Wednesday, December 20, 2017

வந்த வீட்டுக்கு வஞ்சனை பண்ணாதீங்க சனீஸ்வரா... வாட்ஸ்அப்பில் வைரல் லெட்டர்

சென்னை: சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இந்த இடப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எங்கள் மீது கருணை காட்டுக்கள் சனீஸ்வரா என்று எழுதப்பட்ட கடிதம் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

அன்புள்ள சனீசுவரனார்க்கு...

எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.
புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.
உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.
உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.
புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.
இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.
ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.
வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.
அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம்.
அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ?
பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன.
உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.
பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் ஆகாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.
காணாமல் போனவர்களைக்கூடக் கண்டுபிடித்துத் தராத அரசுபோல் ஆளும் ஓர் அரசின் கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.
உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.
எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ?
எங்களைப் பார்த்தால் 'இரண்டு வீக்கு வீக்குவோம்' என்றா உமக்குத் தோன்றுகிறது ?
ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல 'ஔ' என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ?
இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள் ?
போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.
வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.
இங்ஙனம்
சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்கள்.

source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024