Wednesday, December 6, 2017

சங்கடங்கள் தீர்ப்பார் கணபதி! சங்கடஹர சதுர்த்தியை மறந்துடாதீங்க!

Published : 05 Dec 2017 14:59 IST

வி.ராம்ஜி



எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் காரியங்களில் இறங்குவோம். அப்படித் தொடங்குகிற காரியங்களில் துணையாய் இருந்து தும்பிக்கையான் நம்மைக் காத்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள். இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில், ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள்.

விநாயகருக்கு உகந்தது அருகம்புல். சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினால், எல்லாக் கஷ்டங்களும் விலகிவிடும். சந்தோஷம் மனதிலும் இல்லத்திலும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

அதேபோல், வெள்ளெருக்கம்பூவை மாலையாகக் கட்டி, பிள்ளையாருக்கு சார்த்தி பிரார்த்தனை செய்தால், வீட்டில் உள்ள தோஷங்கள் யாவும் நீங்கிவிடும். காரியத்தடைகள் அகலும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மாலையில் சென்று, விநாயகருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது நன்மைகளைத் தரும்.

முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கலாம். அதேபோல், சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், அருகம்புல் மாலையோ வெற்றிலை மாலையோ வெள்ளெருக்கம்பூ மாலையோ சார்த்தி வேண்டிக் கொள்வது வினைகள் அனைத்தையும் தீர்க்கும்.

இன்னும் இயலும் என்றால், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையோ சுண்டலோ நைவேத்தியமாகப் படைக்க உதவுங்கள். உங்கள் வாழ்க்கை இன்னும் வளமாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை 6.12.17 புதன்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி. மறக்காமல், விநாயகரைத் தரிசியுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் மகா கணபதி!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024