ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்க அரசு தயார்
புதுடில்லி : 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்களைப் பெறுவதற்காக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, 2018, மார்ச், 31 வரை நீட்டிக்கத் தயாராக உள்ளோம்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'மொபைல் போன் எண், வங்கிக் கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிநபர் சுதந்திரம், ஒருவரது அடிப்படை உரிமை' என, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்திருந்தது.
'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:
பல்வேறு சமூக நல திட்டங்களைப் பெறுவதற்காக ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதற்கான காலக்கெடுவை, 2018 மார்ச், 31 வரை நீட்டிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, 2018 பிப்., 6ம் தேதி என்பதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், அவர்கள் மீது, 2018 மார்ச், 31 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, இந்த வழக்குகளை விசாரிக்கும், அரசியலமைப்பு சட்ட அமர்வு, அடுத்த வாரத்தில் அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை
ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை.
No comments:
Post a Comment