உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதா? அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!
By உமா பார்வதி |
Published on : 15th December 2017 04:47 PM
கணவன்
மனைவி தகறாரில் முன்பெல்லாம் சட்டி பானைகள்தான் உடைந்து கொண்டிருந்தன.
நவீன வாழ்வியலில் இப்பிரச்னைக்கு இலக்காவது மொபைல் ஃபோன்தான். கோபத்தில்
ஃபோனை தூக்கி எறிவதும், அதை ஆயுதமாகவும் பயன்படுத்துவதும் வீட்டில்
சாதாரணமாக நடக்கும் விஷயமாகிவிட்டது.
சண்டை முடிந்த நிலையில் கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு புதிய மொபைல் வாங்கித் தந்து சமரசம் ஆவதும் அழகுதான்.
வேடிக்கையோ
உண்மையோ, இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்விதமாக
இருக்கிறது. மொபைல் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதைப்
பயனாளிகள் மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது
சிலருக்கு
சார்ஜ் நீடித்து வராது, ஃபோன் மிகவும் சூடாகும், பேட்டரி விரைவில்
பழுதாகிவிடும், அல்லது ஃபோனை அடிக்கடி கீழே போட்டு டிஸ்ப்ளேயை உடைத்துக்
கொள்வார்கள். இது போன்ற செயல்களால் அந்த ஃபோனில் உள்ள அதன் ஹார்ட்வேர்
மற்றும் சாஃப்ட்வேரை பாதிப்படையும்.
நம்
மீது பிரச்னையை வைத்துக் கொண்டு என்ன ஃபோன் இது, ஒரு வருஷம் கூட
உருப்படியா வேலை செய்ய மாட்டேங்குது என்று நிறுவனத்தை குறை சொல்பவர்கள்தான்
அதிகம். இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன
என்று பார்க்கலாமா?
ஃபேன்ஸி கவர் வேண்டாம்!
நீங்கள்
பார்த்து தேர்ந்தெடுத்து, மனத்துக்குப் பிடித்த பின்னர் வாங்கிய பொருள்
அல்லவா உங்கள் மொபைல் ஃபோன்? அதற்கு நிச்சயம் உரிய பாதுகாப்பு தேவைதான்.
அதற்குரிய பாதுகாப்பு
கவசத்தை உடனடியாக அதே சைஸில் வாங்குவீர்கள் அல்லவா? அதுவும் கூட சரிதான்.
ஆனால் அப்படி வாங்கிய கவர்கள் மிகவும் ஃபேன்ஸியாகவோ, ப்ளாஸ்டிக் அல்லது
மெட்டலில் மலிவு விலையில் வாங்கிப் போடும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது.
உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யும்போது, அதிகப்படியாக வெப்பத்தை அவை
உள்வாங்கிவிடும். இது உங்கள் அலைபேசிகளுக்கு தீங்கு விளைவிக்கும். சிறிது
சிறிதாக உங்கள் மொபைல் ஃபோனை செயல் இழக்கவைத்துவிடும்.
எப்போதும் தரமான
செல் ஃபோன் கவர்களைப் பயன்படுத்துவது நல்லது. அதிக கனமானதையும் தவிர்த்து
விடுங்கள். உங்களுக்கு சில சமயம் இது குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால்
அதை கடைக்காரர் அல்லது நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை.
மாறாக விளம்பரங்களைப் பார்த்து கவரும்விதமாக இருக்கிறது என்று வாங்கி
பயன்படுத்தி, கடைசியில் முதலுக்கே மோசம் எனும் நிலைக்கு நம்மை ஆட்படுத்திக்
கொள்ள வேண்டாம்.
மாதம் ஒரு முறையாவது இவ்வாறு சார்ஜ் செய்யுங்கள்
நம்மில்
பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. ஃபோனில் சார்ஜ் முழுவதும் தீருவதற்குள் உடனே
ப்ளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்து கொள்வோம். அல்லது நமக்கு நேரம் இருக்கும்
போது, கொஞ்ச நேரம் சும்மாவே போனை சார்ஜில் போட்டுவோம். பயணத்துக்கு
கிளம்பும் போதும் சார்ஜ் 80 சதவிகிதம் இருந்தாலும் மீதி இருபதையும் ஏற்றுக்
கொள்ள நினைத்து சார்ஜை போடுவோம்.
ஆனால்
இந்தப் பழக்கம் மொபைல் ஃபோனின் ஆயுளுக்கு ஒத்து வராத ஒன்று என்பதை மட்டும்
தெரிந்து கொள்ள மாட்டோம். காரணம் ஒவ்வொரு தடவை நீங்கள் சார்ஜ் செய்யும்
போதும் உங்கள் மொபைல் சூடாகும். அடிக்கடி சார்ஜ் செய்தால் ஒருகட்டத்தில்
பேட்டரி வீக்காகி பழுதடைந்துவிடும். மொபைலில் 50 சதவிகிதம் வருவதற்குள்
நீங்கள் மூன்று அல்லது நான்கு தடவை சார்ஜ் செய்துவிடுவீர்கள். 20 சதவிகிதம்
வந்தபிறகு சார்ஜ் செய்வது கூட பரவாயில்லை. ஃபோனில் முழுவதும்
சார்ஜ் தீர்ந்தவுடன்தான் அதில் மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும். ரீ
சார்ஜ் என்பதன் அர்த்தமும் அதுதான்.
