கடன் பெற்றார் நெஞ்சம்!
By முனைவர் ச. சுப்புரெத்தினம் |
Published on : 26th December 2017 02:50 AM
|
அண்மையில் சில நாளிதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்த தனியார் நிதி நிறுவனத்தின் தங்க நகை ஏல அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. இரண்டு முழுப்பக்க அளவிற்கு அந்த விளம்பரங்கள் இருந்தன. அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி எண்களின் வெளியீடு போல் இருந்தன அவை.
கேரளத்தில் தனது பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் இந்த விளம்பரம், ஏலத்திற்கு வரப்போகும் நகைகளின் உடைமையாளர்களின் மனத்தில் நிச்சயம் கவலையை ஏற்படுத்தியிருக்கும்.
தமிழகத்தில் மதுரை, திருச்சி மற்றும் தேனி மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட கிளைகளில், தங்களது நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்று, கடன் முழுவதும் கட்டி முடிக்க வேண்டிய காலக்கெடு முடிந்தும், அவற்றை மீட்காதவர்களுக்கான அறிவிப்பாக அது இருந்தது.
குறிப்பிட்ட அந்த ஏல அறிவிப்பு, நகைகளை அடகு வைத்துக் கடன் பெற்றவர்களின் பரிதாப நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இருந்தது. அடுத்தடுத்த சில நாட்களிலேயே, கேரளத்தைப் பதிவிடமாகக் கொண்டு இயங்கி வரும் வேறிரண்டு இதே போன்ற நிதி நிறுவனங்களும் இத்தகைய தங்க நகை ஏல அறிவிப்பினைச் செய்தித்தாள்களில் வெளியிட்டிருந்தன.
தனியார் துறையைச் சேர்ந்த அந் நிதி நிறுவனங்களுள் ஒன்றின் ஏல அறிவிப்பு மட்டும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அந் நிறுவனத்தின், தமிழகத்திலுள்ள 107 கிளைகளில் - அதாவது 107 ஊர்களில் வசிக்கும் பொதுமக்களால் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுக் கடன் பெறப்பட்டுள்ளது.
தங்க நகை அடமானத்தின் பேரில் குறிப்பிட்ட அந் நிறுவனத்தில் மட்டும் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் என்பது ஒரு கணிப்பு. அவர்களுள், தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி, நகையை மீட்டவர்கள் போக, கடனைச் செலுத்தாமல் நகைகளை ஏலத்தின் மூலம் இழக்கப் போகும் எஞ்சிய கடனாளிகளின் அந்தப் பட்டியல்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர், அருப்புக்கோட்டை என அகர வரிசையில் தொடங்கிய அக்கிளைகளின் பெயர்கள் விழுப்புரம், விராலிமலை என மொத்தம் 107 என்ற எண்ணிக்கையில் முடிவடைந்தன. இந்தக் கிளைகளின் மூலம் ஏலத்திற்கு வந்துள்ள நகை உரிமையாளர்களின் எண்ணிக்கை 9,258 ஆகும்.
இவர்களுள் 12-இல் 1 பங்கு வாடிக்கையாளர்கள், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியினர். அதாவது, 9,258 பேரில் 700 பேர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாகி முதலிடத்தை வகிக்கின்றனர். 592 பேர் என்ற எண்ணிக்கையில் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சார்ந்தவர்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். மூன்றாமிடத்தில் இருப்போர், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர்களான 281 பேர்.
இந்த நகை ஏல அறிவிப்பு என்பது, திடீரென்று கொடுக்கப்பட்ட அறிவிப்பு அல்ல. ஏற்கெனவே, நகைகளை மீட்டுக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகு, பதிவுத் தபால் மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தெரிவித்தும், சில தபால் பட்டுவாடா ஆகாமலும், ஆக, பல வகையிலும் தெரிவித்தும் தம் நகைகளை மீட்டுச் செல்ல முன்வராத இறுதிக்கட்டத்தில்தான் இந்த ஏல அறிவிப்பு வந்துள்ளது.
இந்த அறிவிப்பும் நகையை மீட்க இன்னொரு சந்தர்ப்பத்தையும் சில நாட்களுக்குக் கொடுத்து, "அதன் பின்னும் மீட்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சில குறிப்பிட்ட கிளை அலுவலகத்தின் மூலம் ஏலம் விடப்படும்' என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.
இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கடன் வாங்கும் முன் இருக்கும் தவிப்பும், விறுவிறுப்பும், வேட்கையும் அக்கடனைத் திரும்பச் செலுத்தும் நிலையில் இருப்பதில்லை என்பதுதான் அது.
இது, மக்களின் இயலாமை என்பதைவிட முயலாமை என்பதன் விளைவுதான்.
இதுபற்றியே அந்தக் காலத்தில் வேடிக்கையாகப் பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். "கடனை வொடனை வாங்கி ஒடம்பத்தேத்து; கடங்கார(ன்) வந்து கேட்டா(ல்) ஒத்த வெரலைக் காட்டு' என்பதுதான் அது.
இந்தியர்களின் வாழ்க்கையில் - குறிப்பாக, தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று தங்க நகை என்பது.
இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் ஆண்டுக்கான தேவை சுமார் 400 டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய நகையின் தேவை, கடன் தேவையைப் பூர்த்தி செய்யவும் இன்றியமையாததாகி விடுகிறது.
