Monday, December 25, 2017

 பெரியார் பல்கலையில் ஆவணங்கள் மாயம் : பதிவாளரிடம் அறிக்கை கேட்பு
Added : டிச 25, 2017

சேலம்: பெரியார் பல்கலையில், ஆவணங்கள் மாயமான விவகாரத்தில், அறிக்கை அளிக்கும்படி, பதிவாளரிடம் கேட்டுக்கொண்டுள்ள போலீசார், அதில் சிக்கப்போகும் அதிகாரிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து, அவர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

சேலம், பெரியார் பல்கலையில், 2012 முதல், 2015 வரை பணியில் சேர்ந்த பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களின் நியமன உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமாகின.
இதுகுறித்து, ஏற்கனவே பதவி வகித்த பதிவாளர்கள், அவர்களின் கீழ் பணிபுரிந்த அதிகாரி
களுக்கு விளக்கம் கேட்டு, பதிவாளர் மணிவண்ணன், 'மெமோ' அனுப்பியிருந்தார். அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை.இதனால், அவர் கடந்த, 16ல், போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார்
அளித்தார். இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த, 18ல், ஆவணங்கள் மாயமான விவகாரத்தில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, 57, மற்றும் நிர்வாகத்தினர் மீது,
வழக்குப்பதிந்தனர்.போலீசார், விசாரணையை துவங்க இருந்த நிலையில், அங்கமுத்து தற்கொலை செய்தார். கடந்த, 20ல், போலீசார் விசாரணையை துவக்கினர்.

முதல் கட்டமாக, பதிவாளர் மணிவண்ண னிடம், 2012 முதல், 2015 வரை பதிவாளர்
பதவி வகித்தவர்கள், அவர்களின் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள், அதற்கு பின்னர் வந்த அதிகாரி
களின் தகவல்களை, அறிக்கையாக அளிக்கும்படி கேட்டுள்ளனர்.இதை பெற்ற பின்,
தங்கள் முழு விசாரணையை, போலீசார் துவக்க உள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் பெண் அதிகாரி உள்பட, 20 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பெரியார் பல்கலையில், ஆவணங்கள் மாயமானதால், 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.நியமன உத்தரவு இருந்தால் மட்டுமே, சம்பள நிர்ணயம், உயர்வு உட்பட பிற சலுகைகளை, அவர்கள் பெற முடியும். இதனால், ஆவணங்கள் மாயமானதில், பெரிய சதி நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம்.பதிவாளர் அளிக்கும் அறிக்கைப்படி, முழு விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவரும்.இதில், முதல் குற்றவாளியாக உள்ள அங்கமுத்து மறைந்து விட்டதால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படலாம். ஆனால், ஒருவர் மட்டும், இத்தவறை செய்திருக்க வாய்ப்பில்லை.தவறு செய்ய துாண்டியவர்கள், உடந்தையாக செயல்பட்டவர்களின் விபரங்களை, பதிவாளர் அறிக்கை அளிக்கும் முன், சந்தேகத்தின் அடிப்படையில் சேகரித்து வருகிறோம்.அறிக்கையில், சந்தேகப்படும் நபர்கள் பெயர் இடம் பெற்றிருந்தால், முதலில், அவர்களிடம் இருந்து விசாரணை தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...