Sunday, December 24, 2017

அறிவு அற்றம் காக்கும் கருவி

By டி.எஸ்.தியாகராசன் | Published on : 23rd December 2017 01:12 AM |

அண்மையில் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி. பள்ளியொன்றில் ''ஆசிரியர் மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்யச் சொன்னார். இதனால் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் பள்ளி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.'' இதைப் படித்ததும் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வந்தது.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அண்ணலின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே, பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை காங்கிரஸ் மாநாடு ஒன்றிற்கு உடன் அழைத்துச் சென்றார். காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக கலந்துகொண்ட மோகன்தாஸ் மாநாட்டு நிர்வாகிகளை அணுகி தனக்கு ஏதேனும் ஒரு தொண்டு பணியைக் கொடுக்க வேண்டினார். 'இங்கு நீங்கள் செய்யக்கூடிய பணி எதுவும் இல்லை' என்றனர் நிர்வாகிகள்.
அன்றிரவு அங்கே தங்கிய காந்தி மறுநாள் காலை மாநாட்டுப் பந்தலை ஒட்டியுள்ள திறந்தவெளியில் காங்கிரஸ் தொண்டர்கள் மலம் கழிப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அன்று பிற்பகலே மண்வெட்டி, கூடை இவற்றைக் கேட்டுப் பெற்றார். மாலையில் திறந்தவெளியில் சிறு, சிறு குழிகளைத் தோண்டியும், தோண்டி எடுத்த மண்ணை, அந்தக் குழிகள் அருகில் கொட்டவும் செய்தார். இரவு தொண்டர்களிடம் காலையில் அந்தக் குழிகளில் மலம் கழித்துவிட்டு மண்ணால் மூடிவிட வேண்டினார். மலத்தை 21 தினங்களில் மண் செரிமானம் செய்துவிடும் என்பது இயற்கை.
உலகம் போற்றும் உத்தமராக விளங்கிய அந்த அண்ணல் காங்கிரஸில் தனது முதல் பணியாக 'துப்புரவு' செய்தார்.
சபர்மதி ஆசிரமத்தில் தன்னை இணைத்துக் கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்த இங்கிலாந்து பெற்றெடுத்த நங்கை மேடலின் ஸ்லேட் என்ற மீராபென்னிற்கு காந்திஜி அளித்த பணிகளில் ஒன்று, ஆசிரமக் கழிவறைகளை சுத்தம் செய்வது.
நாடு விடுதலை பெற்றதும் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு ஆதாரப் பயிற்சி பாடத்திட்டத்தை முன்வைத்தார். ஆதாரப் பயிற்சி என்பது வேளாண்மை, நெசவு, தோட்ட வேலை, கைத்தொழில், சமைப்பது, கழிவறை தூய்மை போன்ற பல துறைகளில் பயிற்சி அளிப்பது. சில ஆண்டுகள் இத்திட்டம் நாடெங்கினும் நடைமுறையில் இருந்தது. காலம் சென்றது. காந்தியும் காலனோடு கரைந்தார். அவரது அரிய திட்டமும் கனவாய் கலைந்தது. இன்றைக்கு இந்தியப் பிரதமர் 'தூய்மை இந்தியா' என்றதொரு திட்டத்தை முன்வைக்கிறார்.
சீனாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்வதற்கு அந்நாட்டு பிரதமர் 'கழிப்பறைப் புரட்சி' என்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பள்ளிகளில் மாணவர்களே வகுப்பறை முதல் கழிப்பறை வரை தூய்மை செய்ய வேண்டும் என்பதை ஜப்பான் கட்டாயமாக்கி சிறப்பாக நடத்தி வருகிறது.
மேலை நாடுகளில் நடைபயிற்சிக்குச் செல்லுபவர்கள் அவர்தம் செல்லப் பிராணியான நாய்களையும் உடன் அழைத்துச் செல்வர். இடையில் நடைபாதையில் நாய்கள் மலம் கழிக்கும் எனில், மலத்தைச் சிறிதும் அருவருப்பு இன்றி ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக்கொள்வர். பின் நடைபயிற்சியைத் தொடருவர்.
