Wednesday, December 20, 2017

10 லட்சம் முதல் 50 லட்சம் வரை.. முதல்முறையாக புற்றுநோயாளிகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி! #LICCancerCover



 #LICCancerCover

`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...' என்று சொன்ன காலம் போய், `நோய் நொடியில்லாத மனிதர்களைக் காண்பதரிது' என்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலாலும், புதிய உணவுப் பழக்கங்களினாலும், புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த வயது, அந்த வயது, ஏழை, பணக்காரர் என்கிற பாரபட்சம் இல்லாமல் யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்பதே தெரியவில்லை. உடல்நலக் குறைகளை மட்டும் ஏற்படுத்தும் நோய்கள் என்றால், ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம். உயிரைக் கொல்லும் நோய்கள் என்றால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவரை நம்பியிருக்கும் குடும்பமும் நிலைகுலைந்து போகும். உலகளவில், மனித இறப்புக்கான முக்கிய காரணங்களில் எய்ட்ஸ், மாரடைப்பு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது 'புற்றுநோய்.'

உலக சுகாதார நிறுவனம் 2012 -ம் ஆண்டு உலகளவில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில், அந்த ஆண்டு மட்டும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சம் பேர். அவர்களில், இறந்து போனவர்களின் எண்ணிக்கை 82 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆண்களைவிடப் பெண்களைத்தான் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் ஒரு லட்சம் பெண்களில், 43,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. `இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது' என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் எந்த வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும், நடவடிக்கைகளும் உலகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் மட்டுமின்றி, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் புற்றுநோய் ஒழிப்பில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் மிகத் தீவிரமாக இயங்கிவருகின்றன.



அந்த வகையில் தற்போது இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி, (லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) புற்றுநோய்க்காக மட்டுமே, `எல்.ஐ.சி'ஸ் கேன்சர் கவர்' (LIC's Cancer Cover) என்கிற ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய இன்ஷூரன்ஸ் பற்றி எல்.ஐ.சி-யின் தெற்கு மண்டல மேலாளர் தாமோதரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்...

"புற்றுநோய், திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு நோய். ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், முதலில் மனதளவில், உடலளவில் பாதிக்கப்படுவார். சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பின்னர் பொருளாதாரரீதியாக அதிகமாகப் பாதிக்கப்படுவார். சொத்தை எல்லாம் விற்று ,சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல்கூட வரும். தன் குடும்பத்துக்காக, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேர்த்த பணத்தையெல்லாம் சிகிச்சைக்குப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

இதைத் தவிர்க்கும்விதத்தில், எல்.ஐ.சி-யில் முதன்முறையாக ஒரு நோய்க்காக மட்டும் தனியாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இது மெடிக்ளெய்ம் திட்டம் போன்றது அல்ல. மெடிக்ளெய்ம் திட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட நோய்க்காக செலவழித்த பில்களை சமர்ப்பித்தால் அதற்குண்டான பணம் கிடைக்கும். செலவழித்த தொகை மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் அப்படி அல்ல. பாலிசி எடுத்துக்கொண்ட ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டாலே, இன்ஷூரன்ஸ் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையிலோ, தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்கூட அதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

இந்தத் திட்டத்தில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், 10 லட்சம் முதல் 50 லட்ச ரூபாய் வரை பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுக்கும்போது, அவர் புற்றுநோயால் பாதித்தவராக இருக்கக் கூடாது. பாலிசி எடுத்து, காத்திருப்புக் காலமான 180 நாள்கள் முடிந்த பின்னர் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது நோயின் ஆரம்பநிலை என்றால், பாலிசியின் மொத்தத் தொகையில் இருந்து 25 சதவிகிதம் அவருக்கு வழங்கப்படும். உதாரணமாக, 10 லட்ச ரூபாய் பாலிசி என்றால் 2.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். அதோடு, அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தவேண்டியது இல்லை. புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால், சரியாக மூன்று ஆண்டுகளுக்குள் குணப்படுத்தி விடலாம் என்கிற மருத்துவ அறிவியலைக் கணக்கில்கொண்டு இந்த மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுகிறது.

புற்றுநோயின் முற்றிய நிலை என்றால், மொத்தத் தொகையும் அப்படியே வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அதற்கடுத்த பத்து வருடங்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து ஒரு சதவிகிதத் தொகை, மாதா மாதம் உதவித்தொகையாக வழங்கப்படும். உதாரணமாக 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.



ஏற்கெனவே, மெடிக்ளெய்ம் திட்டத்தில் இருப்பவர்களும் இந்தப் பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும். பிரீமியம் காலம் முடிவதற்குள் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், செலுத்திய தொகை ஏதும் திருப்பித் தரப்பட மாட்டாது.

20 வயதுடைய ஒருவர் பத்து லட்ச ரூபாய்க்கான ஒரு பாலிசியை எடுத்திருந்தால் வருடத்துக்கு ரூ. 2,400 செலுத்த வேண்டும். 20 லட்ச ரூபாய்க்கும் 2,400 ரூபாய்தான் . 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால் வருடத்துக்கு ரூ.5,428 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் தொகையை ஆண்டு பிரீமியமாக அல்லது ஆறு மாத தவணையாகச் செலுத்தலாம்.

அண்மைக்காலமாக, புற்றுநோய் பெண்களை அதிகமாகப் பாதிப்பதால் பெண்களுக்கு பிரீமியம் தொகை சற்று அதிகமாக இருக்கிறது. 20 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் மொத்தத் தொகைக்கு ஆண்டுக்கு 2,400 ரூபாயும், 50 லட்ச ரூபாய் என்றால், ஆண்டுக்கு 9,086 ரூபாயும் பிரீமியமாகச் செலுத்த வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். அதிகபட்சமாக 75 வயது வரை இதன் பலன்களை அனுபவித்துக்கொள்ள முடியும்.

மது குடிப்பதால், புகை பிடிப்பதால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. நம் மூதாதையார் வழியாகவும், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (Carcinogens) இந்த நோய் பரவுகிறது. `நமக்குத்தான் கெட்ட பழக்கங்கள் இல்லையே...' என்று யாரும் புற்றுநோயை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. அனைவருமே இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். ஆன்-லைன் மூலமாகவே இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.



இந்தியா முழுக்க, இது வரை 5,000 பாலிசிகள் இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. தென்னகப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்து எதிர்காலம் குறித்த பயமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்'' என்கிறார் தாமோதரன்.

இந்த பாலிசி குறித்த மேலும் விவரங்களுக்கும் தகவல்களுக்கும் இந்த லிங்க்கைப் பார்க்கவும்...
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024