Wednesday, December 13, 2017

குடும்பத்தினர் 4 பேர் கொலை- ஜவுளி கடைக்காரர் தற்கொலை முயற்சி

Added : டிச 13, 2017 04:50

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமை காரணமாக, தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகள் என, நால்வரை கழுத்தறுத்து கொன்று, ஜவுளிக்கடைக்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, பல்லாவரத்தை அடுத்த பம்மல், திருவள்ளுவர் நகர், நந்தனார் தெருவைச் சேர்ந்தவர், தாமோதரன், 38. அதே பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில், தாய் சரஸ்வதி, 62, மனைவி தீபா, 36, மகன் ரோஷன், 7, மகள் மீனாட்சி, 5 ஆகியோருடன் வசித்தார். தாமோதரன், பம்மல், ஏழுமலை தெருவில், 'பிரகாஷ் கிளாத் ஸ்டோர்ஸ்' என்ற, ஜவுளிக் கடையை நடத்தினார்.ரோஷன், மீனாட்சி ஆகிய இருவரும், மீனம்பாக்கம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், முறையே இரண்டாம் மற்றும் யு.கே.ஜி., வகுப்பு படித்து வந்தனர். தீபா, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், தாமோதரனுக்கு, ஓராண்டாகவே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 


உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம், அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியது மட்டுமல்லாமல், ஐந்து வங்கிகளில் வீட்டுக் கடன், நகை கடனும் உள்ளது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, தன் அலைபேசியில், மைத்துனர் ராஜாவிடம் பேசிய அவர், 'தனக்கு வாழப் பிடிக்கவில்லை; தற்கொலை செய்யப் போகிறேன்' எனக்கூறி, இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக, தன் பெற்றோரை, தாமோதரன் வீட்டிற்கு, ராஜா அனுப்பியுள்ளார். அவர்கள், காலை, 7:30 மணிக்கு, அங்கு சென்றபோது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடாமல் மூடியபடி இருந்துள்ளது.


தாமோதரனின் மாமனார் மற்றும் மாமியாரும், கதவை திறந்து உள்ளே சென்றனர். மகள் தீபா, பேரன் ரோஷன், பேத்தி மகாலட்சுமி மற்றும் தாமோதரனின் தாய், சரஸ்வதி ஆகியோர், கத்தியால் குத்தப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தாமோதரனும், கழுத்து மற்றும் கையை அறுத்த நிலையில், சுவரில் சாய்ந்து கிடந்தார்.உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வரழைக்கப்பட்டு, தாமோதரன் உள்ளிட்ட, ஐந்து பேரையும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், தீபா, சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்ததும், குழந்தைகள், ரோஷன், மீனாட்சி ஆகியோரின் உயிர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரிந்ததும் தெரிய வந்தது.தாமோதரன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில், பரங்கிமலை துணை கமிஷனர், முத்துசாமி, பல்லாவரம் உதவி கமிஷனர், தேவராஜ் விசாரணை நடத்தினர்.

ரத்த கடிதம் சிக்கியது : தாமோதரன் வீட்டில் ரத்தக்கறை படிந்த, ஐந்து பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றி உள்ளனர். டிச., 12 என தேதியிட்ட, அந்த கடிதம், மைத்துனர், ராஜா மற்றும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு, எழுதப்பட்டு உள்ளது. அதில், 'ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தேன். கடன் தொகை தான் அதிகமானது. தொழிலில் வளர்ச்சி ஏற்படவில்லை' என, கூறப்பட்டு உள்ளது. மைத்துனர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், 'தொழில் சம்பந்தமாக, உன்னிடம் பல முறை பணம் வாங்கினேன்; என்னால் திரும்ப கொடுக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நான் இருக்கும்போது தான், எனது குடும்பம் சிரமப்பட்டது. இதனால், என்னுடனேயே அவர்களையும் அழைத்துச் செல்கிறேன்' என, தாமோதரன் எழுதியிருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

- நமது நிருபர் குழு -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024