ரூ.1,76,000 கோடி = 0?
By ஆசிரியர் |
Published on : 23rd December 2017 01:13 AM |
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னையின் அடிப்படைக் குற்றச்சாட்டு, அன்றைய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதற்கு கையாண்ட முறையால் அரசுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான அனுமான இழப்பு ஏற்பட்டது என்பதுதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் விடாமல், முதலில் விண்ணப்பித்தவருக்கு முதல் உரிமை என்கிற அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது என்று அமைச்சர் ஆ. ராசா எடுத்த முடிவு சில நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும், அதன் மூலம் ஆ. ராசாவும் அவரது கட்சியினரும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு 2012-இல் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையால் செய்யப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று ஒட்டுமொத்தமாக நிராகரித்தது. ஆ. ராசா தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது 2008-இல் வழங்கிய 122 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்தது.
அதன் தொடர்வினையாக மத்திய புலனாய்வுத் துறையால் இந்த முறைகேடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து நீதிபதி ஓ.பி.சைனி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
உச்ச நீதிமன்றத்தால் முறைகேட்டுக்கான காரணிகள் இருக்கின்றன என்று கருதப்பட்டு, ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்ட ஒரு வழக்கில், இப்போது மத்திய புலனாய்வுத் துறையால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அத்தனை பேரும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கைப் பொருத்தவரை, முறைகேட்டுக்கான முகாந்திரம் இருக்கிறது என்று கருத சில காரணிகள் உண்டு. 'முதலில் வந்தோருக்கு முன்னுரிமை' என்கிற முறையால், ஏல முறையில் கிடைக்கும் அளவு அரசுக்கு உரிமக் கட்டணம் கிட்டவில்லை என்பது உண்மை. தொடர்ந்து நடத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்கிற அமைச்சர் ஆ. ராசாவின் முடிவைப் பயன்படுத்தி உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை கார்ப்பரேட் இணைப்பின் அடிப்படையில் இன்னொரு நிறுவனத்துடன் இணைத்து, தங்களுக்குக் கிடைத்த உரிமத்தை அந்த நிறுவனத்திற்கு கைமாற்றினார்கள். இதன் மூலம் பெரும் லாபமும் அடைந்தார்கள்.
முந்தைய குற்றச்சாட்டைப் பொருத்தவரை, அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கு முன்னுரிமை தராமல், குறைந்த கட்டணத்தில் பரவலாகத் தகவல் தொலைத்தொடர்பு வசதி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் ராசா தனது வாதத்தை முன்வைத்தார். உரிமங்களை கைமாற்றி சில நிறுவனங்கள் லாபம் ஈட்டின என்கிற அடுத்த குற்றச்சாட்டைப் பொருத்தவரை, அது முறையான கார்ப்பரேட் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் நடந்திருக்கிறது என்பதுதான் ஆ. ராசா தரப்பு வாதம்.
வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, மக்கள் மன்றத்தில் அன்றும் இன்றும் எழுப்பப்படும் கேள்வி இதன்மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் அடைந்தார்களா என்பதுதான். அதுகுறித்துத் தெளிவான எந்தவித முடிவையும் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையின் மூலம் எட்டவில்லை என்பதைத்தான் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக்குகிறது.
இந்த வழக்கில் மட்டுமல்ல, மத்திய புலனாய்வுத்துறை சமீப காலங்களில் கையாளும் எல்லா வழக்குகளிலும் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போகிறது என்பது இந்த வழக்கிலும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
2ஜி அலைக்கற்றை வழக்கு எழுப்பிய இன்னொரு முக்கியமான கேள்வி, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை, தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தவறாக வழிகாட்டினாரா என்பது. இந்தப் பிரச்னை குறித்து எந்த ஓர் ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி சிறப்பு நீதிமன்றம் அதையும் நிராகரித்துவிட்டிருக்கிறது.
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமைச்சரின் முடிவால் அரசுக்கு ரூ.1,76,000 கோடி அனுமான இழப்பு ஏற்பட்டது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் கணித்திருந்தாரே, அது தவறா? முறைகேடு நடந்திருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றம் அத்தனை உரிமங்களையும் ரத்து செய்ததே, அது தவறா? இப்படிப் பல கேள்விகள் இன்னும் விடை காணப்படாமல் இருக்கின்றன. குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்று சொன்னால், ஆ. ராசா 453 நாள்களும், கனிமொழி 192 நாள்களும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்களே, அதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
No comments:
Post a Comment