Monday, December 18, 2017

முழுச்செலவும் கிடைக்கும் வகையில் மருத்துவகாப்பீடுத்திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும்



மருத்துவக்காப்பீடுத்திட்டத்தின் கீழ் முழு மருத்துவ செலவையும் காப்பீட்டுக்கு கழகமே வழங்கும் வகையில் திருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
டிசம்பர் 17, 2017, 03:30 AM

விருதுநகர்,

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்நகர் ஏ.வி.கே.சி. திருமண அரங்கில் மாநில தலைவர் சோமநாதன் தலைமையிலும், முதன்மை ஆலோசகர் சுப்பையா, இணை செயலாளர் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் ஆறுமுகம் கூட்ட நடவடிக்கை குறித்து பேசினார். அதன் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசின் மருத்துவ காப்பீடுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு மருத்துவ செலவு முழுவதையும் காப்பீடுக்கழகமே ஏற்றுக்கொள்ளும் வகையில் மருத்துவ காப்பீடுத்திட்டம் மாற்றி அமைக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் பயணத்தில் முதியோர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக வளர்ச்சி அடைய செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

விருதுநகரில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அறிவித்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல்–அமைச்சர் அறிவித்த பல் மருத்துவகல்லூரியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்றோர். செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024