Friday, December 22, 2017

பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா சிகிச்சை வீடியோ





இந்தியா முழுவதுமே இப்படியும் நடக்குமா?, நடக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

டிசம்பர் 22 2017, 03:00 AM
இந்தியா முழுவதுமே இப்படியும் நடக்குமா?, நடக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. தொகுதி முழுவதும் பணமழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. நேற்று தேர்தல் தினத்தன்றுகூட, பணம் பரிமாறப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆள்–அம்பு–சேனை என்று பெரியபடை வைத்திருக்கும் தேர்தல் கமி‌ஷனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. புதுப்புது டெக்னிக்குகளில் பணப்பரிமாற்றம் நடந்தது. இந்தநிலையில், தேர்தலுக்கு முந்தையநாள் பிற்பகலில் தலைமைச் செயலகத்திலேயே டி.டி.வி.தினகரனின் முக்கியமான ஆதரவாளரான வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு அறையில் படுத்தபடி பழச்சாறு அருந்திக்கொண்டு இருப்பது போன்ற 20 வினாடிகள் ஓடிய அந்த வீடியோவை வெளியிட்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள்–சந்தேகங்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. கடந்த சனிக்கிழமைக்கூட அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறும்போது, ‘ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூச்சுத்திணறலோடு கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்’ என்று தெரிவித்தார். அப்படியானால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் ஏன் காய்ச்சலோடும், நீர்ச்சத்து குறைவோடும்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது? என்று கேட்டதற்கு, ‘அவருடைய உண்மையான உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டால், பொதுமக்களின் ஆத்திரத்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்’ என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். முதல்–அமைச்சரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரத்தை கொண்ட மருத்துவ அறிக்கையை வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தியது யார் என்பதில் மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனிப்பட்டமுறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித்தொடர்பு உடையவர்களும் அதுகுறித்து அவர்களுக்கு தெரிந்த தகவலை விசாரணை ஆணையத்திடம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது வெற்றிவேல் எங்களிடம் இதுபோல மேலும் பல வீடியோக்கள் இருக்கிறது என்று கூறினார். மேலும் விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை, அழைத்திருந்தால் அவர்களிடம் கொடுத்திருப்பேன். அதனால்தான் ஆணையத்திடம் கொடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். வெற்றிவேல் மீது போலீசில் புகார் கொடுத்துள்ள விசாரணை ஆணையம், உடனடியாக யார்–யாரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக என்னென்ன ஆதாரங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் தரவேண்டும் என்றும் அறிவிக்கவேண்டும். மருத்துவமனை தகவல்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மிகவிரைவில் இதுபோன்ற வீடியோ உள்பட அனைத்து ஆதாரங்களையும் திரட்டி முழுமையான விசாரணை முடித்து தாக்கல் செய்யும் அறிக்கையில்தான் உலகுக்குத் தெரியும். அதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.



No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...