காணாமல் போன அரசு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு
Added : டிச 10, 2017 02:14
புதுச்சேரியைச் சேர்ந்த அரசு ஊழியர், 10 ஆண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமானவர், மத்திய பிரதேசத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை அழைத்து வர, போலீசார் ம.பி., செல்கின்றனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன், 50; அரசு ஊழியராக இருந்தார்.
மனநிலை பாதிக்கப்பட்ட இவர், 2007ல், வீட்டில் இருந்து வெளியே சென்றவர், திரும்பவில்லை.
இது குறித்து, அவரதுமனைவி, ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் படி, முதலியார்பேட்டை போலீசார், வைத்தியநாதனை தேடி வந்தனர். அவர் கிடைக்கவில்லை.
கணவர் காணமால்போன சோகத்தில் இருந்த ஜெயலட்சுமி, முருங்கப்பாக்கத்தில் குடியேறினார்.
இந்நிலையில், ம.பி., மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து, வடக்கு எஸ்.பி., ரட்சனா சிங் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், புதுச்சேரியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர், ம.பி., உத்தான் மாவட்ட ஆசிரமத்தில் இருப்பதாக, தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வைத்தியநாதன் கையால் எழுதப்பட்ட முகவரி மற்றும் அவரது பழைய, புதிய புகைப்படம் ஆகியவை, எஸ்.பி., அலுவலகத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, போலீசார் விசாரணை செய்தனர். ம.பி.,யில் இருந்து அனுப்பப்பட்ட விலாசம் தவறாக இருந்ததால், உறவினரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.இருப்பினும் பின்கோடை வைத்து தேடி பார்த்ததில், அவர் முதலியார்பேட்டையில், 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைத்தியநாதன் என்பது தெரியவந்தது.
பின், முருங்கப்பாக்கத்தில் வசித்து வரும் ஜெயலட்சுமியிடம், வடக்கு எஸ்.பி., ரட்சனா சிங், நேரடியாக வந்து இத்தகவலை தெரிவித்தார்.கணவர் உயிரோடு இருப்பதை அறிந்து, ஜெயலட்சுமி ஆனந்த கண்ணீர் வடித்தார். முதலியால்பேட்டை போலீசார், ஜெயலட்சுமியை அழைத்து கொண்டு, மத்திய பிரதேசம் சென்று, வைத்தியநாதனை அழைத்து வர உள்ளனர்.
No comments:
Post a Comment