தாம் அடகு வைத்துள்ள "அந்த நகைகள் மீட்கப்பட முடியாமல் போனாலென்ன? பிறகு எப்படியாவது சம்பாதித்து, வேறு புதிய நகைகளை வாங்கிக் கொள்ளலாம்' என்ற அலட்சிய மனப்பான்மைதான் இதற்குக் காரணம் எனலாம். குடும்பத்திலுள்ள பெரியவர்களின் இந்த மனப்பான்மை, அடுத்த தலைமுறையினருக்கும் வந்துவிடும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேற்குறித்த விளம்பரத்தின்படி, அதிக எண்ணிக்கையில் ஏலத்திற்கு வந்துள்ள நிதி நிறுவனக் கிளைகள் அமைந்துள்ள பகுதிகளைப் பார்க்கையில், அவை கல்வியிலும், தொழில் துறையிலும் பின்தங்கிய பகுதியாக இருக்க வேண்டுமென ஊகிக்க முடிகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பகுதிகளில் நிறைய எண்ணிக்கையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் அமையாததும், அதனால் தனியார் நிதி நிறுவனங்கள் தமது ஆதிக்கத்தை அங்குச் செலுத்துவதும்தான் காரணம் எனலாம்.
1969-ஆம் ஆண்டு பல வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. தொடக்கக் காலங்களில் தங்க நகை அடகுக் கடன் அவ்வளவாகத் தரப்படவில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் அனைத்து வங்கிகளின் எல்லா கிளைகளிலுமே தங்க நகை ஈட்டுக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு கிராம் தங்க நகைக்கு எவ்வளவு ரூபாய் வரையில், எத்தனை சதவிகித வட்டியில் தரப்படுகிறது என்னும் விவரங்கள் வங்கியின் வாசல் மற்றும் பிற இடங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
நாட்டுடைமை வங்கிகளில் வேளாண் நோக்கத்திற்கான கடன்களும் வழங்கப்படுகின்றன. கடன் வேண்டுபவரின் நிலம் தொடர்பான "சிட்டா'வின் அடையாளத்துடன் அணுகினால், 3 லட்ச ரூபாய் வரையில் 7% வட்டியில் தனியொருவருக்குத் தங்க நகை ஈட்டின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. "சிட்டா'வைச் சமர்ப்பிக்க இயலவில்லையெனில், ஒரு லட்ச ரூபாய் வரையில் கடன் பெறலாம்.
தாம் வாங்கிய வேளாண் கடனை 11 மாதங்களில் எவ்வித நிலுவையுமின்றித் திரும்பச் செலுத்தி முடிப்போர்க்கு அரசால் 3% வட்டி மானியம் தரப்படுகிறது. ஆக, இதன் மூலம் இப்படிக் கடன் பெறுவோர்க்கான ஆண்டு வட்டி என்பது வெறும் 4% மட்டுமே. இதைவிடக் குறைந்த வட்டியில் வேறெங்கும் கடன் பெற இயலாது.
இத்தகைய வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டால், தனியார் நிதி நிறுவனங்களில் நகைக் கடன் வாங்கித் தங்களின் நகைகள் ஏலத்தில் மூழ்கி விடுவதைத் தவிர்க்கலாம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
அவ்வப்பொழுது கையில் கிடைக்கும் தொகையை வரவு வைத்து வட்டித் தொகையைக் குறைக்கலாம் என்ற விழிப்புணர்வும், செயல் வேகமும் பலரிடம் இருப்பதில்லை.
மிக நீண்ட காலமாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாத 12 தனியார் நிறுவனங்களடங்கிய முதற் பட்டியலை சில மாதங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த முதல் பட்டியலின்படி, மொத்த வாராக் கடன் 2,60,000 கோடி ரூபாய் ஆகும்.
இத்தகைய வாராக் கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் வெற்றி பெற்றுவிட்டால், வங்கிகளின் கையிருப்புத் தொகையைக் கொண்டு ஏராளமான, நேர்மைமிக்க ஏழைகளுக்கும், தொழில் முனைவோர்க்கும் கடனளித்து, இத்தகையோர் தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்குக் கடன் பெறுவதை அரசு தடுத்து நிறுத்த முடியும்.
நடுத்தர மக்களும், ஏழைகளும் பொருளாதார ரீதியில் துன்புறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மாபெரும் வங்கிக் கட்டமைப்பினையுடைய ஒரு நல்ல அரசின் கடமையாகும். இலவசங்களைக் கொடுப்பதைவிட இது நல்ல பலனை அளிக்கும்.
தனியார் நிதி நிறுவனங்களைவிட, நாட்டுடைமை வங்கிகளின் நம்பகத்தன்மை மிகுதி என்பதை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள்தாம் தனியார் நிதி நிறுவனங்களில் அதிகமான வட்டிக்குத் தங்க நகைக் கடன் மற்றும் இதர கடன்களைப் பெற்றுக் கடனில் மூழ்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஏழைகள் பயன்பெறும் வகையில் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் என்ற குறைந்தபட்சத் தொகைகளில் வங்கிகளில் கடன்கள் தரப்படுமானால் இந்தப் பரிதாப நிலை நீங்கும். அதற்கெனத் தனிக் கிளைகள் அல்லது பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
கடன் வாங்குவது என்பது குடும்ப வாழ்க்கையில் தவிர்க்கவியலாத ஒன்றுதான் என்றாலும், தேவையற்றும், பகட்டுச் செலவினங்களுக்காகவும் கடன் வாங்கி - குறிப்பாக, அதிக வட்டிக்குத் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைக் கடன் வாங்கித் துன்புறும் நிலையை நாமே வலிய உருவாக்கிக் கொள்ளக் கூடாது. கடன் பட்டார் நெஞ்சம் உறக்கத்திலும் அமைதி கொள்ளாது!
No comments:
Post a Comment