ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் இந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வே பிளவுபட்டு சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரம் ஓய்ந்தநிலையில், ஏப்ரல் 9-ந் தேதி இரவில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பெருமளவில் பண வினியோகம் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்ததுதான் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாகும். மீண்டும் கடந்த 21-ந் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடந்தது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மீண்டும் மருதுகணேசும் போட்டியிட்டனர்.
அடிக்கடி தேர்தல் நடந்து வருவதால் இந்த தொகுதி மக்கள் சலிப்பு அடையவில்லை, மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். வழக்கமாக தேர்தலின்போது வன்முறைகள் நடைபெறும், வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும். ஆனால் இந்த தேர்தலில் அப்படி எந்த வன்முறைகளோ, தேர்தல் தகராறோ, சண்டை சச்சரவுகளோ இல்லாமல் அமைதியாகவே நடந்தது. பணமழை பொழிகிறது என்று அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் சொன்னாலும், பொதுமக்களிடம் இருந்து புகார் வரவில்லை. பெரிய அளவில் பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. 28 லட்ச ரூபாய்தான் பறிமுதல் செய்யப்பட்டது. 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலை நிறுத்தக்கூடிய அளவில் எந்த புகார்களும் நிரூபிக்கப்படவில்லை. காரணங்கள் ஆயிரம் கூறினாலும், தேர்தல்முடிவை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயக கலாசாரம். இதற்கு பிறகு நடக்கப்போவதை அரசியல் உலகில் இனிதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment