Monday, December 11, 2017

ஓய்வூதியர்களை அலைக்கழிக்காதீர்கள்... தமிழக அரசுக்கு வேண்டுகோள்

By தி. வேணுகோபால் | Published on : 11th December 2017 02:37 AM |



தமிழக அரசுப் பணிநிறைவுற்று ஓய்வூதியம் பெறுவோர், அவரவர் விருப்பப்படி, நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தோ அல்லது சென்னை நகரிலுள்ள ஓய்வூதிய அலுவலகம் (Pension Pay Office) அல்லது மாவட்டங்களிலுள்ள அரசுக் கருவூலம் வழியாகவோ தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். 

சென்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது மாவட்டக் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியமும், அவரவர்களின் வங்கிக் கணக்கில் உஇந முறையில் செலுத்தப்பட்டு, தேவைப்படும்போது பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறும்முறை கடந்த 1988-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பணிநிறைவு பெறும் அரசு ஊழியருள், நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போரே அதிகமாகும். பொதுத்துறை வங்கிகளின் சேவையைப் பெறுவது எளிதானதாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆண்டிற்கொருமுறை ஓய்வூதியர்கள் தாங்கள் உயிரோடிருப்பதற்கான சான்றிதழைத் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கருவூலம் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கியெனில் நவம்பர் மாதத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட வங்கிக் கிளையில் நேரடியாக ஓய்வூதியம் பெறும் ஒருவர் மிக எளிதாக இதனைச் சமர்ப்பித்துவிட முடியும். ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அவர் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையில் ஓய்வூதியம் நேரடியாகப் பெறுவோர் மிகச் சிலரே. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓய்வூதியரிடையே அவர் சிரமப்பட வேண்டும்.


ஓய்வூதியம் தொடர்பான குறைகளைச் சம்பந்தப்பட்ட வங்கிக்கிளை மேலாளரிடம் தெரிவித்துத் தீர்வு காண்பது எளிது. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை எதிர்பார்க்கவே இயலாது. அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்படுவது உறுதி.


கடந்த 2017 ஜூன் மாதத்தில் ஓர் ஓய்வூதியர் தன் உயிர்த்திருக்கும் சான்றை சமர்ப்பித்தபோது அச்சான்றிதழின் நகலில் அதனைப் பெற்றுக் கொண்டதற்கான ஏற்பறிப்பைத் தர அங்கிருந்த அரசு ஊழியர் மறுத்துவிட்டார்.


நிலைமை இவ்வாறிருக்க தற்போது அரசு, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை ரத்து செய்து அனைவருமே ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகவே ஓய்வூதியம் பெற வேண்டுமெனவும், இம்முறை இவ்வாண்டு இறுதிக்குள் அதாவது 31.12.2017-க்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆணை வழங்கியுள்ளது. (அரசாணை எண்.268, நிதித் (ஓய்வூதியம்) துறை நாள் 18.09.2017).
இவ்வாணை ஓய்வூதியர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இம்மாற்றத்திற்கான காரணங்களாக மேற்குறித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள குறைகள் பின்வருமாறு:


1. வங்கி ஊழியர்கள் ஓய்வூதிய விதிகள் குறித்து அறிந்திராததால், அவ்வப்போது அவர்கள் ஓய்வூதிய அலுவலகம் (அ) கருவூலகங்களிடம் விளக்கங்கள் கோருகின்றனர். ஓய்வூதிய ஆவணங்கள் வங்கிகளிடம் உள்ளதால் அவற்றைப் பெற்று விளக்கங்கள் வழங்குவது சிக்கலான நடைமுறையாக உள்ளது. 


2. ஓய்வூதியர் குடும்ப நலத் தொகைப் பிடித்தம் தொடர்பான விவரங்களை வங்கிகள் உரிய நேரத்தில் வழங்காததால், அவ்விவரங்களை ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்புவதில் தாமதம் நேருகிறது. 


