Tuesday, December 12, 2017


நன்றியுள்ள ரிக்ஷாக்காரன்…!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 09th December 2017 12:45 PM |


சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்‌ஷாகாரர்.

ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…


”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக் ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”
“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்‌ஷா ஓனர் இல்ல…!


“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”


அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

“95 ரூபாய் ஆகுது”


“இந்தா எடுத்துக்க..


அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.


“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து .
“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!


“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்.
“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”


காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.
”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”


ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.
“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று


நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…


ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?


அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?


வேறு நேரமாயிருந்தால், ரிக் ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்.


“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்.’
“என்னப்பா சொல்ற..?


“ ஆமா சார்..! இந்த ரிக் ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..
அதிகம் பேச வரவில்லை……பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.


படித்த நமக்கே, படிக்காத ரிக்‌ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...