Wednesday, December 20, 2017

மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை: சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் தகவல்

By DIN  |   Published on : 20th December 2017 03:48 AM  

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைச் சந்திக்கவில்லை என சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் டீன் டாக்டர் எம்.கே.முரளிதரன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் டீன் டாக்டர் எம்.கே. முரளிதரன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். 

அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, டாக்டர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்ட மருத்துவரீதியான சந்தேகங்களுக்குப் பதிலளித்தேன். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் அவரைச் சந்திக்கவும் இல்லை; அவருக்கு மருத்துவம் பார்க்கவும் இல்லை. அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் அளிக்கவில்லை என்றார் அவர்.

இன்று விசாரணை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், வழக்குரைஞர் ஜோசப் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்தது. 

இதையடுத்து, ஷீலா பாலகிருஷ்ணன் புதன்கிழமையும் (டிச. 20), ராமமோகன ராவ் வியாழக்கிழமையும் (டிச. 21) ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். 

மேலும் 302 புகார் மனுக்கள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆணையத்தில் ஏற்கெனவே 120 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. 28 பேர் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட 302 புகார் மனுக்களும் விசாரணை ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த மனுக்களை ஆராய்ந்த பின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024