மாதம்
ஒருமுறையாவது உங்கள் ஃபோனில் சார்ஜ் முற்றிலும் குறைந்து பூஜ்ஜியத்துக்கு
வந்த பின்னர், அதை சார்ஜ் செய்யுங்கள். இதனால் பேட்டரி நீடித்து வரும்.
அடிக்கடி ஃபோனில் சார்ஜ் வடிந்து போகாமல் மொபைலில் நீண்ட நேரம் சார்ஜ்
நிற்கும்.
நீண்ட நேரம் சார்ஜரை மின்சார இணைப்பில் வைத்திருக்காதீர்கள்
சிலர்
இரவில் மொபைல் ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கி விடுவார்கள்.
காலையில்தான் அதன் ஸ்விட்சை அணைப்பார்கள். உங்கள் மொபைல் போனில் பேட்டரி
பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதன் காரணம் தேவைக்கும் அதிகமான நேரம் மொபைல்
சார்ஜில் இருப்பதால்தான்.
சில
ஃபோன்களின் மாடல்களில் பேட்டரியை வெளியில் எடுக்க முடியாது. அது போன்ற
மொபைல் ஃபோன்களை அதிக நேரம் சார்ஜில் வைத்திருக்கையில் நிச்சயம் ஃபோன்
சூடாகி உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அடுப்பில் பாலை காய்ச்சும்
போது கவனமாக அதன் அருகிலேயே இருப்போம். பால் பொங்கி வழியாமல் தடுக்க உரிய
நேரத்தில் அடுப்பை அணைத்துவிடுவோம் அல்லவா? போலவே சார்ஜ் போடும்போதும்,
அந்த அளவுக்கு இல்லையென்றாலும் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறியதும் உடனடியாக
ஃபோனை சார்ஜிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். அது பேட்டரியின் ஆயுளை
அதிகரிக்கும்.
தரமான இணைச் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்
பெரும்பாலான
மக்கள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் மலிவான மொபைலுக்குத்
தேவையான இணை சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது உங்களுக்கு
பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு நிறுவன ஸ்மார்ட் போன்களும் வெவ்வேறு
மின்னழுத்தத்தை வழங்கக் கூடியதாக இருக்கும். மொபைல் ஃபோனுடன் சேர்த்து
வாங்கும் சார்ஜர் தொலைந்துவிட்டால், சில சமயம் சந்தையில் கிடைக்கும் மலிவான
சார்ஜர்களை அவசரமாக வாங்கிவிடுவோம்.
ஆனால்
அவை உங்கள் ஃபோனுக்கு பொருத்தமில்லாத வேறு தர மதிப்பீட்டைக்
கொண்டிருக்கும். அவை ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனிற்காக
உருவாக்கப்படவில்லை, எல்லா சாதனங்களுக்கும் பொருந்தும்படியாக
பொத்தாம்பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே அவை எந்த சாதனத்திற்கும்
குறிப்பாக பொருத்தமானதாக இருக்க முடியாது.
அந்தந்த ஃபோனுக்குரிய
சார்ஜரையே அதற்குப் பயன்படுத்த வேண்டும். சந்தையில் குறைந்த விலையில்
கிடைக்கிறது என தரமற்ற சார்ஜர்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு
ஃபோனுக்கும் மின்சார சப்ளை இந்தளவுக்கு இருக்க வேண்டும் என்ற குறிப்பு
இருக்கும். ஆனால் அதை விடுத்து வேறு அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அது
பிரச்னை தர ஆரம்பித்துவிடும்.
சாஃப்ட்வேர் அப்டேஷன்
சாஃப்ட்வேர்
அப்டேஷன் செய்து கொள்கிறீர்களா என்று அடிக்கடி உங்கள் ஃபோனில் ஒரு மெசேஜ்
வருகிறதா? ஓசியில் கிடைக்கிறதே என்று எந்த அப்டேட்ஸ் வந்தாலும் அதற்கு ஓகே
கொடுத்துவிடக் கூடாது. அப்டேஷன் சில சமயம் நல்லதுதான். ஆனால் 17
அப்டேஷன்கள் கிடைத்தால் ஒட்டுமொத்தமாக அதை செய்யும் போது உங்கள் ஃபோன் ஓவர்
ஹீட்டாகிவிடும்.
தவிர
லேட்டஸ்ட் வெர்ஷன் என்று சில அப்டேட்டுக்கள் தரவிறக்கமாகும் ஆனால் உங்கள்
போனில் அதற்கான வசதி இல்லாமல் போனால் பிரச்னைதான். மேலும் வைரஸ், பக்ஸ்
போன்ற அழையா விருந்தாளிகள் உங்கள் மொபைல் ஃபோன்களில் தஞ்சம் அடைந்தால்
விரைவில் அது மென்பொருளை அழித்து உங்கள் ஃபோனை
குட்டிச்சுவராக்கிவிடும். தேவையில்லாத ஆப்களை டவுன் லோட் செய்யாமல்
இருப்பதும் உங்கள் மொபைல் ஃபோனின் ஆயுள் நீடித்திருக்கச் செய்யும் ஒரு
வழியாகும்.
நீரின்றி
அமையாது உலகு, போலவே ஃபோனின்றி இயங்காது அன்றாட வாழ்வு என்று இயந்திரம்
சூழ் வாழ்நிலையில், நாம் பாடுபட்டு வாங்கிய மொபைல் ஃபோன்களை பத்திரமாக
பாதுகாப்பது நமக்கும் நல்லது, நம் பர்ஸுக்கும் நல்லது.
No comments:
Post a Comment