Friday, December 22, 2017

நிலக்கல், 'பார்க்கிங்'கில் பக்தர்கள் கடும் அவதி

Added : டிச 22, 2017 00:50

சபரிமலை: நிலக்கல், வாகன நிறுத்துமிடத்தில், போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பஸ்கள், வேன்கள், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலம், பம்பை செல்ல வேண்டும். இதுபோல, கூட்டம் அதிகமாகும் போது, சிறிய வாகனங்களும், பம்பையில் பக்தர்களை இறக்கிய பின் நிலக்கல் செல்ல வேண்டும்.இந்த வாகனம் நிறுத்துமிடம், 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. ஆனால், எந்த வாகனம் எங்கு நிற்கிறது என்பதை பக்தர்கள் கண்டுபிடிப்பது சிரமம். போதிய வழிகாட்டுதல் பலகைகள் இல்லை. மலையேறி தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், உடல் தளர்ச்சியுற்று வருகின்றனர். இங்கு வந்த பின், தங்கள் வாகனங் களை கண்டுபிடிக்க முடியாமல்அலைவது தினசரி காட்சியாக உள்ளது. டிரைவருக்கு போன் செய்து, கேரள அரசு பஸ் ஸ்டாண்ட் அருகில் வர சொன்னால், அங்கு நீண்ட நேரம் பஸ்களை நிறுத்த, போலீசார் அனுமதிப்பதில்லை.இதனால் ஒரு நாள் முழுவதும் நிலக்கல்லில் தவிக்கும் சூழ்நிலையும் பக்தர்களுக்கு ஏற்படுகிறது'இதை தவிர்க்க, மாநிலங்கள் வாரியாக எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன என்பதை, வரைபடத்துடன் கூடிய போர்டுகளாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024