சாலையிலோ, பேருந்திலோ, தொடர் வண்டியிலோ, தூய்மை உணர்வு இன்றி இஞ்சித்தும் கூச்சமின்றி குப்பைகளைக் கொட்டுகிறோம். அசுத்தம் செய்கிறோம். படிக்கும் நம் பிள்ளைகள் பள்ளிகளில் பெருக்குவதும், கழிவறையைச் சுத்தம் செய்வதும் அவர்களின் உடல் ஆரோக்கியச் சூழலுக்கு அவசியம் தேவை என்பதை உணர மறுத்து பெருங்குரலெடுத்து கூப்பாடு போடுகிறோம். ''ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவா'' என்பதுபோல வெறும் வறட்டுக் கல்வி வாழ்க்கையின் பிற நலன்கட்கு உதவா!
எல்லாமே இலவசம் என்றாகிவிட்ட இந்நாளில் கல்வியின் அருமை தெரிவதில்லை. அதனால்தான் புத்தகக் கவளி ஏந்த வேண்டிய கரங்களில் கத்தியும் இன்னபிற கொலைக் கருவிகளும் விளையாடுகின்றன. கல்வி கற்க நம் முன்னோர்கள் கொடுத்த விலையும் அதிகம். மதிப்பும் அதிகம். அதனால்தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடுவான், ''உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே'' என்று.
மேலும் வேறுபாடு காட்டும் நான்கு வகையான பிரிவிற்குள்ளும் தாழ்ந்தவன் என்று பாராது, கல்வி பொருட்டு ஒருவனுக்கு உயர்வு உண்டாவது உறுதி என்ற பொருளில் ''வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவன்அவன் கட்படும்'' என்றான்.
சங்க காலத்தில் மாணவர்கள் நேரம் தவறாது ஆசிரியர்களிடத்துச் சென்று, பணிந்து வணங்கி அவரது இயல்புக்கு ஏற்றவாறு நின்றொழுகி முறையாகப் பயின்று ஆசிரியரது மன ஓட்டத்திற்கு இணங்க ''இருவென இருந்து, சொல்லெனச் சொல்லிப் பகுவன், அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவி வாயாக, நெஞ்சுக் களன் ஆகக் கேட்டவை, கேட்டவை விடா துளத்தமைத்து போவெனப் போதல் என்மனார் புலவர்'' என்று பவணந்தி முனிவர் சொல்லுகிறார். (நன்னூல், பொதுப்பாயிரம்: 4).
காட்டாற்று வெள்ளத்தை இரு கரைகளுக்குள்ளே அடக்கி வாய்க்கால் வழியோட விட்டால் வயலில் பயிர்கள் நன்றாக விளையும். இல்லையாயின் வெள்ளத்தால் பயிர்கள் பாழ்பட்டுப் போகும். இதைப்போன்றே மாணவச் செல்வங்களின் குணநலன் அறிந்து செய்யத் தக்கன எவை? செய்யத்தகாதன எவை? என சுட்டிக்காட்டுதல் ஆசிரியரின் பணி.
வரம்பு மீறும் இடத்து ''கடிதோச்சி மெல்ல எறிதல்'' போல கடிந்தும், நல்லன காணுமிடத்து நிறைவென பாராட்டி மகிழ்தலும் ஆசிரியர்களின் இயல்பு. எல்லாம் வல்ல இறைவனையே அடையாளம் காட்ட வல்லார்கள் ஆசிரியபிரான்கள். இதனால்தான் மாதா, பிதாவுக்குப் பிறகு குரு என்றார்கள் முன்னோர்கள். மாணவர்களின் நடை, உடை, பாவனை, ஒழுங்கு, ஒழுக்கம், நற்பண்பு, நற்செயல், கட்டுப்பாடு, பணிவு போன்ற ஒழுகலாறுகளைக் கற்று தகுதலே அவர்தம் அறிவை வளர்க்கும் செயலாகும். நாளின் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரம் பலதரப்பட்ட குணநலன்கள் பொருந்திய மற்ற மாணவர்களோடு பழகுகின்ற இடமாகிய பள்ளியில் ஆசிரியர்களின் மனச்சுமையும், பணிச்சுமையும் அதிகமே!
கல்வி என்பதற்கும், அறிவு என்பதற்கும் வேறுபாடு உண்டு.
தலைநகர் தில்லியில் சர்வதேசப் பள்ளியில் உயர் வகுப்பு மாணவன் தொடக்க நிலை வகுப்பு மாணவனை கத்தியால் அறுத்துக் கொன்றான். அவனிடம் கல்வி இருந்தது. ஆனால், அறிவு இல்லை.
சென்னையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் சரியாகப் படிக்கவில்லை என்பதை ஆசிரியை அடிக்கடிபெற்றோரிடம் சொல்லுகிறார் என்பதை மனதில்கொண்டு வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக் கொன்றான் ஒரு மாணவன். ஆசிரியையின் உயிர் போனது. மாணவனின் வாழ்வும் போனது. கல்வி இருந்த இடத்தில் அறிவு இல்லை. அண்மையில் கிராமப்புறப் பள்ளியின் 4 மாணவிகள் ஆசிரியர் தங்களைத் திட்டினார் என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்.
மாணவர்களை அவர்களது படிப்பில் கவனம் செலுத்தவும், படிப்பின் மேன்மை குறித்து அவர்களை சிந்திக்க வைக்கவும் சில நேரங்களில் ஆசிரியர்கள் சற்று கோபமாகப் பேசுவது இயல்புதான். இதனை ஒரு வசைமொழியாகவோ, இழிவாகவோ கருதிடாது, எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அதனில் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு என்பதை உணர்ந்துவிட்டால் மாணவப் பருவம் முழுவதும் இன்பமே.
கல்லில் உள்ள வேண்டாதவற்றை நீக்கினால் சிற்பம்; மரத்தைச் செதுக்கினால் மனித பொம்மை கண் சிமிட்டுகிறது. மாணவனின் மனக்கோணலை நிமிர்த்தினால் மாண்புறு மனிதன் எழுவான்.
அறிவை விசாலமாக்கி கருணை, இரக்கம், நட்புணர்வு, பணிவு, இன்சொலல் போன்ற அருங்குணங்களை வளர்க்கவல்ல விவேகக் கல்வியை, பண்புக் கல்வியை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். இது இன்றைய அவசரத் தேவை.
முன்னர் நீதிபோதனை என்றொரு வகுப்பு உண்டு. அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை உணரக் கற்றிருந்தால் மஞ்சள் உலோகத்திற்காக (நகைக்காக) பெற்ற அன்னையைக் கொலை செய்வானா?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. எழுத்து அறிவித்தவன் இறைவன், உழைத்து உண், பசித்த பின் புசி, தெய்வம் உண்டென்று இரு என்று வழங்கும் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றை வேந்தன் எல்லாம் வெற்றுச் சொற்கள்அல்ல. மந்திரச் சொற்கள். ''நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப'' என்பது முக்காலும் உண்மை.
''கிட்டாதன வெட்டென மற'' என்பதைப் படித்து உணராததால்தான், தான் விரும்பிய பெண் தன்னை மணம் செய்ய மறுத்தால் வெட்டுவதும், கொளுத்துவதும் நடைபெறுகிறது. தன் காதல் 'கைக்கிளை' என்பதை உணர மறுப்பதன் விளைவே!
அண்ணல் அம்பேத்கர் லண்டனில் படிக்கும்காலை 20 மணி நேரம் படிப்பாராம். முன்னாள் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கங்கையைக் கடக்க படகில் செல்ல காசு இல்லாததால் நதியை நீந்திச் சென்று கல்வி கற்றார் என்பது அவரது வரலாறு.
இப்படி பெரியவர்களின் மதிநுட்பம், மனத்திண்மை, மேன்மை இவைகளை நாளும் கற்றுப் புகழோடு வாழ, வாழ்க்கைக் கல்வியை-அறிவைப் பெறுதல் வேண்டும். பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை அற்றம் காக்கும் அறிவுப் பாடம் வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024