Wednesday, December 20, 2017

கொள்ளையனை விரட்டிச் சென்று உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் குடும்பம் இப்போது எப்படியிருக்கிறது?

சென்னைப் பட்டினப்பாக்கத்தில் கொள்ளையனைப் பிடிக்க விரட்டிச் சென்றதில் உயிரிழந்த ஆசிரியை நந்தினி இறந்து இன்றோடு ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவரை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பம் இப்போது எப்படி இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பட்டினப்பாக்கம் சென்றேன்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்துக்குள் நுழைந்ததும் அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று நந்தினி வீடு எங்க இருக்குனு கேட்டேன். நந்தினியைப் பற்றி எந்த விளக்கமும் நான் சொல்லவில்லை. நந்தினினு சொன்ன உடனேயே நான்தான் நந்தினியோட சித்தப்பானு ஆட்டோக்காரர் ஒருவர் சொன்னார். அவரே எங்களை நந்தினி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நந்தினியின் வீடு தாழிடப்பட்டு இருந்தது. போனில் விசாரித்து விட்டு நந்தினியின் அம்மா வீட்டு வேலைக்குப் போயிருக்காங்கம்மா பார்த்துப் பேசிக்கோங்கனு சொல்லி அங்கே விட்டுட்டுப் போனார். நந்தினியின் அம்மாவை போனில் அழைத்து அவருக்காக நாங்கள் காத்திருப்பதை தெரிவித்தேன். இரண்டு மணி நேரம் நந்தினி அமர்ந்து சிரித்துப் பேசிய அவரது வீட்டு வாசலில் அவருடைய அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

நந்தினியின் அம்மா வந்தவுடன் நந்தினியின் வீட்டிற்குள் எங்களை அழைத்துச் சென்றார். நந்தினி உயிரோடு இருக்கும்போது அவரது வீட்டை எந்த அளவிற்கு விருப்பப்பட்டு கட்டினாரோ அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் அந்த வீடு இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் எதிரிலே இருந்த நந்தினியின் புகைப்படம் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அமைதியாய் நந்தினியின் அம்மாவுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவராகவே முன்வந்து பேசத் தொடங்கினார்.



"நான் பொறந்து, வளர்ந்தது எல்லாமே இந்தக் குப்பத்துலதான். ஆசைப்பட்டு காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆரம்பத்துல அவர் எங்க மேல அன்பாதான் இருந்தார். எப்போ குடிக்கு அடிமையானாரோ அப்போ இருந்து எங்களுக்குள்ள சண்டைதான் நீண்டு கடந்துச்சு. எனக்கு எல்லாமே என் புள்ளைங்கதான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பசங்களை நல்லா படிக்க வெச்சிடணும்னு நினைச்சேன். அதை மாதிரி என் மவள எம்.சி.ஏவும், மவன பி.காமும் படிக்கவெச்சேன். என் பசங்க என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவேன். எனக்கு என் பொண்ணுதான் உலகம். அரசுப்பள்ளியிலதான் படிக்கவெச்சேன். ஆனாலும், என் மவ அவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுவா. அவ பேசுறதை கண் இமைக்காம பார்த்துட்டே இருப்பேன். 'சேலைகட்டி பூ வெச்சிக்கோ அம்மை'னு சொல்லிட்டே இருப்பேன். ஒரு தடவை சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக அவளை வற்புறுத்தி சேலை கட்ட வெச்சி போட்டோ பிடிச்சேன். அந்த போட்டோதான் அவ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முழுக்க இருக்கப் போகுதுன்னு தெரியாம போச்சே என்று கண்ணீரை அடக்க முடியாமல் ஓலமிட்டு அழுதவரை பக்கத்தில் அமர்ந்து அவரது கரம்பற்றி தேற்றினேன்.

