Friday, December 15, 2017

குற்றம் கடிதல்!

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 15th December 2017 02:32 AM |


ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்களும், மாணவர்களுக்கு எதிராக ஆசிரியர்களும் குறைகள் கூறுவது அதிகமாகிக் கொண்டிருப்பதுடன், இரு சாராருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவை ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பதாலோ அல்லது மாணவர்களின் ஒழுங்கின்மை காரணமாகவோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படுகின்றன.


"என் பிள்ளை உருப்படுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டாலும் சரி, அல்லது தோலை உரித்தாலும் சரி' என்று பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சொன்ன காலம் போய், மாணவர்களின் நடத்தையில் மாற்றம் கொண்டு வருவதற்கோ அல்லது படிப்பில் முன்னேற்றம் ஏற்படுவதற்கோ ஆசிரியர்கள் எடுக்கும் சிறு நடவடிக்கைகள் கூட மிகைப்படுத்தப்  படுகிறது. 


சில நேரங்களில் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், தவறு
செய்த அல்லது படிக்காத தங்களது குழந்தைகளை கண்டித்த அல்லது தண்டித்த ஆசிரியர் மீது "நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்களா அல்லது நாங்கள் காவல் துறை
யிடம் புகார் தரட்டுமா?' என்று மிரட்டுகின்றனர்.


சமீபத்தில் ஓர் ஆசிரியர், மாணவியின் தோளில் குச்சியால் இலேசாக ஒரு தட்டு தட்டியதற்காக, அன்று மாலையே அந்த மாணவியின் உறவினர் மாணவியிடம் "அடித்த டீச்சர் யார் என்று காட்டு, கையை வெட்டி விடுகிறோம்' என்று பள்ளியின் முன் நின்று கொண்டு தகராறு செய்துள்ளனர். 


மாணவர்களின் மீது உண்மையான அக்கறை எடுத்து, அவர்கள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்று செயல்படும் பெரும்பாலான ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.


மாணவர்கள் மீது தேவையற்ற, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மாட்டிக் கொள்வதில்லை. இவர்கள் செய்யும் தவறுகள் பத்திரிகைகளில் அல்லது சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிந்தால்தான் உண்டு. 


இதில் பெரிய வேதனை என்னவென்றால், இந்த மாதிரியான ஆசிரியர்களால் உளரீதியாகப் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதுவும் சொல்வதில்லை.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில குழந்தைகள் பள்ளியில் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து பெற்றோரிடம் பேசினால் அதனால் எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். 


தனியார் பள்ளியாக இருந்தால், பெற்றோரும் மிகுந்த யோசனைக்குள்ளாகின்றனர். புகார் செய்வதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர்களால் சில நேரங்களில், குழந்தைகள் மறைமுகமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.


ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தெரியாமல் ஓர் ஆசிரியை மீது மோதி விட்டான். தவறு தெரிந்து, பதறிப் போய் உடனே மன்னிப்புக் கேட்டும் அந்த ஆசிரியை இடைவிடாமல் மாணவரை அடித்துள்ளார்.
அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் வேறு ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறவர்கள். பையனின் முகம் சரியில்லாததை உணர்ந்து தாய் விசாரித்தபோதுதான் அவன் தயங்கித் தயங்கி பள்ளியில் நடந்ததை விவரித்துள்ளான்.


மறுநாள் அவனின் தந்தை பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்துப் புகார் கொடுத்தும், அந்த ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆனால், ஒரு வருடம் ஆகியும் இன்று வரை அந்த மாணவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை சாடை, மாடையாகப் பேசுவது மட்டுமல்லாது மற்ற மாணவர்களிடம் இவனுடன் யாரும் பேசாதீர்கள் என்றும் கூறுகிறாராம்.
இதனைவிட மோசமாக மாணவர்களை நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கிறோம். மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுகிறோம் என்று கூறி, பள்ளியில் கொடுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மாணவருக்கு அவசரம் என்றால்கூட கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்காத பள்ளிகளைப் பற்றியும், தண்டிக்கிறோம் என்ற பெயரில் பெண் குழந்தையை மாணவர் பயன்படுத்தும் கழிவறையில் நிற்க வைத்த பள்ளியைப் பற்றியும், சவரம் செய்யாமல் வரும் வளரிளம் பருவ மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது சக மாணவரிடம் சொல்லிச் சவரம் செய்ய வைக்கும் பள்ளிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.


மாணவர்கள் மீது இது மாதிரியான கொடூரமான தாக்குதல்களும், இன்னும் பாலியல் கொடுமைகள் போன்ற அவலங்களும் இந்தியப் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். இதில் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. 


அதே நேரத்தில் நியாயமான காரணங்களுக்காக மாணவர்கள் மீது ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்பொழுது பெற்றோர் அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது. அத்துடன், அவர்களின் நலனுக்காகவே ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள் என்பதை தங்கள் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.


ஆசிரியரின் நடவடிக்கை என்பது அடிப்பதோ அல்லது மாணவர்களின் மனத்தைக் காயப்படுத்துவதாகவோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. எதிர்வினை தற்கொலை வரை போகலாம் என்பதை ஆசிரியர்கள் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தில் மாறவேண்டும் என்றால் பெற்றோரும், ஆசிரியர்களும்தான் மாற வேண்டும். மாறிவிட்ட சமூகச் சூழலில் குழந்தைகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து, தாங்கள் மாற வேண்டும்.
ஒரு தாய்க்குத் தன் குழந்தையிடம் காட்டும் அன்பு மற்றும் கண்டிப்பின் அளவும், எல்லையும் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் தாயன்புடன் பழக வேண்டும். 


வீட்டிலும் பெற்றோர்கள் அன்பையும், கண்டிப்பையும் சம விகிதத்தில் கலந்து வெளிப்படுத்துவதால், பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்கும் நேரங்களில் மாணவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்துவதுடன், மோசமான எதிர்வினையும் ஆற்ற மாட்டார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024