Friday, December 22, 2017

தாய்ப்பால் போற்றுதும்!

By ஐவி. நாகராஜன்  |   Published on : 22nd December 2017 02:33 AM

குடும்பம் குழந்தைகள் வேலை எனப் பல்வேறு பணிகளை சுமக்கும் இன்றைய பெண்களுக்குத் தங்களுடைய கர்ப்ப காலத்தில் குழந்தைகளைக் காப்பதும் ஒரு முக்கியமான பணி. குழந்தை பிறந்த பிறகு எதையெல்லாம் செய்ய வேண்டுமோஅவற்றையெல்லாம் நாம் செய்யத் தவறுகிறோம். அதோடு குழந்தை கருவிலே இருக்கும்போது நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. அதில் முகவும் முக்கியமானது கருவிலே இருக்கும் குழந்தையிடம் நலம் ஏற்படுத்தும் பந்தமாகும்.

நமது நாடு பல நிலைகளில் தன்னிறைவை அடைந்திருந்தாலும் பிறந்த குழந்தையின் உணவாகத் தாய்ப்பாலைக் கொடுப்பதில் பின்னடைவு அடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட மழலையர்கள் மண்ணில் மடிகின்றனர். 

இந்தப் பரிதாப நிலையைக் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பொருத்தமான இணை உணவுகளை (வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய) கொடுப்பதால் மட்டுமே சரி செய்ய முடியும். இதற்கு விலை உயர்ந்த மருந்துகளோ, சிகிச்சைகளோ உதவி செய்யாது.
தாய்ப்பாலூட்டுதல் வளம் குன்றா வளர்ச்சிக்குத் திறவுகோல் என்ற மையக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆக.1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் இல்லை. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த புரிதலும் மக்களிடம் இல்லை.
குழந்தை பிறந்த உடனேயே காக்கும் சீம்பால் சிசுவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து சிசுவை மரணத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் காக்கிறது. சீம்பால் இயற்கையான முதல் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் குழந்தை சரியான மூளை, உடல் மற்றும் மனவளர்ச்சியுடன் குடும்பப் பாசத்துடன் சிறந்து விளங்குகிறது. 

தாய்ப்பாலிலும் நமது பாரம்பரிய உணவுகளிலும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதை முறையாக ஊட்டுவதன் மூலம் நமது குழந்தைகளை நோய்களிலிருந்தும் இறப்பிலிருந்தும் காக்க முடியும். மருந்துகளோ, மருத்துவமனைகளோ தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

உலக சுகாதார நிறுவனம், உலகளாவிய தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டணி போன்றவை குழைந்தைகளுக்கு குறைந்தபட்சம் 2 வயதுவரை தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. முதல் 6 மாதம் - 180 நாட்கள் - தாய்ப்பால் மட்டும் புகட்ட வேண்டும். 6 மாதம் முடிந்தபின் தாய்ப்பாலுடன் வீட்டு உணவுகளை மட்டும் ஊட்ட வேண்டும் என சிபாரிசு செய்கின்றன.

சமீபத்திய மாவட்ட அளவிலான ஆய்வின்படி குழந்தைபிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகத் தாய்ப்பால் புகட்டுவோர் 69 சதவீதம் பேர் மட்டுமே என்றும் 52 சதவீத தாய்மார்கள் 5 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2004-இல் 62 சதவீதமாக இருந்தது, தற்போது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது கவனிக்க தக்கது.
நமது இந்திய அரசும் இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கமும் தேசியசிசு மருத்துவ சங்கமும் சிசு மற்றும் குழந்தைகள் நோய் மற்றும் மரணத்தை தடுப்பற்குத் தாய்ப்பாலே சிறந்தது என வற்புறுத்துகின்றன. 

தமிழக அரசு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்கப்படுத்த அரசுப் பணியளர்களுக்கு 6 மாதம் சம்பளதுடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கியும் பொது இடங்களில் தாய்ப் பாலூட்ட வசதியாகப் பிரத்யேக அறைகளை ஏற்படுத்தியும் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்த அம்மா பெட்டகத்தின் செளபாக்ய சண்டி லேகியம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நெல்லிக்காய் லேகியம் வழங்கியும் பல உதவிகளைப் புரிந்தது. 

பாரத அரசு தாய்ப்பால் ஊட்டுவதற்கு இடையூறு செய்பவர்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தாய்ப்பால் பாதுகாப்புச் சட்டம் 2003 ஐஎம்எஸ் ஆக்ட் சட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்திஅதன் அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கிறது. 

அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் தாய்ப்பால் இடைவேளையை நடைமுறைப்படுத்தியது. அதுவும் இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை.
அரசும் நிறுவனங்களும் பல சலுகைகளை அளிப்பது மட்டும் போதாது. வீட்டிலிருக்கும் தாய்க்கும் வயல் வெளிகளில் தினக்கூலியாக வேலை செய்யும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் ஊட்ட உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். தாய்ப்பால் ஊட்டும் தாய்க்கு குடும்பத்தினரும் அனைத்து தரப்பினரும் ஒத்திசைவாக இருந்து தாய் நன்கு சாப்பிடவும், சந்தோஷமாகப் போதிய ஓய்வுடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பாலூட்டும் தாய்க்குப் பத்தியம் என்னும் பெயரில் பட்டினி போடக் கூடாது. 

சத்து மிகுந்த அனைத்து உணவுகளையும் காய்கறி, பழம், தண்ணீர் போன்றவற்றை தாரளமாக சாப்பிட ஊக்கப்படுத்தி, தினமும் உணவை உண்ண வழிவகை செய்திட வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்புமற்றும் சினைப்பை புற்றுநோயைத் தடுத்து, உதிரப் போக்கையும் நிறுத்தி, தாயின் உயிரைக் காப்பாற்றுவதுடன் ரத்த சோகை வராமலும் தடுக்கிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது தாயின் அடி வயிற்றுப் பகுதி சதையைக் குறைத்து, தாயைப் பாதுகாக்குகிறது.

இதுபோல் எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்ட தாய்ப்பாலை அனைவரும் குழந்தைகளுக்குக் கொடுத்திட வேண்டும். தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும் அதுதான். நோயில்லாத வளமிக்க, வலிமையான பாரதத்தையும் உலகையும் உருவாக்க அனைவரும் தாய்ப்பாலை ஊக்குவிப்போம்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தாய்ப்பாலினும் சிறந்த உணவுமில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024