Monday, December 18, 2017

கவலைக்கிடமாகும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்..!

By எஸ். வைத்யசுப்பிரமணியம் | Published on : 18th December 2017 02:34 AM |

எனது மாணவர்களிடமிருந்தும் நலம் விரும்பிகளிடமிருந்தும் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளால் எனது அலைபேசி இறுதியில் செயலிழந்துவிட்டது. அவர்கள் அனைவரது கேள்வியும் ஒன்றுதான்.

""நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகம் என்று தங்களை அறிவித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டதே, இனி என்ன ஆகும்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுவரை வழங்கிய பட்டங்கள் செல்லாமல் போய்விடுமா? இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?''

இதுவே அனைவரது கேள்விகளின் அடிநாதம். இதுவரை வழங்கப்பட்ட பட்டங்கள் மட்டுமல்ல, வழங்கப்படுகிற பட்டங்களும், இனிமேல் வழங்கப்போகும் பட்டங்களும், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தின் பிரிவு 22-இன் படி செல்லுபடியாகும் என்பதே எனது பதில். இதைப் புரிந்துகொள்ள இதன் கடந்த கால வரலாற்றை நாம் அறிந்தாக வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த முதல் கல்வி ஆணைய அறிக்கையில் (1948-49) நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஓர் அத்தியாயமே இருந்தது. அதில், பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நெறிமுறைகளை வடிவமைக்குமாறு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதிலும், பிற நாடுகளில் எவ்வாறு பல்கலைக்கழகங்கள் சட்டரீதியான செயல்பாடாக அல்லாமல், அரசுத் தலைமையின் அனுமதியுடன் நிறுவப்படுகின்றன என்பதைப் பரிசீலிக்குமாறும் கூறப்பட்டது.
அதுவே, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற கருத்து பிறக்கக் காரணமானது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பெயர் சூட்டுவதைத் தீர்மானிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுமாறும் கல்வி ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாது போய்விட்டது. 

அதேசமயம், உலக அளவிலான கல்வி நிறுவனங்களிலிருந்து எழுந்த நிர்பந்தம் காரணமாக, நமது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்போது பல்கலைக்கழகங்களாக மாறும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. ஏதாவது ஒரு வகையில் இதை சரிப்படுத்தியாக வேண்டியிருந்தது. 

1984 -இல் பிரேம் சந்த் ஜெயின் (எதிர்) ஆர்.கே.சாப்ரா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்த பிரச்னையை விவாதித்தது. அப்போது, யுஜிசி சட்டத்தின் பிரிவு-23ஐ திருத்தம் செய்ய வேண்டுமா, அல்லது மறுவிளக்கம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

அதையடுத்து, மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், யுஜிசி தலைவர், அனைத்திந்திய தொழிற்கல்விக் கூட்டமைப்பின் (ஏஐசிடிஇ) தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு யுஜிசிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அந்தக் குழு, "பிரத்யேக விதிகளின்கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பொது பல்கலைக்கழகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதால், அவை தங்களை பல்கலைக்கழகம் என்று அழைத்துக் கொள்ளலாம்' என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், 2006 செப்டம்பரில் யுஜிசி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பெயரில் பல்கலைக்கழகம் என்று பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. 

முடிந்துபோன விஷயம் என்று கருதப்பட்ட இந்த விஷயம், ஒரிஸா லிஃப்ட் இரிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (எதிர்) ஸ்ரீ ரபிசங்கர் பாட்ரோ வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவம்பர் 3-இல் தீர்ப்பளித்தபோது புதிய பரிமாணம் பெற்றுவிட்டது. அதனால் புதிய சர்ச்சையும் தோன்றிவிட்டது.

