Wednesday, December 20, 2017

ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு

ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளியாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதய சிகிச்சை, காசநோய், வலிப்பு நோய், மனநலம், இளம்பிள்ளை வாதம், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் பெறுவதற்கு ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிகாலையிலேயே வந்து, நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
காலை 7. 30 மணிக்கு துவங்க வேண்டிய மாத்திரை வழங்கும் கவுன்டர் காலை 8. 30 மணிக்கு துவங்கப்பட்டு 11 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் குறித்த தேதியில் மாத்திரை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘’ புதன், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள்தான் மாத்திரை வழங்கப்படுகிறது. 

நோட்டில் எழுதி தரும் தேதியில் அதிகாலையிலேயே வந்தாலும் மாத்திரை கிடைப்பதில்லை. மறுவாரம் வந்து மருந்து கேட்டால் ‘‘கடந்த வாரம் ஏன் மாத்திரை வாங்கவில்லை’’ என மெத்தனமாக கேட்கின்றனர்.   மன நல பிரிவில் வழங்கப்படும் மாத்திரைகள் குறித்த நேரத்தில் நோயாளிகள் பயன்படுத்தவில்லையென்றால் மன நலம் மேலும் பாதிப்படையும்.
சர்க்கரை, இதயம் உள்ள பல்வேறு நோயகளுக்கும் இதே நிலைதான். சிலர் வேறு வழியின்றி வெளியிடங்களில் மருந்து வாங்குகின்றனர்’ என்றனர்.

மருந்தாளுநர்கள் கூறுகையில், ‘’ ஒரு நாளைக்கு 12,000 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

உள் நோயாளிகளுக்கு தனியாகவும், புறநோயாளிகளுக்கு தனியாகவும், மாதந்தோரும் மாத்திரைகள் வழங்குவதற்கு தனியாகவும் என 3, 4 பிரிவுகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஊழியர்கள், கவுன்டர்கள் திறக்காததால் எங்களால் உடனுக்குடன் மாத்திரை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது’ என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024