வாழ்க்கை எப்போதும் இனிதாக இருப்பதில்லை. சூழல் மிக இக்கட்டாக இருக்கலாம். பிரச்சினைகள் சவால் மிகுந்ததாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டும். இவற்றை நமக்கு அளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால், தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆளுவதும் இல்லையா? தன்னை ஆள முடியாதவர் தலைவராக முடியாது.
தலைமைப் பண்பின் தேவை
வீட்டில் நீங்கள் செல்லப் பிள்ளையாக இருக்கலாம். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் அங்கே பூர்த்தி செய்யப்படலாம். நீங்கள் விழுவதற்கு முன்பே தூக்கிப் பிடிக்கப்படலாம். உங்கள் தவறுகள் உங்கள் மனம் கோணாமல் கண்டிக்கப்படலாம். ஆனால், வெளி உலகம் கண்டிப்பாக இதற்கு நேரெதிரானது. தொட்டால் சிணுங்கியாக நீங்கள் இருந்தால் உலகம் உங்களைப் பந்தாடும். எனவே, உலகை எதிர்கொள்வதற்குக் கீழே விழுந்தால் தானே எழுந்து நிற்கும் திறனும் உங்களுக்குத் தேவை. தலைமைப் பண்பை வளர்த்தால், இத்தகைய இயல்புகள் உங்களைத் தானே வந்தடைந்து வெற்றிக்கு இட்டுச் செல்லும்.அத்தகைய தலைமைப் பண்பைப் பயிலத் தொடங்குவதற்கான மிகச் சிறந்த இடம் கல்வி நிலையம்தான். ஏனென்றால், வெளி உலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பது பள்ளிக்கூடமும் கல்லூரியும்தானே! அங்கே பாடத்தைப் படிப்பதோடு மட்டும் கற்றலை சுருக்கிக்கொள்ளக் கூடாது. பிற்காலத்தில், நாம் சந்திக்கப்போகும் சவால்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் தலைமைப் பண்பையும் அங்கே கற்றுப் பழகலாம். கீழே உள்ள எளிய வழிமுறைகள் அவற்றுக்கு உதவும்.
ஒழுக்கம் பழகுதல்
ஒழுக்கம் என்பது வெளியிலிருந்து நம் மீது திணிக்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. அது எந்த நிர்ப்பந்தமுமின்றி நம்மிடமிருந்து வெளிப்படும், இயல்பாக மாற வேண்டும். சுலபமான பயிற்சிகள் மூலம் இது சாத்தியம். நேரம் தவறாமல் இருக்கப் பழகுதல், குறித்த நேரத்தில் தூங்கி எழுதல், ஆசிரியர் சொன்ன நேரத்துக்குள் படித்து முடித்தல், தினமும் சுத்தமான உடை அணிதல், நகங்களை ஒழுங்காக வெட்டுதல், தலைமுடியை ஒழுங்காகப் பேணுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை இந்த இயல்பைப் பலப்படுத்த உதவும்.பொறுப்புகளை விரும்பி ஏற்கப் பழகுதல்
நிறைய பொறுப்புகளை விரும்பி ஏற்பது தலைமைப் பண்பை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை. படிப்பதற்கே நேரமில்லை, இதில் எங்கே கூடுதல் பொறுப்புகளை ஏற்பது என்று தோன்றலாம். இப்படி யோசித்துப் பாருங்கள், 100 மீட்டர் ஓடுவது என்பது இன்று உங்களுக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஆரம்ப நாட்களில் உசேன் போல்ட்டுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், அவர் அதையும் மீறி தன்னுடைய திறனைச் சவாலுக்கு அழைத்தார். அதனால்தான் அவரால் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைக்க முடிந்தது.எனவே, உங்களுடைய ஆற்றலின் அளவு எல்லையற்றது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். கூடுதலாகப் பொறுப்புகளை ஏற்க ஏற்க உங்களுடைய ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். வகுப்புக்குத் தலைமை வகிப்பது, விளையாட்டு அணிகளில் பங்கேற்பது, சாரணர் அணியில் இணைவது, சமூக சேவையில் ஈடுபடுவது, வீட்டு நிர்வாகத்தை ஏற்கப் பழகுவது போன்றவை உங்களுடைய திறனை அதிகரிக்க உதவும்.
No comments:
Post a Comment