Tuesday, December 12, 2017

பார் கவுன்சிலில் போட்டியிட நிபந்தனை : ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பரிந்துரை

Added : டிச 12, 2017 00:20

சென்ன: 'மூன்று ஆண்டு தண்டனை விதிக்கக் கூடிய, கிரிமினல் வழக்கு உள்ள வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளில் பதவி வகிக்கும் வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அன்னை மருத்துவ கல்லுாரியின் நிறுவன அறங்காவலர்களுக்கும், புதிய அறங்காவலர்களுக்கும் இடையேயான பிரச்னையில், வழக்கறிஞர்கள் எனக்கூறி, சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், சட்ட கல்வியை ஒழுங்குபடுத்தவும், வழக்கறிஞர்கள் தொழிலை முறைப்படுத்தவும், ௨௫ கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, பார் கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு, கண்டனமும் தெரிவித்தார்.
இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:


நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க, பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர், எஸ்.ஆர்.ரகுநாதன் அவகாசம் கோரினார்.
மிரட்டிய வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, இரண்டு வழக்கறிஞர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் செந்தில்குமார், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளார்.


அதில், 'சொத்து விபரங்கள், நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் விபரங்கள், ௧௦ ஆண்டுகளாக ஆஜரான வழக்குகளின் எண்ணிக்கை, நீதிமன்ற உத்தரவுகள், அரசியல் பதவி விபரங்களை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வெளியிட வேண்டும்' என, அவர் கூறியுள்ளார். 


இந்த பரிந்துரைகள் நியாயமாக இருப்பதாக தெரிகிறது. விபரங்களை வெளியிட்டால், போட்டியிடுபவர்கள் பற்றி, வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள முடியும்.
மூன்று ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய, கிரிமினல் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கறிஞர்களை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 


கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்தால், நியாயமான விசாரணைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
அரசியல் கட்சியில், முக்கிய பதவி வகித்திருந்தாலோ அல்லது வகித்தாலோ, எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலோ, அந்த வழக்கறிஞர்களையும், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இதனால், வழக்கறிஞர் தொழிலில், அரசியல் குறுக்கீடு தவிர்க்கப்படும்.


பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்பும், வழக்கறிஞர்களின் கல்வி தகுதியையும் சரி பார்க்க வேண்டும். சட்டப் படிப்பை முறையாக படிக்கவில்லை என்றால், அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். 


வழக்கறிஞர்களின் குடும்ப அட்டை, 'பான் கார்டு, ஆதார்' அட்டையை சரிபார்க்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி, அனில் தவே தலைமையிலான குழுவின் முன், பார் கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போது தான், அனைத்து பார் கவுன்சில்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க, நீதிபதி குழுவுக்கு ஏதுவாக இருக்கும்.


விசாரணை, வரும், ௧௩க்கு, தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024