Wednesday, December 13, 2017

டிச. 31-க்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம்

By DIN | Published on : 13th December 2017 03:43 AM 


 | இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறப்பித்த உத்தரவு: 


2017-18-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்கு ஒன்றிய அளவில் ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிகள் டிசம்பர் 31-க்குள் முடிக்கப்பட வேண்டும்.


ஆதார் புகைப்பட அட்டை எடுக்கப்படாத மாணவர்களின் ஒட்டு மொத்த விவரங்களைப் பெற்று, ஆதார் எடுக்கும் முகமையினரிடம் செயல்திட்டத்தை வழங்கி, ஆதார் எடுக்கும் நாள்களில் அம்மையத்தில் கல்வித் துறையைச் சார்ந்த பொறுப்பான நபர் ஒருவரை நியமித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அட்டை எடுக்கும் பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும். 


ஆதார் அட்டை எடுக்க மாணவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது, பெற்றோர்களின் அனுமதியுடனும், பாதுகாப்பாகவும் அழைத்துச் செல்ல வேண்டும்.


இப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஏற்கெனவே ஆதார் எடுக்கப்பட்ட மாணவர்களினுடைய ஆதார் எண்ணிக்கை மேற்கண்ட தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆதார் புகைப்படம் எடுக்கும் மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கப் பெற்றதும் அவ்விவரத்தையும் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் அனைத்து மாணவர்களின் விவரங்கள் பதிவு முடிவடைந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்கள் இருக்கும் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாற்றப்படுதல், 20-க்கும் குறைந்த நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகே இருக்கும் பள்ளிகளோடு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடங்களைத் திரும்ப அரசிடம் ஒப்படைக்கு பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024