Friday, December 22, 2017

நன்கு திட்டமிடப்பட்ட குற்றப்பத்திரிகை: 2ஜி வழக்கு தீர்ப்பில் நீதிபதி

Published : 21 Dec 2017 15:28 IST



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஓ.பி. ஷைனியின் தீர்ப்பின் விவரம்:

2ஜி அலைக்கற்றை வழக்கின் தொடக்கத்தில், சிபிஐ தரப்பு மிகவும் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வழக்கை எதிர்கொண்டது. ஆனால், வழக்கின் விசாரணை முன்னேற்றம் அடைந்தபோது, மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் சிபிஐ அணுகியது, இதனால் அரசுத் தரப்பு எதை மெய்ப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகியது. வழக்கின் முடிவில், அரச தரப்பு வாதங்களின் தரநிலை என்பது, ஒட்டுமொத்தமாக மோசமடைந்து, எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லாமல், அதைரியமாகப் போய்விட்டது.

இந்த வழக்கில் தொடக்கத்தில் ஆ.ராசாவின் செயல்பாடுகளைக் காட்டிலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயல் அல்லது செயல்பாடின்மை குறித்துதான் அதிகமான விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூளையாக இருந்து அ.ராசா தான் சதி செய்தார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

ஆ. ராசா இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், தடையின்றி, தன்னிச்சையாக செயல்பட்டு ஏதும் தவறு இழைத்தார்; சதி செய்தார்; ஊழல் செய்தார்; என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தவறான அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகள் குறித்தும், தீவிரமாக ஆய்வு செய்யப்படாமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது, அவர்களை நீதிமன்ற கூண்டில் கொண்டு வந்து அதை நிரூபிக்க அரசு தரப்பால் முடியவில்லை. இறுதியாக சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வாய்மொழியாக இருந்தாலும், அரசு தரப்பு அளித்த அறிக்கைக்கும் அதற்கும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. இது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

குற்றப்பத்திரிகையில் சிபிஐ தரப்பு பதிவு செய்துள்ள பல்வேறு விஷயங்கள் உண்மையில் சரியானது அல்ல. குறிப்பாக, நுழைவுக் கட்டணத்தை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கோரி நிதித்துறை செயலாளர் தீவிரமாக பரிந்துரை செய்தார் என்பதும், ஆ.ராசா மூலம் எல்.ஓ.ஐ. பிரிவு நீக்கப்பட்டது என்றும், நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது என்பதிலும் உண்மையில்லை.

மேற்கூறப்பட்ட விஷயங்களை தீவிரமாக நான் ஆய்வு செய்ததில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விதமான குற்றத்தையும் நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தோல்வி அடைந்துவிட்டது. நன்கு திட்டமிட்டு தயார் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024