மேல்முறையீடு: சிபிஐ, அமலாக்கத் துறை முடிவு
By DIN | Published on : 22nd December 2017 04:45 AM
2ஜி அலைக்கற்றை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், '2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்தோம். அதில் சிபிஐ தரப்பு வாதங்களும், ஆதாரங்களும் நீதிமன்றத்துக்கு முழுமையாகப் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது தெரிகிறது. எனவே, இது தொடர்பாக அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கையை சிபிஐ எடுக்கும்' என்றார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாள் அவகாசத்தை சிபிஐ-க்கு நீதிமன்றம் அளித்துள்ளது. அந்தக் காலகட்டத்துக்குள் தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமலாக்கத் துறையும் மேல்முறையீடு: இதனிடையே, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 பேருக்கு எதிராக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
'2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கருப்புப் பணம் பெருமளவில் பரிமாறப்பட்டுள்ளது மற்றொரு முக்கியக் குற்றமாகும். இதில் உள்ள பல உண்மைகளை சிறப்பு நீதிமன்றம் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்' என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கருப்புப் பண முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையும் பதிவு செய்திருந்தது. முன்னதாக, சிபிஐ தொடுத்த வழக்கில் இருந்து 19 பேரையும் விடுவித்த சிபிஐ நீதிமன்றம், அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் இருந்தும் அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பு கூறியது.
No comments:
Post a Comment