3. உயிரோடிருப்பதற்கான சான்று ஓய்வூதிய அலுவலகம் மற்றும் கருவூலகங்களால் ஏப்ரல் - ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கிகளால் நவம்பர் மாதத்திலும் பெறப்படுவதால் ஓய்வூதியரிடையே குழப்பம் ஏற்படுகிறது. 


4.மாதந்தோறும் ஓய்வூதியச் செலவினம் மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கல், கூடுதல் ஓய்வூதியச் செலவினம் ஆகியவற்றைப் பல்வேறு வங்கிகளிடமிருந்து பெறுவதில் சிரமம் நேருகிறது. அவ்வாறே ஓய்வூதிய மிகைப் பற்றுப் பிடித்தம் மற்றும் வழங்கப்படாத ஓய்வூதியம் குறித்த விவரங்களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளன. 


5. ஓய்வூதியர் இறந்த பிறகும் அவருடைய கணக்கில் உள்ள வாங்கப்படாத ஓய்வூதியத் தொகை வங்கிக் கடனுக்குக் கழிக்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும். இறந்த பிறகு ஓய்வூதியரது கணக்கில் சேர்க்கப்படும் ஓய்வூதியத் தொகை அரசுக்குரியதாகும்.
மேற்கூறிய பிரச்னைகள் யாவும் நிர்வாகப் பிரச்னைகளாகும். அவை சில சிறு நடைமுறை மாற்றங்களின் மூலம் சரி செய்யப்படக் கூடியவையே. இனம் 5-இல் சொல்லப்பட்டுள்ள பிரச்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகப் பெறும் ஓய்வூதியர் இனத்திலும் நேரக்கூடியதே. ஓய்வூதியர் இறந்தது பற்றிய தகவல் கிடைக்குமுன் அவருடைய வங்கிக் கணக்கில் உஇந மூலமாகக் கருவூலம் செலுத்தும் தொகையும் வங்கியால் ஓய்வூதியரின் கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படுவது இயல்பான நடைமுறையே. எனவே அதற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை மாற்றுவது தீர்வாகாது. 


முப்பதாண்டுக்கால நடைமுறையில் உள்ள இம்முறையை மாற்ற வேண்டுமென ஓய்வூதியர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கங்களோ கோரிக்கை ஏதும் முன்வைக்கவில்லை. இம்முறை தங்களுக்குச் சிரமங்கள் தருவதாக ஓய்வூதியர்கள் யாரும் கூக்குரல் எழுப்பவில்லை. மாறாக ஆண்டுதோறும் பொதுத் துறை வங்கிகளிடம் நேரடியாக ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போர் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்கிறது.
மேலும் தற்போது அரசு ஆணை வழங்கியுள்ள நடைமுறை மாற்றத்தால் எழும் நிர்வாகப் பிரச்சினைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை.


மேற்கூறிய அரசாணையிலேயே, தற்போது சுமார் 79,114 ஓய்வூதியர்கள் நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிச்சுமை முழுவதும் இப்போது ஓய்வூதிய அலுவலகத்திற்கும் கருவூலங்களுக்கும் மாற்றப்படுகிறது. இப்பணியை மேற்கொள்ள அங்குப் பணியாளர்கள் உள்ளனரா அல்லது கூடுதல் பணியாளர்கள் வழங்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காத சூழ்நிலையில் அரசு ஏன் இப்பணிச் சுமையை ஏற்கத் துடிக்கிறது என்பது தெரியவில்லை.


அரசாணையில் கூறப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், நடைமுறையை மாற்றுமுன் ஓய்வூதியர்களின் விருப்பத்தை அறிவதும் அரசின் கடமையாகும். ஓய்வூதியர்கள் விரும்பாத நிலையில் இந்நடைமுறை மாற்றம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதோடு அவர்களையும் மூத்த குடிமக்களையும் போராட வீதிக்கு அழைத்து வரும் என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

பணி ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் (காவல்துறை).

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...