கொள்வார்கள். ஒரு சிலர் ஏதாவது ஒரு வழியில் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். ஒரு சிலர் முணு முணுத்துக் கொண்டே செய்வார்கள்.
 இதேபோல தொடர்ந்து முணு முணுக்கும் குழந்தைகள் காலப்போக்கில் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பது மனவியல் ஆய்வாளர்களின் கருத்து. அதிக கண்டிப்பும் ஆபத்து, அளவுக்கு மீறிய செல்லமும் ஆபத்துதான்.
 விளையாடக்கூட நேரம் இல்லையே என மனதுக்குள் புழுங்கும் குழந்தைகள் ஒரு புறம்; அவர்களை மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றத் துடிக்கும் பெற்றோர் மறுபுறம். பிள்ளைகளுடன் செலவழிக்கக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் அவர்கள் மனத்தில் மதிப்பெண் வெறியை ஊட்டவே பயன்படுத்தும் பெற்றோர்.
 இவர்களில் மாற வேண்டியது யார்? விளையாட்டிலேயே குறியாக இருக்கும் குழந்தைகளா? இல்லை, மதிப்பெண்கள் வாங்கா விட்டால் எதிர்காலமே இல்லை என்ற எண்ணத்தை அழுத்தமாக மனத்தில் பதித்திருக்கும் பெற்றோர்களா?
 பொருளாதார ரீதியில் வாழ்க்கையின் உச்சியில் பிள்ளைகளை உட்கார வைக்க வேண்டும் என்று துடிக்கும் பெற்றோர், குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. அவர்களுக்கென்று ஆசைகளும் ,விருப்பு வெறுப்புகளும் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
 குழந்தைகளின் உடல் மற்றும் மன ரீதியான அமைப்பு பற்றி யோசித்துக் கூட பார்ப்பதில்லை.
 எத்தனை பெற்றோர், இரவில் உறங்கச் செல்லும் முன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கிறார்கள்? பள்ளிக் கூடங்களில் இப்போதெல்லாம் நீதி போதனை வகுப்புகள் இல்லாததால் ஆசிரியர்களும் கூட கதை சொல்வதில்லை. கதைகள் வழி கிடைக்கும் நியாயமும் நல்லெண்ணமும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
 இந்த உலகம் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டுமானது என்று நாமும் தவறாகப் புரிந்து கொண்டு, வளரும் தலைமுறையையும் தவறாக சிந்திக்க வைப்பது நியாயமா?
 இந்த உலகம் கடைசி மதிப்பெண் எடுப்பவனுக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, அவனும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்ற எதார்த்தத்தையும் மறைக்கிறோம்.
 இந்த சமூகம் மெத்தப் படித்த மேதாவிகளையும் பார்த்திருக்கிறது, படிக்காத மேதைகளையும் பார்த்திருக்கிறது என்பதுதானே உண்மை.
 பொது வெளியில் இந்த உலகைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள், இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும் இன்றைய நவீன உலகில் நுழையும் போது எதிர்கொள்ளும் எதார்த்தங்கள் அவர்களுக்கு மன அதிர்ச்சியையே ஏற்படுத்தும்.
 தனிமனிதனாக எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை அகற்றி அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தும். அன்பு, பாசம் ,உறவு, நட்பு போன்றவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் பணம் மட்டுமே அடி மனத்தின் சிந்தனையாக இருக்கும்.
 அளவுக்கு மீறிய அன்பு காரணமாக நம்முடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. நாம் வேண்டுமானால் குழந்தைகளைப் போல் இருக்கலாம், ஆனால், குழந்தைகள் நம்மைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
 பச்சிளம் தளிர்களை அதன் இயல்பான போக்கில் வளரவிட வேண்டும். இயன்றவரை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தந்து, ஊக்குவிப்பதுதான் பெற்றோர்களின் தலையாய கடமை.
 இது போட்டிகள் நிறைந்த உலகம்தான் என்றாலும், போட்டி மனப்பான்மை கொண்ட பிம்பங்களாக மட் டுமே குழந்தைகளை வளர்த்தால் எதார்த்த வெளிச்சம் படும்போது கூச்சம் ஏற்பட்டு, கண்களை மூடிக் கொள்வார்கள்.
 நம் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று முடிவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது.
 

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...