Tuesday, December 26, 2017

அ.தி.மு.க.,வில் தினகரன் ஆதரவு மா.செ.,க்கள் 6 பேர் பதவி பறிப்பு!
அ.தி.மு.க.,வில் தினகரன் ஆதரவு, மாவட்ட செயலர்கள், ஆறு பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆதரவாளர்களாக உள்ள புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி, சம்பத் ஆகியோர், கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.




அ.தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு அளித்த, 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக களமிறங்கிய, தினகரன், 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியாக இருப்பதாலும், இரட்டை இலை சின்னம் இருப்பதாலும், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற, அ.தி.மு.க.,வின் கணக்கை முறியடித்துள்ளார்.

அமைதி காத்ததன் விளைவு

இதற்கு முக்கிய காரணம், மாவட்ட செயலர், பகுதி செயலர், வட்ட செயலர் போன்றோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டது தான். இவர்கள், அ.தி.மு.க., பதவிகளில் இருந்த போதிலும், தினகரனுக்கு ஆதரவாக, பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை நீக்காமல், அமைதி காத்ததன் விளைவு, ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்வி


குறித்து ஆராய்வதற்காக, சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்

கூட்டத்தில், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, வட சென்னை வடக்கு - வெற்றிவேல், வேலுார் கிழக்கு - பார்த்திபன், தஞ்சாவூர் வடக்கு - ரெங்கசாமி, தேனி - தங்க தமிழ்செல்வன் ஆகியோர், மாவட்ட செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்றிய, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், கலைராஜன்; திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில செயலர், புகழேந்தி, செய்தி தொடர்புக்குழு உறுப்பினர், சம்பத், மகளிர் அணி துணைச் செயலர், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தினகரனுக்கு ஆதரவாக உள்ள, அனைத்து நிர்வாகிகளையும், படிப்படியாக நீக்கிவிட்டு, அப்பதவிகளில், புதிய நிர்வாகிகளை நியமிக்க, முடிவு செய்துள்ளனர்.

மகளிர் அணி கோஷம்

அ.தி.மு.க.,தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடப்பதை அறிந்து, மகளிர் அணி

நிர்வாகிகள் பலர், கட்சி அலுவலகம் வந்தனர். அவர்கள், அலுவலகத்திற்கு வெளியில் நின்று, 'தோல்விக்கு காரணமான, துரோகிகளை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். 'ஸ்லீப்பர் செல்'களை துாக்கி எறிய வேண்டும். ஜெ., வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மற்றும் தினகரனை கைது செய்ய வேண்டும்' என, கோஷமிட்டனர்.

சிலர், முதல்வரையும் வசைபாடினர். 'போலீசை கையில் வைத்திருந்தும், தினகரன் பணம் கொடுப்பதை தடுக்காமல் விட்டு விட்டார்' என, குற்றம் சாட்டினர். மதுசூதனன் வந்தபோது, 'தோற்றதற்காக கலங்க வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம்' என்றனர். அதை கேட்டதும், மதுசூதனன் கண் கலங்கினார்.

ஐந்து மந்திரிகள் 'ஆப்சென்ட்!'

வனத்துறை அமைச்சர், சீனிவாசன், செய்தித்துறை அமைச்சர், ராஜு, வணிக வரித்துறை அமைச்சர், வீரமணி, பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, கதர் துறை அமைச்சர், பாஸ்கரன் ஆகியோர் வரவில்லை. அரசு விழா உள்ளிட்ட பல்வேறு பணி காரணமாக, அவர்கள் வரவில்லை என, காரணம் கூறப்பட்டது.

எம்.எல்.ஏ.,க்கள் நீக்கமில்லை!

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட, வெற்றிவேல், பார்த்திபன், ரெங்கசாமி, தங்கதமிழ்செல்வன் ஆகியோரிடமிருந்த, மாவட்ட செயலர் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாக, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. கட்சி பொறுப்பிலிருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...