Tuesday, December 26, 2017

பிழைகள் மறைக்கப்பட வேண்டியவை அல்ல

By  இரா. கதிரவன்  |   Published on : 26th December 2017 02:51 AM 
 |
பிழைகள் எதுவுமே இல்லாமல் எந்தச் செயலையாவது செய்ய முடியுமா? ஒருவர் பல பணிகளைச் செய்யும்போது, ஏதேனும் சில பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், பிழைகளை இழைத்துவிடுவோமோ என அஞ்சி, எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதுதான் பெரும் பிழையாக அமையும்.
 தனி மனிதராக மட்டுமல்ல, பலர் இணைந்து செய்யும் செயல்களிலும் சரியான ஒருங்கிணைப்பு - கூட்டுமுயற்சி - ஒற்றுமை, இவற்றுள் ஏதேனும் குறைவேற்படும்போது, தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், கவனிக்கப் பட வேண்டிய விஷயம், தவறுகளில் இருந்து - பிழைகளில் இருந்து பாடம் - படிப்பினை கற்றுக் கொள்வதுதான்.
 இதற்கு "உள்ளதை உள்ளபடி' அங்கீகரிக்கும் பழக்கமும், இரண்டாவதாக, எந்தத் தவறையும் "மூடி மறைக்காமல்' இருக்கும் பழக்கமும் வேண்டும்.
 எந்த ஒரு விஷயத்தையும் மிகைப்படுத்தியோ அல்லது மட்டுப் படுத்தியோ கூறுவதன் மூலம் அல்லது அணுகுவதன் மூலம் நமக்கு நாமே எந்த நன்மையையும் செய்து கொள்ளப் போவதில்லை.
 மாறாக, ஒரு பிரச்னையின் வீரியத்தை அதிகப்படுத்தியோ - குறைத்தோ அணுகுவதால், அப்பிரச்னையை சரிவரக் கையாளும் வாய்ப்பைத் தவறவிடுகின்றோம்.
 இத்தகைய பழக்கத்தின் நீட்சியாக, சில விஷயங்களை மறைப்பது - அல்லது அங்கீகரிக்க மறுப்பது எனும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது.
 தவறுகளை - பிழைகளை மூடி மறைக்காமல் ஒப்புக்கொள்ளும்போது - உள்ளதை உள்ளபடி பார்க்கும்போது, அவற்றிலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும்.
 பிழைகளை இழைப்பதனை விட, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் இருப்பது பெரும் தவறாகும்.
 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும்போது, விஞ்ஞானிகள் அதன் பாதையை - பயணத்தைத் தொடர்ந்து இடைவிடாது கண்காணித்து வருவார்கள்; அதன் பாதையில் திட்டமிடப்படாத சிறு மாறுதல்கள் ஏற்படும்போது அதனது பயணம் சரியான திசைக்கு மாற்றப்படும்; சற்று யோசியுங்கள், ஏவுகணை திசை மாறிச் செல்லுகிறது என்பதனை விஞ்ஞானிகள் குழு ஏற்க மறுத்தால் அல்லது மூடி மறைத்தால் என்னவாகும்?
 ஒரு பெரும் நிர்மாணப் பணியின் களநிலை குறித்த ஆய்வு நடத்தும்போது, அதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தை, குறைபாடுகளை ஏற்க மறுத்தால் என்னவாகும்? பல கோடி பொருள் இழப்பும் - உழைப்பின் விரயமும் ஏற்படும்.
 பெரிய தனியார் நிறுவனங்கள் தங்களது நிர்மாணப் பணிகள் - கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் ஈடுபடும்போது, தவிர்க்கப் பட்டிருக்கக் கூடிய தவறுகள் சில நிகழ்வது உண்டு. அவற்றின் காரணமாக, பொருள் சேதம், பணமிழப்பு, கால விரயம் போன்றவை ஏற்படக் கூடும்.
 அந்நிறுவனங்கள், அவற்றை மூடி மறைக்காது, எந்தெந்தப் பணிகளில் இத்தகைய பொருள் சேதம் - கால விரயம் போன்றவை ஏற்பட்டன, அவற்றுக்கான காரணங்களாகக் கருதப்படுபவை யாவை, அத்தகைய தவறுகளை எவ்வாறு தவிர்த்திருக்க முடியும் என்பதனை, "தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகள்' என்று ஆவணப் படுத்தி, நிறுவனத்தின் பல்வேறு தளங்களிலும் பகிர்ந்து கொள்வார்கள்.
 இதன் மூலம், பிறரும் இத்தகைய தவறுகளை இழைக்காமல் இருப்பதனை உறுதி செய்வார்கள்.
 தனது தவறுகளில் இருந்து பாடம் கற்பதனைவிட, பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பது என்பது மேலும் சிறந்தது ஆகும். எனவே, தவறுகளைத் தாமாக உணராவிட்டால், பிறர் சுட்டிக் காட்டும்போதாவது உணர வேண்டும்.
 இதனை நமது அரசு - நிர்வாக இயந்திரம் ஆகியவற்றோடு கூட பொருத்திப் பார்க்கலாம். பெரும் விபத்து, பேரிடர் குறித்த விவரங்கள், திடீர் நோய் பரவல் குறித்த விவரங்கள் போன்றவற்றை அரசு உடனடியாக, வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெளிப்படையான அணுகுமுறை என்பது அரசு - பெரு நிறுவனங்கள் - பொதுமக்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.
 ஒவ்வொரு குடும்பத்துக்கும் - ஒவ்வொரு பெற்றோருக்குமான செய்தி இதில் அடங்கியிருக்கிறது.
 குழந்தைகள் தங்களது தவறுகளை உணர, மூடி மறைக்காது இருக்க, அவற்றுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள, தயக்கமின்றி அவை குறித்து பேசிப் பரிசீலிக்க, தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்ள, மறுபடியும் அத்தகைய தவறுகளை இழைக்காமல் தவிர்க்க நாம் பழக்கப்படுத்த வேண்டும்.
 பெற்றோர்கள் - ஆசிரியர்கள் ஆகியோர் இளைய தலைமுறையினரை இதற்குப் பழக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்.
 தவறுகளை உணரும் பழக்கமும் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் தரப்படும் எனும் உணர்வும் குழந்தைகளுக்கும் பதின்பருவத்தில் இருப்பவர்களுக்கும் மேலும் நேர்மையையும் - தன்னம்பிக்கையையும் தரும்.
 ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் சொல்லித் தர வேண்டிய இன்றியமையாச் செய்திகளுள் ஒன்று, "பிழைகள் தவிர்க்கப்படவேண்டியவை மட்டுமே - மறைக்கப்படவேண்டியவை அல்ல' என்பதாகும்.
 

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...