படிப்பு முடிஞ்ச கையோட நந்தினிக்கு வேலை கிடைச்சிட்டு. அவ ரொம்ப திறமையான பொண்ணு. வீட்டை விட்டு எங்கயுமே போக மாட்டா. மத்த புள்ளைங்க மாதிரி போனும் கையுமாலாம் இருக்கவே மாட்டா. வீட்டுக்கு வந்துட்டா என் கூடதான் மணிக்கணக்கா பேசிட்டு இருப்பா. அப்போ நான் மூணு வூட்டுக்கு வேலைக்குப் போவேன். 'அம்மை உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்குனு' சொல்லுறப்பலாம் நம்ம நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லியே என் வாயை அடைச்சிட்டா. நான் அவளுக்கு அம்மா இல்ல; அவதான் என்னுடைய அம்மா. என்னை அவ்வளவு நல்லா பார்த்துப்பா. எனக்கு ஏதாச்சும்னா துடிச்சுப் போயிடுவா. கொஞ்ச நாள் கழிச்சு என்னுடைய சம்பளம் அதிகமாகிடும் அதுக்கப்புறம் நீ வேலைக்குப் போக வேண்டாம் நானே குடும்பத்தைப் பார்த்துக்கிறேனு சொன்னா. அவ இருந்தப்ப மூணு வூட்டுக்கு வேலைக்குப் போய்ட்டு இருந்தேன் இப்போ ஏழு வூட்டுக்கு வேலைக்குப் போறேன் என் அம்மை இல்லாததால ஒரு வேளை சாப்பாடுக்கே பாடுபட வேண்டியிருக்கு எனக் கண்ணீர் ததும்ப பேசியவரை தேற்ற தெம்பில்லாமல் தலைகுனிந்தேன்.

"அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. வீடே கலகலணு இருந்துச்சு. எங்க வூட்டுல பத்துப் பேருக்கும் மேல சிரிச்சுப் பேசிகிட்டு இருந்தோம். சாயங்காலம் கட்டில்ல படுத்துகிட்டு அவ தம்பிகிட்ட பேசிகிட்டு இருந்தா. அம்மை கல்யாணம் பண்ணிக்கோனு எப்பவும் சொல்ற மாதிரி தான் சொன்னேன். இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே சரி இந்த வருஷம் பண்ணிக்கிறேனு சொன்னா. அன்னைக்கு நாள் முழுக்க அவ முகத்துல சந்தோசம்தான் நிரம்பியிருந்துச்சு. எப்பவும் இல்லாம அன்னைக்கு என் கண்ணுக்கு ரொம்பவே அழகா தெரிஞ்சா. அசையாம அவளையே பார்த்துட்டு இருந்தேன். என்னம்மா என்னைப் பார்த்துட்டே இருக்குறனு கேட்டா. என்னனு தெரியல அம்மை இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கனு சொன்னேன். அன்னைக்குதான் என் மவ இந்த உலகத்தைவிட்டு போகப் போறானு எனக்குத் தெரியாம போச்சு. நந்தினி நைட்டி போட்டு இருந்தா எங்கையும் போக மாட்டா. அன்னைக்கு அவளுடைய அத்தை மவ காயத்ரி கூட வாசல்ல உட்கார்ந்து பேசி சிரிச்சிட்டு இருந்தா. நாளைக்குச் சீட்டுக் கட்ட காசு வேணும்ல நான் போய் ஏ.டி.எம் ல காசு எடுத்துட்டு வந்து சாப்பிடுறேனு சொல்லிட்டு வேகமா டிரெஸ் மாத்துனா. நான் அவள போணும் சொல்லல.. போகாதணும் சொல்லல. அவ வாசல்ல பேசிகிட்டே ஏ.டி.எம் ல காசு எடுக்கப் போயிருக்கா.

ஒரு வார்த்தை என்கிட்ட போய்ட்டு வரேனு கூட சொல்லல. அம்மையைக் காணம்னு கேட்டப்போதான் என் மவன் அவ ஏ.டி.எம் வரைக்கும் போயிருக்கானு சொன்னான். சரி, தோசை சுட்டு வைக்கலாம்னு எழுந்து மாவுதான் எடுத்துவெச்சேன். அதுக்குள்ள ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுனு சொன்னாங்க. என்ன நடக்குதுன்னே தெரியாம ஓடுனேன். அழகா இருக்குற அம்மைனு சொன்ன மவளா இப்போ பொணமா கிடக்குறானு உறைஞ்சு போயிட்டேன் தாயி"னு தலையில் கை வைத்திருந்தவர் நந்தினியின் பழைய புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டினார்.

