Tuesday, November 14, 2017

நாளை முதல் மழை படிப்படியாக குறையும்


By  சென்னை,  |   Published on : 14th November 2017 02:55 AM  |
todayrain

தமிழகத்தில் புதன்கிழமை ( நவ. 15) முதல் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியது:
 கடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாள்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று, திங்கள்கிழமை தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைப் பெய்துள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் இரு தினங்களில் வடதிசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில முறை லேசான மழையும், சில நேரங்களில் சற்று பலத்த மழையும் இருக்கும். புதன்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும் என்றார் பாலச்சந்திரன்.
 எண்ணூரில் 110 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 110 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
 பிற இடங்களில் மழை அளவு (மி.மீ.ல்): திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சென்னை மாதவரம் தலா 70, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், அரண்மனைப்புதூர், தாமரைப்பாக்கம் தலா 40, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம், தரமணி தலா 30, திருவள்ளூர் 20.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024