2 ஜி தீர்ப்பு: சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட கருத்து
By DIN |
Published on : 22nd December 2017 02:25 AM |
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் செயல்பாடுகளால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 70,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. கனிமொழி, தயாளு அம்மாள், ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்;
முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சோரப்ஜி: நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதா? இல்லையா? என்று கருத்துக் கூற இயலாது. அதேவேளையில், இது இறுதித் தீர்ப்பு இல்லை என்று வேண்டுமானால் கூறலாம். அடுத்தகட்டமாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் சிபிஐ-க்கு உள்ளது.
மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே: இந்த வழக்கை விசாரித்த விசாரணை அமைப்புகள், போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிவிட்டன. அதன் காரணமாகவே இத்தகைய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிபிஐ போன்ற அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகளில் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜித்குமார் சின்ஹா: 2 ஜி வழக்கை விசாரித்த சிபிஐயும், அமலாக்கத் துறையும் முதலில் அதை தீவிரமாகக் கையாண்டன. அதன் பின்னர் வழக்கின் விசாரணை பின்னடைவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி: ஆதாரங்கள் இல்லையென்றால் வழக்கு நிரூபணமாகாது என்பதே நிதர்சனம். இந்த வழக்கில் வாதாடியவர்கள் அனைவரும் மிகப் பெரிய சட்ட வல்லுநர்கள். இருப்பினும், எந்த ஆதாரமும் இல்லையென்றால், உண்மையிலேயே அது பொய்யான குற்றச்சாட்டாகத்தான் இருக்க முடியும். தற்போது அது தெளிவாகியுள்ளது.
இவ்வாறாக பல்வேறு சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 2 ஜி தீர்ப்பு தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், 'வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது; குற்றங்கள் நிரூபிக்கப்படாதது அவமானத்துக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment