Tuesday, December 12, 2017

தேர்தல் நடத்தி பயனில்லை: லக்கானியிடம் தமிழிசை புகார்

Added : டிச 12, 2017 00:05

 
சென்னை: ''தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், தேர்தல் நடத்தி பயனில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

சென்னை, ஆர்.கே.நகர் பா.ஜ., வேட்பாளர், கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகளுடன், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை, தமிழிசை சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை பட்டியலிட்டார்.

லக்கானியிடம் தமிழிசை கூறியதாவது: 'காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரிக்கலாம். அதன்பின், அனுமதி கிடையாது' என, அறிவித்துள்ளீர்கள். ஆனால், மாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 10:00 மணி வரை, ஊர்வலம் செல்வதாகக் கூறி, வீடு வீடாகச் சென்று, பணம் பட்டுவாடா செய்கின்றனர்.


அனைத்து தெருக்களிலும், மேஜை, நாற்காலி போட்டு, வௌியூர் ஆட்கள் அமர்ந்துள்ளனர். பணப் பட்டுவாடா தாராளமாக நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.

அதற்கு பதிலளித்த ராஜேஷ் லக்கானி, 'உங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை கொடுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார். பின் தமிழிசை, நிருபர்களிடம் கூறியதாவது:
பிரசாரம் ஆரம்பித்த, முதல் நாளில் இருந்தே, முறைகேடுகள் துவங்கி விட்டன. மிக அதிகமாக, பண நடமாட்டம் உள்ளது. வீட்டுக்கு வீடு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, ரூபாய் நோட்டு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 'பூத் சிலிப்'பை, தேர்தல் கமிஷன் மட்டும் வழங்கும் என்றனர்; ஆனால், பல கட்சிகள் வழங்குகின்றன. அதை படம் எடுத்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். பல இடங்களில், பரிசு பொருட்களாக, சின்னமே வழங்கப்படுகிறது. தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்றால் நடத்துங்கள்; நேர்மையாக நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், தேர்தல் நடத்தி பயனில்லை. அனைத்து ஊடகங்களும், 'பணப் பட்டுவாடா நடக்கிறது' என எழுதுகின்றன. ஆனால், பா.ஜ., தவிர, வேறு எந்த கட்சியும், புகார் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024