Wednesday, December 20, 2017

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது

நெல்லை : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முழுநேர, பகுதி நேர எம்பில், பிஎச்டி பட்டங்கள் அரசு பணி நியமனம், பதவி உயர்வுக்கு ஏற்புடையது என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட அரசாணையில் (எண். 355) கூறியிருப்பதாவது: அஞ்சல் வழிக்கல்வி, தொலைதூரக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்ழகம் மூலம் பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டம் அரசு பணிகளில் நியமனம் செய்வதற்கும், கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கும் தகுதியற்றவை என தெரிவித்து கடந்த 2009ம் ஆண்டு உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நேரடி முறையில் முழுநேர, பகுதிநேர எம்பில், பிஎச்டி படிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்தில் ஆய்வுப்படிப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி உதவி பேராசிரியர்கள் 4 பிஎச்டி, ஒரு எம்பில் மாணவர்களுக்கும், இணை பேராசிரியர் 6 பிஎச்டி, 2 எம்பில் மாணவர்களுக்கும், பேராசிரியர்கள் 8 பிஎச்டி, 3 எம்பில் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்பட முடியும். 

தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு ஆய்வுப்படிப்பு நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்விப்புலங்கள் வழியாக நேரடி முறையில் பல்லைக்கழக நிதி நல்கைக் குழுவின் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் நிரந்தர உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர்களின் மேற்பார்வையில் பகுதி நேர, முழு நேர முறையில் எம்பில், பிஎச்டி ஆய்வு படிப்புகளை நிறைவு செய்து பட்டம் பெற்றவர்களின் ஆய்வு பட்டங்களை அரசு, அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையதாக அங்கீகரித்து ஆணை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

பதிவாளரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, பள்ளி இறுதித் தேர்வு, மேல்நிலை கல்வித் தேர்வு தேர்ச்சி பெற்ற பின்னர் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பெறப்படும் முதுகலை பட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம், பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டங்களை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024