Monday, December 18, 2017

மருத்துவ கவுன்சலிங்கில் அபராதம் வசூலிப்பது தீர்வாகுமா?

சக்தி தமிழ்ச்செல்வன்

இன்றைய சூழலில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுவருகின்றன. இதற்கிடையே அரசும் கல்வியாளர்களும், எளிய மக்களுக்கும் அந்தப் படிப்புகள் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். மருத்துவக் கல்வி போன்ற உயர்கல்வியைப் படிக்க, நுழைவுத்தேர்வு, கவுன்சலிங் முறை எனப் பல நிலைகளைக் கடந்தபிறகுதான் சீட் வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ கவுன்சலிங் முறையில் சில பிரச்னைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.



‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கவுன்சலிங், மாநில அரசு நடத்தும் கவுன்சலிங், மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கவுன்சலிங் எனப் பல்வேறு கவுன்சலிங்களுக்குப் பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சில மாணவர்கள், தகுதியிருக்கும்பட்சத்தில் நிகர்நிலைக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் மற்றும் அரசு நடத்தும் கவுன்சலிங் என இரண்டிலும் கலந்துகொள்கிறார்கள். இப்படித் தனித்தனியாகச் சேர்க்கை முறை பின்பற்றப்படுவதால், தரவரிசைப் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிகர்நிலைக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தேர்வுசெய்து முடக்கிவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு பின்வரிசையில் உள்ள மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்காமல்போகின்றன. பிறகு சிறந்த அரசுக் கல்லூரியில் கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு, மற்ற நிகர்நிலைக் கல்லூரி இடங்களை விட்டுவிடுகிறார்கள். இதனால், அந்த இடங்கள் காலி இடங்களாகிவிடுகின்றன. பல சுற்றுகளுக்குப் பிறகே அவை நிரப்பப்படுகின்றன. இதனால் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்டுகிறது' என, பல்கலைக்கழகங்களின் தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘மத்திய அரசு சேர்க்கை நடத்தும் மருத்துவ, பல் மருத்துவ இடங்களுக்குப் பதிவுக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சலின் ஒப்புதலுடன் மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. தனியார் மற்றும் நிகர்நிலைக் கல்லூரி இடங்களுக்கு இந்தப் பதிவுக் கட்டணம் இரண்டு லட்சம் ரூபாயாகவும், அரசு இடங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும்.

தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்ளும் மாணவருக்கு, கல்விக் கட்டணத்தில் அந்தப் பதிவுக் கட்டணம் கழித்துக்கொள்ளப்படும். ஒருவேளை, அவர் வேறு கல்லூரிகளில் தேர்வுசெய்த இடத்தை ஏற்றுக்கொண்டு இந்த இடத்தை நிராகரித்துவிட்டால், அவருக்கு அபராதமாக. பதிவுக் கட்டணம் திருப்பித்தர மாட்டாது.

அத்தகைய மாணவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழக்கவேண்டியிருக்கும். மேலும், மேற்கொண்டு அவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்க தடை விதிக்கப்படும். இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படும். எல்லாக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த கவுன்சலிங் நடத்தினால்தான், மருத்துவ இடங்களை முடக்கும் பிரச்னையைத் தீர்க்க முடியும்' என்று தகவல் வெளியாகியுள்ளது.



சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம். “இதுபோன்ற காலி இடங்கள் ஏற்படுவதற்குக் காரணம் அரசின் கவுன்சலிங் முறைதான். அரசுக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங்கை முதலில் நடத்திவிட்டு, பிறகு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கவுன்சலிங்கை நடத்தும்போதுதான் இதை சரிசெய்ய முடியும். அதேபோல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடைசி நேரத்தில் தங்களுக்கான காலி இடங்களை தாங்களே நிரப்பிக்கொள்ள அரசு அனுமதித்துவிடுகிறது. அவ்வாறு இல்லாமல், அரசே முழுமையாக கவுன்சலிங்கை நடத்த வேண்டும். இதற்கேற்ப சட்டம் கொண்டுவரும்பட்சத்தில் காலி இடங்கள் இருக்காது.

இதில் நாம் மற்றொரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். இந்தக் காரணத்தால் மட்டுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சீட் காலியாவதில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கான எல்லா வசதிகளும் உள்ளன. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்த வசதிகள் இருக்குமா என்ற அச்சம் மாணவர்களிடையே உள்ளது. அதைத் தாண்டி அங்கு வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், அரசால் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை என்பதும் மிக முக்கியக் காரணம்" என்றார்.

மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து அவரிடம் கேட்டபோது, “பாண்டிச்சேரியில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அதுபோல மத்திய அரசு செய்வது ஏழை மாணவர்களுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்தப் பல்கலைக்கழகக் காலி இடங்களை நிரப்பும் வழி அரசிடம் உள்ளது. அதைவிடுத்து மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது முறையானதாக இருக்காது" என்றார்.

மருத்துவம் படிப்பது என்பது, இன்றும் பலருக்கும் மாபெரும் கனவாகவே இருந்துவருகிறது. அதுவும் தனியார் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை, போதிய வசதியின்மை போன்ற பிரச்னைகளும் இருப்பதால், மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் வெகுவாகவே உள்ளது. அதைப் போக்க, அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். கல்வியை மட்டுமே தன் செல்வமாக நம்பி இருக்கும் கடைக்கோடி மாணவனுக்கு, அரசு சரியான திசையைக் காட்டவேண்டுமே தவிர, அபராதம் வசூலிப்பது மட்டுமே தீர்வாகாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024