"இந்த வீடு ஒரே ஒரு குடிசையாதான் இருந்துச்சு. நாலு வருசம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நானும், நந்தினியும் சேர்ந்துதான் இந்த வீட்டை கட்டுனோம். நந்தினி குப்பத்தைச் சேர்ந்த பொண்ணுன்னு அவ நண்பர்கள் யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவளுடைய நடவடிக்கை இருக்கும். நான் வீட்டு வேலை பார்க்குறவங்க கொடுக்குற டிரெஸ்தான் நந்தினி போட்டுப்பா. அவ சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தான் அவளுக்குன்னு டிரெஸ் எடுக்க ஆரம்பிச்சா. அவளுக்கு அவ தம்பின்னா உசுரு. அவன் அடம்பிடிச்சான்னு வட்டிக்குக் காசு வாங்கி ஒன்றரை லட்சத்துக்கு பைக் வாங்கிக் கொடுத்தா. ஆனா, அந்த பைக்கை அவன் தொலைச்சிட்டானு தெரிஞ்சும் அவன் மேல கோபப்படாம விடுமா தம்பியை எதுவும் சொல்லாதனு என் வாயைக் கட்டிப்போட்டுட்டு கவலைப்படாத தம்பி வேற வண்டி வாங்கித் தரேன்னு அவனுக்கு சப்போர்ட்டா நின்னா. வண்டி போனதுக்கே வருத்தப்படாத அவ அந்தப் பணத்தையும் போனா போகுதுன்னு விட்டுருந்தா இன்னைக்கு உசுரோட இருந்துருப்பாளே" என்றவருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளின்றி மெளனமாய் கரைந்தேன்.



"என் பொண்ணு செத்து ஒருவருசத்துக்கு மேல ஆகியும் இன்னைக்கு வரைக்கு அவளுடைய வண்டி எங்க வூடு வந்து சேரல. எல்லாத்துக்கும் அலைஞ்சு திரிஞ்சு வாங்குற அவளே போய்ட்டா. அவளுக்கு மேல என்ன இருக்குன்னு நாங்களும் விட்டுட்டோம். இப்போ எங்க குடும்பமே சின்னாப்பின்னமா போச்சு. என் புருஷன் கூட சண்டை போட்டுட்டேன். அவர் இப்போ வூட்டுக்கு வர்றது இல்ல. நானும், என் மவனும்தான். என் அம்மை இறந்ததுக்கு நஷ்டஈடா அரசாங்கம் கொடுத்த மூணு லட்ச ரூபாயை வெச்சு எல்லா கடனையும் அடைச்சிட்டேன். நந்தினி இறந்து போகுறதுக்கு முன்னாடி வரைக்கும் அவளுடைய தம்பி வேலை பார்த்துட்டு இருந்தான். இப்போ அவனுக்கு ஒரு நல்ல வேலை அமையல. அதுனால வூட்டுலதான் இருக்கான். அவனுக்காகத்தான் நிக்காம ஓடிட்டே இருக்கேன். நின்னுட்டே வேலை பார்க்குறதுனால கால் பயங்கரமா வீங்கிடும். ஆனாலும், அந்த வலியைத் தாங்கிட்டுதான் வேலை பார்ப்பேன். ஏன்னா, நான் ஒருநாள் வேலைக்குப் போகலனா என் வூட்டுல அடுப்பு எரியாது. எங்க வூட்டு குலசாமியா இருந்து எங்களை கவனிச்சிட்டு இருந்த உசுரும் எங்களை விட்டுட்டு போயிடுச்சு. என் புள்ளை வயசுக்கு வரும்போது அவளை குளிப்பாட்டிவிட்டதுக்கு அப்புறம் அவளுடைய பொணத்தைதான் குளிப்பாட்டுனேன். என்னை அம்மா மாதிரி பார்த்துகிட்ட என் அம்மை என்னை விட்டுட்டு போயிட்டா. இனி இந்த உசுரு இருந்து என்ன பண்ண போகுது.. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு கடவுள் என்னுடைய மொத்த சந்தோசத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போயிட்டாரு போல"னு அவர் சொல்லும்போது எதுவும் பேச தெம்பில்லாதவலாய் நந்தினியின் புகைப்படத்தைப் பார்த்தேன்.



நந்தினியின் உயிரைப் பறித்த டாஸ்மார்க் கடை இன்று பேக்கரியாக மாறியுள்ளது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு ஓர் உயிரைப் பணையம் வைக்க வேண்டுமா என்கிற கேள்வியும், அவருடைய இறப்பினால் தவிக்கும் அவரது அம்மாவின் முகமும் என்னுடைய இரவு தூக்கத்தைக் கொன்றது.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024