Friday, December 22, 2017

சி.பி.ஐ., சொதப்பியதால் நொண்டியடித்த வழக்கு
ராஜாவின் அதிரடி வாதத்தால் கிடைத்தது பலன்

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜா உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் பின்னணி குறித்து, சி.பி.ஐ., மற்றும் பாட்டியாலா கோர்ட் தரப்புகளின், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:



பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது.
குறுக்கு விசாரணை

இந்த அறிக்கையின் பரபரப்பாலும், அரசியல் புற அழுத்தம் காரணமாகவும், இந்த பிரச்னை,
விஸ்வரூபம் எடுத்தது.ஆனால், இந்த வழக்கு, முழுக்க முழுக்க தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியில் அமைந்தது என்பது, பலருக்கும் புரியவில்லை. முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியாமல், அவற்றை கைப்பற்றுவதற்கு முன்பாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், சி.பி.ஐ., அவசர கோலத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இது தான், இவ்வழக்கின் மிகப்பெரிய சறுக்கல். கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், ராஜா மிகவும் சாமர்த்தியமாக, முக்கிய ஆவணங்கள் இருப்பதையே வெளிக்காட்டாமல், கைது செய்து சிறையில் தள்ளிய போதும் கூட அமைதி காத்தார்; அதை விட, குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வரை, எதுவும் பேசாமல் இருந்தார்.

ஜாமினில் வெளியாகி, விசாரணை துவங்கிய பின்பே, தொலை தொடர்புத் துறை, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், 'டிராய்' என, பல்வேறு இடங்களில் இருந்த ஆவணங்களை, கோர்ட் மூலமாகவே வரவழைக்க செய்தார். எந்தெந்த குற்றங்கள் எல்லாம், ராஜா செய்ததாக கூறப்பட்டதோ, அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, கையெழுத்தும் போட்டிருந்த முக்கிய அதிகாரிகள் தான், சி.பி.ஐ.,யின் முக்கிய சாட்சிகள்.

இவர்களைகுறுக்கு விசாரணை செய்வது, ராஜாவுக்கு மிக எளிதாகவும் போய்விட்டது. தவிர, சி.பி.ஐ., சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆவணங்களை அள்ளிப் போட்டபடியே இருந்தார். இதனால், பல நேரங்களில், நீதிபதி, சைனியே, 'இதில் வழக்கு எங்கே உள்ளது?' என, சி.பி.ஐ., தரப்பை கடிந்து கொள்ள நேர்ந்தது.'ஸ்பெக்ட்ரம் விலை வேறு; ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்கான நுழைவு கட்டணம் வேறு.

'நுழைவு கட்டணத்தை உயர்த்தாமல் போனதற்கு, அரசின் கொள்கை முடிவு காரணமே தவிர; நானல்ல' என, பார்லிமென்ட், ஜே.பி.சி., ஆகிய இடங்களில் வாதிட்டு தோற்றாலும், ராஜா நம்பிக்கை இழக்கவில்லை; காரணம், கோர்ட்டில், ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
சமாதானம்

அது தெரிந்த ராஜா, மிகத் தெளிவாக,ஆவணங்கள் மூலமே கோர்ட்டில் பேசினார். இந்த வழக்கின் நெளிவு சுளிவுகளை அறிந்தவன் என்பதால், தன்னால் மட்டுமே, சி.பி.ஐ.,யை கையாள முடியும் என்பதை புரிந்து வைத்திருந்து, தனக்காக ஆஜரான, பிற வழக்கறிஞர்களை தவிர்த்து, பல நேரங்களில், தானே முன்வந்து, அசாத்திய உறுதியை விசாரணையின் போது சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான வேளைகளில், கூண்டில் ஏற தயங்காமலும், தானே வாதிடவும் செய்தார். சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர், குரோவருக்கும், ராஜாவுக்கும், பல நேரங்களில், நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு, நீதிபதி தலையிட்டு, சமாதானம் செய்ய வேண்டி யிருந்தது.'ராஜாவோ, அவரது உறவினர்களோ, முறைகேடான வழியில் சொத்து

சேகரிக்கவில்லை' என, கோர்ட்டில், சி.பி.ஐ., வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.

'ஸ்பெக்ட்ரத்தை பெற்றது, தகுதியுள்ள நிறுவனங்கள் தான்' என்பதை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலும், சட்டத் துறை செயலரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வ கடிதமே அளித்தனர்.ராஜா, இறுதியாக, தன் வாதத்தை முடித்த போது கூறியதாவது:

கண் பார்வையற்ற நான்கு பேர், யானையை தொட்டுப் பார்த்தனர். காலை தொட்டவர் துாண் என்றார். வாலை தொட்டவர் கயிறு என்றார். காதை தொட்டவர் முறம் என்றார். உடலை தொட்டவர் சுவர் எனக் கூறியதாக, கதை உள்ளது. இதே போலத்தான், ஸ்பெக்ட்ரம் குறித்த போதிய புரிதலின்றி, சி.ஏ.ஜி., - சி.பி.ஐ., - ஜே.பி.சி., அமலாக்கத் துறையினர் அணுகியதாலேயே, இத்தனை பிரச்னை. இவ்வாறு அவர் வாதாடினர்.

அதை கேட்டதும், நீதிபதி உட்பட, கோர்ட்டிலிருந்த அனைவரும், பலமாக சிரித்து விட்டனர். அன்றைய தினம் தான், தீர்ப்பு எழுதும் தேதியை, முடிவு செய்யும் தீர்மானத்திற்கே, நீதிபதி, ஓ.பி.சைனி வந்தார்.துவக்கம் முதலே, சி.பி.ஐ., தரப்பு மிக பலவீனமாக இருந்தது. அதனால் தான்,

சந்தேகத்தின் பலனை கூட, தனக்கு சாதகமாக கேட்காமல், தான் குற்றமற்றவன் என்ற ஒரே நிலைப்பாட்டில், உறுதியாக நின்று விடுதலையாகி உள்ளார், ராஜா.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024