ஆட்டம் காணும் ஆளுமை!
By ப. இசக்கி |
Published on : 19th December 2017 02:18 AM
அண்மைக் காலமாக சமூக ஊடகங்களைத்
திறந்தால் கேலியும், கிண்டலும் கொந்தளிக்கும் அரசியல் மீம்ஸ்கள்
கொட்டுகின்றன. அவற்றில் சிறப்பிடம் பிடிப்பவை அரசியல் தலைவர்களைப்
பற்றியவைதான். அதிலும் தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றிய மீம்ஸ்களுக்கு
குறைவில்லை.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேற்றுமை இல்லாமல் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கும் இந்த மீம்ஸ்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அமோகம். அந்த அளவுக்கு மீம்ஸ்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் "இரை'யாகி வருகின்றனர்.
மீம்ஸ்களைப் பார்க்கும்போதும், அவற்றுக்கான நறுக்கென்ற நாலு வரி கேலி வாசகங்களை படிக்கும்போதும் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சப்பட்டவர்கள் கூட வாய்விட்டு சிரிக்க வேண்டியதாகி விடுகிறது. அந்த நகைச்சுவைகள் நம்மை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கின்றன. ஆமாம், நாம் எப்படிப்பட்ட தலைவர்களால் ஆளப்படுகிறோம் என்ற சிந்தனை மனதை வேதனை கொள்ள வைக்கிறது.
தலைவனுக்குள்ள தகுதிகள் என்ன? நீதி நூல்கள் கூறுவது: குற்றஞ்சாட்டப்படாதவனாக இருக்க வேண்டும். ஒரே மனைவியை உடையவனாக இருத்தல் வேண்டும். கொடியவன் என்றோ அடங்காதவன் என்றோ பெயர் எடுத்தவனாக இருக்கக் கூடாது. கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவும், அத்தகைய பிள்ளைகளை பெற்றெடுத்தவனாகவும் இருக்க வேண்டும். தன் விருப்பப்படி செயல்படுபவனாக இருக்கக் கூடாது. முன்கோபம் கூடாது. மதுபானப் பிரியனாக இருக்கக் கூடாது. இழிவான ஆதாயத்தை நாடாதவனாகவும் இருக்க வேண்டும். தெளிந்த புத்தியை உடையவனாகவும், நீதிமானாகவும், இச்சை அடக்கம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியமானவனாக, நல்ல ஆலோசனை மூலம் புத்தி சொல்பவனாக, எதிர்த்து பேசுபவர்களை கண்டனம் செய்து பதில் அளிப்பதில் வல்லவனாக, தான் கற்றுக் கொண்டதற்கேற்ப உண்மையை பின்பற்றுபவனாக, அதையே பேசுபவனாக, காரிய சமர்த்தனாக இருத்தல் அவசியம் என தலைவனுக்குரிய தகுதிகளாக நீதி நூல்கள் வரையறுக்கின்றன.
இந்தத் தகுதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும், நிரம்பப் பெற்றவர்கள் நாட்டின் தலைவர்களாக இருந்த காலம் இல்லாமல் இல்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டதை எவரும் மறுக்க முடியாது. தலைமைக்கான தகுதி முழுமையாக பெற்றவர்கள்தான் தலைவர்களாக வேண்டும் என்றால் நாட்டில் தலைமைப் பஞ்சம் தலைவிரித்துதான் ஆடும். அந்தக் கால கணக்குப்படி "ஐந்துக்கு இரண்டாவது' (அது இந்தக் கால கணக்குபடி 40 சதவீதம்-35 சதவீதமே தேர்ச்சிதானே) இருந்தால்கூட தலைவராக ஏற்கலாம்.
ஆனால் அதற்கும் தகுதி இல்லை என்பதுதான் இன்றைய நிலை. அதனால்தான் இப்போது சில தலைவர்கள் நாள்தோறும் தங்களது சொல் மற்றும் செயல்களால் மீம்ஸ்ளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அமைச்சர் வைகை அணை நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மகோல் (பாலிஸ்டிரீன்) கொண்டு மூடுகிறார். மற்றொருவர் நொய்யல் ஆற்றுநீர் மாசுபடுவதற்கு மக்கள் சோப்பை பயன்படுத்துவதுதான் காரணம் என கண்டறிந்து கூறுகிறார். தமிழக முதல்வர் புதுதில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார் என்கிறார் மற்றொரு அமைச்சர்.
தமிழகத்தின் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு என்கிறார் இன்னொருவர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறி அரங்கை அதிர வைக்கிறார் ஒருவர்.
சரி, நாட்டை ஆளும் தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், ஆளத் துடிக்கும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? மீத்தேன் திட்டத்துக்கு, தெரியாமல் கையெழுத்திட்டேன் என்கிறார் ஒருவர்.
வெள்ளித்திரையில் வெகுண்டெழச் செய்யும் வீர வசனங்கள் பேசுவோர், அரசியல் கருத்தைச் சொல்லும்போது தெளிவின்றித் தடுமாறுகின்றனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடு குறித்து மாநில தேர்தல் ஆணைய முகவரிக்குப் புகார் கடிதம் எழுதுகிறார் மற்றொருவர்.
சுதந்திர இந்தியாவின் சிற்பி பண்டித நேரு, இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி, கர்மவீரர் காமராஜர், ஏன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது கூட பொதுவெளியில் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களது ஆளுமைகள் குறித்து இன்றும் சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர்களது காலத்திலும் இப்படிப்பட்ட கேலி, கிண்டல்கள் தனிவெளியில் பரவி இருக்கலாம். இன்றைய சமூக ஊடகங்களின் இருப்பு அன்று இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனாலும்கூட அவர்கள் இத்தனை தூரம் தரம் தாழ்ந்து போனதில்லை. அதற்கான வாய்ப்புகள் இன்றுபோலவே அன்றும் இருந்திருக்கவே கூடும். ஆனால் தலைமைப் பண்பு அவர்களைத் தற்காத்தது. அதனால்தான் அவர்கள் இன்றும் தலைவர்களாக மக்கள் மனங்களில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.
தலைநிமிர்ந்து நின்ற தலைவர்கள் ஆட்சி செய்த இந்த நாட்டை இன்று ஆளும் தலைவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருவது வேதனை அளிக்கிறது. தலைவர்களுக்கான அந்த பிம்பம் உடைந்து வேடிக்கை மனிதர்களாக வலம் வரத் தொடங்கி இருப்பது நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல.
தலைவர்கள் கேலிப் பொருளாகும்போது அவர்களது தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது. தலைமைப் பண்பு கேள்விக்குறியாகும்போது அவர்களது ஆளுமையும் ஆட்டம் காணுகிறது. ஆளுமை ஆட்டம் கண்டால் அவர்களது அதிகாரத்துக்கு என்ன சக்தி இருக்கும்? ஜனநாயகத்தில் சக்தி இல்லாத அதிகாரம் கொண்ட தலைவர்களால் யாருக்கு என்ன பயன்? தலைவர்களும், தலைவர்களாகத் துடிப்பவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
No comments:
Post a Comment