Monday, December 25, 2017

 வாருங்கள் துணைவேந்தர்களே வாருங்கள்!
Added : டிச 25, 2017

சமீபத்தில், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, 241 பேரும், இன்னொரு பல்கலையில், 194 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வி.ஏ.ஓ., எனப்படும், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தான், அதிகமான விண்ணப்பங்கள் குவிந்ததை பார்த்திருக்கிறோம்.'பசையுள்ள' பதவி என்பதால், அப்படியொரு விண்ணப்ப சாதனை படைத்தது, வி.ஏ.ஓ., பதவி. இப்போது, துணைவேந்தர் பதவியும் அப்பெருமையை பெற்றுள்ளது

.தேர்வுக்குழுக்கள் இரவு பகலாக பாடுபட்டு, விண்ணப்பித்தவர்களின் பண்புகளை ஆராய்ந்து, மதிப்பெண்கள் போட்டு, அவர்களின் ஆளுமை திறன்களை கணித்து, இரண்டு பல்கலைக்கழகங்களும், தலா, பத்து பேரை தேர்ந்தெடுத்துள்ளன.

இன்னுமொரு சல்லடை சலிப்பில், பத்தை மூன்றாக்கி, பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டு விடும். தேர்வுக்குழுவால் ஒரு முறையும், பிறகு கவர்னரால் இன்னொரு முறையுமாக, இரண்டு நேர்முகத் தேர்வுகள் நடக்கும்.பிறகென்ன, வடித்தெடுத்த திறமை மிக்கவர்கள், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக அமரப் போகின்றனர்.பதவியில் அவர்கள் அமர போவது இருக்கட்டும். அவர்கள் தலைமையேற்க போகும் பல்கலைக்கழகங்களின் அருமை, பெருமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா!-சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லையில் உள்ள பல்கலைக்கழகங்களில் சில உள்கட்டமைப்புகள் உள்ளன.

 தமிழ்த்துறை, இயற்பியல் துறை போன்ற தனித்தனிப் பாடங்களுக்காக அமைந்திருக்கும் துறைகள் என்பது ஓர் அமைப்பு.இவை ஒவ்வொன்றிலும், அந்தப் பாடத்தில் அல்லது அதன் உட்பிரிவுகளில் சிறப்பறிவும், பயிற்சியும் பெற்றவர்கள் பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் பணிகளில் அமர்த்தப்படுவர்.தனியாக ஆய்வுகள் செய்வதும், ஆய்வு மாணவர்களூக்கு வழிகாட்டுவதும், பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் கற்பிப்பதும், தேர்வுகள் நடத்துவதும் இவர்களின் தலையாய பணிகளாகும்.ஓரளவுக்கு இந்தப் பணிகளை செய்ய, குறைந்தது ஏழு ஆசிரியர்களாவது, ஒரு துறையில் இருக்க வேண்டுமென, பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுகிறது.

துறைகளோடு, மையங்கள் மற்றும் பள்ளிகள் என, இரண்டு சிறப்பு அமைப்புகளும், பல்கலைக்
கழகங்களில் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் உயராய்வுகளில் உலகப் புகழ்பெற்ற அளவுக்கு சிலர் விளங்கினால், அவர்கள் தலைமையில் சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
ஒரு பாட ஆய்வுக்கோ அல்லது பட்ட மேற்படிப்பு பயிற்சிக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளின் உதவி தேவைப்படலாம். அப்படி, ஒன்றுக்கொன்று பயன்பெறும் வகையிலான துறைகள் சில இணைந்து, 'பள்ளி' என்ற அமைப்பு செயல்படும்.இங்கு பொதுமையான கட்டமைப்பு வசதிகளை எளிதில் பெற்று, ஆசிரியர்கள் கூட்டாய்வுகள் செய்தும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு களம் விரிந்த பயிற்சிகள் கொடுத்தும், பயன் விளைவிப்பர். பல்கலைக்கழக நிர்வாகத்தையும், இந்த அமைப்பு எளிமைப்படுத்தும்.ஆனால், நம் பல்கலைக்கழகங்களில் தற்போது இயங்கும் துறைகள், மையங்கள், பள்ளிகள், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.இந்தப் பல்கலைக்கழகங்களின் துறைகள், பள்ளிகள், மையங்களின் பணி- பயன்களை ஆராய்ந்து பார்த்தால், வேதனைகள் வெடிக்கின்றன. எந்த துறையிலும் துறை தாண்டிய பாடத்திட்டங்கள் இல்லை. பெயருக்குத்தான் விருப்பப்பாடத்திட்ட முறை உள்ளது.

பல துறைகளில் பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் தான்; சிலவற்றில் மாணவர்கள் இல்லை.எந்தப் பள்ளியிலும் கூட்டு ஆய்வுகள், பயிற்றுவிப்புகள் இல்லை. பள்ளிகளும், மையங்களும் ஆய்வு, பயிற்சி மேம்பாட்டுக்கு எந்த
விதத்திலும் உதவி செய்யவில்லை.சில ஆசிரியர்கள் மட்டுமே உள்ள துறைகளும் உடைக்கப்பட்டு, ஓராசிரியர், இரண்டாசிரியர் துறைகள் -உருவாக்கப்பட்டுள்ளன. துறைகளை உடைப்பதில் இரண்டு நன்மைகள்!ஒரு துறைத்தலைவர், துணைவேந்தருக்கு உடன்படாதவர்
என்றால் அவர் துறையை உடைத்து, அதே துறையிலிருக்கும் இன்னொருவரை, புதிய துறைக்கு தலைவராக்கி விட்டால், அவர் துணைவேந்தரின் கட்டுக்குள் வந்து விடுவார்.
இப்படித்தான், இத்தனை ஆண்டுகளை கடந்தும், இந்த பல்கலைக்கழகங்கள் இன்னும் ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமலும், ஓரிரு ஆசிரியர்களுடனும், இணை, துணைப் பேராசிரியர்களை தலைவர்களாக கொண்டும், தம்மை அடையாளம் காட்டி கொண்டிருக்கின்றன.இந்நிலையில், எங்கிருந்து, யாரிடமிருந்து, உயராய்வுக் கட்டுரைகளையும், கண்டுபிடிப்புக்களையும், உரிமங்களையும், தேசிய, பன்னாட்டு விருதுகளையும் பல்கலைக்கழகத்தால் எதிர்பார்க்க முடியும்...இங்கு பார்வைக்குக் கொண்டு வராத ஏனைய மாநிலப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிக் கருத்து கூறலாம். இவை வெளியுலகுக்கு - கூட்டமைப்புள்ள பள்ளிகள், துறைகள், ஆய்வுகள், பாடங்கள், கற்பித்தல் - என்றெல்லாம் தம்மை வெளிச்சம் போட்டுக்காட்டி, உண்மையில் காட்சிப்பிழைகளாக இருக்கின்றன.உயர்கல்வி மாளிகையின் உச்சப்பகுதிகளில், இப்படி தோன்றிய விரிசல்களையும், ஒட்டடை படலங்களையும் அண்ணாந்து பார்க்காமல், நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.இந்த அவலங்களை வெளிக்காட்டும் போது, ஒன்றை நாம் மறந்து விடலாகாது. 'சென்னை, மதுரை, திருச்சிப் பல்கலைக்கழகங்களில் அண்மை காலம் வரை ஒரு சில ஆசிரியர்கள் தம் ஆய்வுகளால் உலக அளவில் தலை நிமிர்ந்து நின்றனர்' என்பது தான் அந்த உண்மை.அவர்களெல்லாம் இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்று, நமக்கு பெருமை சேர்த்தனர். அவர்களெல்லாம் இப்போது ஓய்வுபெற்று வெளியேறி விட்டனர். அவர்களை பாராட்டுவோம்.'அத்தகையவர்களை இனி மேல் நம் பல்கலைக்கழகங்களால் உருவாக்க முடியுமா...' என்ற கேள்விக்கு உரிய விடை நமக்குக் கிடைக்கும் என்ற எண்ணம், தொடு வானத்தைத் தொடும் நம்பிக்கை தான்!இறுதியாக, இப்போதெல்லாம் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர்களின் நெஞ்சை நெருடும் ஒரே ஓரு உண்மை, பதவியேற்கும் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக இருக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் தான்!அவற்றை விரைந்து நிரப்ப வேண்டுமென்ற தீவிர நல்லுணர்வை நாம் குறை சொல்லக் கூடாது. ஆனால், நிகழ்வுகள் சரியில்லையே!நாம் விவரித்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றில் நான்காசிரியர்களுக்கு குறைவான துறைகளே இல்லை என்று மகிழ்ந்தோமே, உண்மையில் அதுவும் ஒரு வேதனை தரும் காட்சிப்பிழை தான்!அண்மைக்காலங்களில் அங்கு நடைபெற்ற ஆசிரியர் தேர்வுகளை நாம் சுட்டாமல் இருக்க முடியவில்லை. பல்கலைக்கழக வகுப்புகளில் காலடி வைத்து, பட்டங்கள் பெறாமல், இடம் கிடைத்த கல்லுாரிகளில் பட்டங்கள் பெற்று, பி.எச்டி., பட்டங்கள் பெற்றவர்கள், 40 பேருக்கு குறையாமல் இணைப் பேராசிரியர்களாகவும், துணைப்பேராசிரியர்களாகவும் நியமனம் பெற்றிருப்பதை செரிக்க முடியவில்லையே!இத்தகைய நிகழ்வுகள், வேறு வளாகங்களிலும் தொடரும் சூழ்நிலையென்றால், வரும் காலத்தில் நம் உயர்கல்வி மாளிகையின் கூரையே வீழ்ந்து விடுமே!தேர்வுக்குழுக்கள் துணைவேந்தர்களையும், ஆசிரியர்களையும்
தேடித்தேடி, 'பொறுக்கும்' முறைகள் இனியும் தொடர வேண்டுமா?இப்போதைக்கு 'வாருங்கள்
துணைவேந்தர்களே' என, வாழ்த்துவோம்.

ப.க.பொன்னுசாமி, முன்னாள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்
இ-மெயில்: ponnu.pk@gmail.com

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...