மாணவர் மனம் நலமா 08: கையில் செல்ஃபோனை வைத்திருப்பதைக் கைவிடுங்கள்!
ஏதோ ஆர்வத்தில் ஸ்மார்ட்ஃபோனை
அடிக்கடி பயன்படுத்திய நிலையிலிருந்து தற்போது அதிகப்படியான நேரம் ஸ்மார்ட்
ஃபோன் பயன்படுத்தும் நிலைக்கு என்னை அறியாமலேயே தள்ளப்பட்டிருக்கிறேன்.
இதனால் ஏற்படும் உடல், மனப் பிரச்சினைகளைப் பற்றிய தெளிவு வேண்டும்.
- ராஜேந்திரகுமார், பள்ளிக்கரணை, சென்னை.குடி, புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு அடிமையாவதைப் போல, செல்ஃபோனைச் சார்ந்திருப்பதும் ஒருவித ‘நடத்தை அடிமைத்தனம்’. அதீதமாக செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு மனவருத்தம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். பிரச்சினைகளைக் கையாள முடியாத கையறுநிலை, கவனக்குறைவு, பொதுஇடங்களில் மற்றவர்களோடு இயல்பாகப் பழக பதற்றம் ஏற்படுவது போன்றவற்றிலிருந்து தப்பிக்க சிலர் அதிகப்படியாக செல்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். எது சரி, எது தவறு என்று தெரிந்துகொள்ள நேரிடையாகக் குழந்தை மற்றவர்களோடு தொடர்புகொள்ள வேண்டும். அப்போதுதான், சரியான ஆளுமையை நோக்கி குழந்தை வளரத் தொடங்கும். ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகச் செய்தி அனுப்புதல்,பேசுதல், இணையத்தில் உலாவுதல் மூலமாக குழந்தையால் எதனையும் கற்றுக்கொள்ள முடியாது.
வயது முதிர்ந்தவர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் தொடுதிரையைப் பயன்படுத்தும்போது, மெலடோனின் என்ற ரசாயனப் பொருளின் அளவு குறைந்து, தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தூக்கமின்மையால் கவனம் குறைந்து மனதில் பதிய வேண்டிய விஷயங்கள் நீர்த்துப்போகும். இதனால், அடுத்த நாள் நிகழ்வுகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.
சமூக ஊடகங்களில் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்வது சிலருக்கு ஒருவித அடையாளத்தைத் தருகிறது. அடிப்படையில், வித்தியாசமான, பிரச்சினைக்குரிய ஆளுமைகளோடு இருப்பவர்கள், சமூக ஊடகங்களில், போலியான முகமூடிகளோடு தங்களை நகைச்சுவை மிகுந்தவர்களாகவும் நல்லவர்களாகவும் வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதீத அளவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால், ‘டெக்ஸ்டோஃபிரினியா’ என்ற பிரச்சினை தோன்ற வாய்ப்பிருக்கிறது. அழைப்போ மெசேஜோ வராதபோதும், அடிக்கடி செல்ஃபோனைப் பார்க்கும் பழக்கம், ‘டெக்ஸ்டோஃபிரினியா’ என்றழைக்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கும் அதிகமாகத் தினசரி ஆறு மணிநேரத்துக்கு மேல் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்துபவர்களுக்கு, மற்ற வேலைகள் பாதிக்கப்படுவதுடன், உடல், மனப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அலைபேசியால் உண்டாகும் உடல்பிரச்சினைகள்
1. கண்களில் எரிச்சல்2. பார்வை மங்குதல் போன்ற உணர்வு
3. கண்களில் தளர்வு
4. தலைவலி
5. கழுத்துவலி
அலைபேசியால் உண்டாகும் மனப் பிரச்சினைகள்
1. தூக்கமின்மை2. மனவருத்தம்
3. உறவுநிலைகளில் பிரச்சினைகள்
4. பதற்றம்
எப்படி மீள்வது?
1. செல்ஃபோனைப் பற்றிய கருத்தில் முதலாவதாக மாற்றம் கொண்டுவருவோம். அவசியமான நேரத்தில் ஃபோனைப் பயன்படுத்தினால்போதும் என்று ஒரு உடன்படிக்கையை முதலில் செய்துகொள்ளுங்கள்.2. ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் செல்ஃபோனைத் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள்.
3. பயன்பாட்டைத் திட்டமிடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அலைபேசியிலேயே அலாரம் வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் மட்டும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
4. செல்ஃபோனில் செலவழிக்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்த ஹோட்டலில் சாப்பிடுவது, பிடித்த உடை எடுத்துக்கொள்வது என்று நீங்களே உங்களுக்கு வெகுமதி கொடுத்துக்கொள்ளலாம்.
5. ஃபோனை அடிக்கடி ‘செக் பண்ணுவதை’ தவிருங்கள் அல்லது தள்ளிப்போடுங்கள்.
6. எந்நேரமும் கையில் செல்ஃபோனை வைத்திருப்பதைக் கைவிடுங்கள். பார்க்காத இடத்தில், வெகுதூரத்தில் ஃபோனை வையுங்கள்.
7. ஒவ்வொரு முறை மெசேஜ் வரும்போது, சிறு ஒலி எழுப்பி உங்கள் கவனத்தை ஈர்ப்பதை மாற்றிவிடுங்கள்.
8. முடிந்தவரை சிலரிடம் நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள்.
9. ஓய்வு நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.
10. சமூக நிகழ்வுகளில் நேரடியாக ஈடுபடுங்கள்
11. முடிந்தால் புதிய பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.
12. எப்போதுமே உங்களை ‘பிஸியாக’ வைத்திருங்கள்.
‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in
No comments:
Post a Comment