அந்த வழக்கு சேவை விவகாரம் தொடர்பானது மட்டுமே. குறிப்பாக தொலைநிலைக் கல்வி வாயிலாக பொறியியல் பட்டங்களைப் பெற முடியுமா என்பது குறித்த வழக்கு அது. இந்தியாவிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நான்கில் மட்டுமே இருந்த பிரச்னை அது. மீதமுள்ள 120-க்கு மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்த வழக்கு அல்ல அது. அதாவது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பானதல்ல அந்த வழக்கு. அதேசமயம், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பாக மேலும் சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதையும் கூறியாக வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது, பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று யுஜிசி ஏற்கெனவே அளித்த அனுமதியையும், அதற்கு வித்திட்ட பிரேம் சந்த் ஜெயின் வழக்கு விவரத்தையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக அறிந்திருந்ததா என்பது ஐயமாக உள்ளது. பிரேம் சந்த் ஜெயின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த சுதந்திரம்தான், யுஜிசியின் பல்கலைக்கழகப் பெயரிடல் குறித்த இணக்கமான உத்தரவுக்கு காரணமானது. அதுமட்டுமல்ல, பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கை (2001) தற்போதைய வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காணுமாறும் உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்த விரும்பிய சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங்களும் சங்கங்களும் உச்ச நீதிம ன்றத்தை அணுகின. சட்டத்தை உருவாக்கியவர்கள் அதற்குப் புதிய விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தாலும், அது அடிப்படை அம்சத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக் கூடாது என்ற அம்சத்தின் அடிப்படையில் அவர்களது மனு அமைந்தது. 

சட்டத்தின் காரண விளக்கம் (2007) பற்றி இஸ்ரேலிய சட்ட மேதை அஹாரன் பராக் கூறிய காரணத்துடன் கூடிய சட்ட நிறுவுதலை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (எதிர்) நுஸ்லி நெவிலி வாடியா வழக்கில் (2008) உச்ச நீதிமன்றம் பாராட்டியது. அதேபோல, யுகோ வங்கி (எதிர்) ராஜீந்தர் லால் கபூர் வழக்கில் (2008), "காசஸ் ஆமிசஸ்' (சட்டப்படி ஏற்கத் தேவையில்லாத) கொள்கைகளையும் உச்ச நீதிமன்றம் பாராட்டியது. அதற்கு, ம.பி. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.பி.சிங்கின் விளக்கம் மேற்கோளாகக் கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்  பட்டன. 

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் பயனிழந்தன; அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. எனவே, நவம்பர் 3-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, எந்தத் திருத்தமுமின்றி நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய கண்காணிப்புத் திட்டத்தையும் கட்டுப்பாட்டு விதிகளையும் உருவாக்க குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். 

இதுவரை நடந்த கதை இதுதான். தற்போதைய சூழலில், இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விதிமுறைகளை உருவாக்க வேண்டிய மத்திய அரசு மற்றும் சட்டரீதியான அமைப்புகளான யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை முன்பு கீழ்க்கண்ட வாய்ப்புகள் உள்ளன:

செயல் 1: உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட "ஆபிட்டர் டிக்டா'வை (வழக்கிற்குத் தொடர்பின்றி, போகிறபோக்கில் கூறும் கருத்து) பரிசீலிக்கும்போது, 1956-ஆம் வருடத்திய யு.ஜி.சி. சட்டத்தின் 23-ஆம் பிரிவில் திருத்தம் செய்வதும், யு.ஜி.சி. சட்டத்தின் 3-வது பிரிவைப் பயன்படுத்தி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பதும் அவசியமாகி உள்ளன.

செயல் 2: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொறியியல் பட்டங்கள் விஷயத்தில், அவை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன் துவக்கப்படாது இருந்தால் மட்டுமே, ஏ.ஐ.சி.டி.இ. ஒப்புதலுக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

தற்போதைய வழக்கில் இது உச்ச நீதிமன்றத்தால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. தற்போதுவரை, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை உறுப்புக் கல்லூரியாகச் சேர்க்க ஏ.ஐ.சி.டி.இ. சட்டத்தில் இடமில்லை. இதனை பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. 

செயல் 3: யு.ஜி.சி.யால் உத்தேசிக்கப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக சுயஆட்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிய குழு செயல்பட வேண்டும். அது, நல்ல முறையில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், தவறிழைப்போரை மட்டும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது உச்ச நீதிமன்றம் யு.ஜி.சி.க்கு இட்ட உத்தரவுடனும் ஒத்துப்போகும். 

இறுதிப் பரிந்துரை: சட்டத் திருத்தங்கள் ஆசுவாசம் அளிக்க வேண்டுமே தவிர, கழுத்தை நெரிப்பதாக இருந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் அபிவிருத்தித் துறை டீன்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...