ஆளுமை மேம்பாடு: திட்டமிடல் எல்லாமே எளிதுதான்!
Published :
12 Dec 2017
15:26 IST
Updated :
12 Dec 2017
15:26 IST
நேரமில்லை என்று
சொல்வதைப் பலர் பெருமையாக எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அது அவர்களது
குறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், காலம் யாருக்கும் எந்தச்
சலுகையும் அளிப்பதில்லை.
“பிறகு நான் ஏன் நேரமின்மையால் படிக்க அவதிப்படுகிறேன்?” என்று நீங்கள்
கேட்கலாம். உங்களுக்கு நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை
என்பதுதான் அதற்கான பதில். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது
மிகவும் எளிது. எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் நேரத்தைக்
கைவசப்படுத்தலாம்.
நேர மேலாண்மை என்பது என்ன?
நம்முன்
இருக்கும் செயல்களை அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்த
வேண்டும். அதன்பின் ஒவ்வொரு செயலையும் முடிக்க ஆகும் நேரத்தைக் கணித்து,
தகுந்த நேரத்தை அவற்றுக்கு ஒதுக்க வேண்டும். பின் அந்தச் செயல்களை அதற்கென
ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு செயலை
அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் சரியான முறையில் செய்து முடிப்பதுதான்
நேர மேலாண்மை. இந்த நேர மேலாண்மை மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல்
அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்வின் லட்சியம்
உங்கள்
வாழ்வின் லட்சியம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நோட்டுப்
புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஐந்து
வருடங்கள் கழித்து என்னவாக இருப்பீர்கள் என்று நினைப்பதை எழுதி
வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எதை அடைய வேண்டும் என்ற தெளிவு
இருந்தால்தான் நம் பாதையும் பயணமும் தெளிவடையும்.
படிக்கும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்
படிக்கும்
இடம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தகங்களையும் குறிப்பேடுகளையும்
அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அடுக்கிவையுங்கள். பேனா, பென்சில்,
ரப்பர் போன்றவற்றைப் படிக்கும் மேஜை மேல் பரத்தி வைக்காமல், அதற்கான
பெட்டியில் அடுக்குங்கள். இவற்றின் மூலம் தேடுவதில் நேரம் விரயமாகாமல்
தடுக்கலாம்.
திட்டமிட்டுப் படித்தல்
எந்தப்
பாடம் முக்கியமானது, எதை முதலில் படிக்க வேண்டும் என்பதைத்
தீர்மானியுங்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். பாடத்தின்
ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு மதிப்பெண் என்பதைத் தெளிவாகத்
தெரிந்துகொள்ளுங்கள். பின், இந்தப் புரிதலின் அடிப்படையில் எப்படிப் படிக்க
வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அட்டவணை தயார்செய்யுங்கள். ஒவ்வொரு
பாடத்துக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும்
கடினமான பாடத்தை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். அதிலிருந்து படிப்படியாக
எளிதான பாடத்தைப் படிக்கச் செல்லுங்கள். ஏனென்றால், மூளை சுறுசுறுப்பாக
இருக்கும்போது அது கடினமான பாடத்தை எளிதில் கிரகித்துக்கொள்ளும், தினமும்
அன்று படித்ததை மீண்டும் வாசிப்பதற்கு என்று சிறிது நேரத்தை
ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
பாராட்டுங்கள்
ஒவ்வொரு
நாளும் நீங்கள் படித்து முடித்த பாடங்களை அட்டவணையில்
குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி அந்த நாளில் படித்து
முடித்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே
ஊக்குவித்துக்கொள்வது மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கும்.
நொறுக்குத் தீனி வேண்டாமே!
படிக்கும்போதே
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பர்கர், பீட்சா, நொறுக்குத்
தீனிகள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிருங்கள். அது உங்கள் எடையை
அதிகரிப்பது மட்டுமல்லாமல் தூக்கத்தையும் வரவழைக்கும். அதற்குப் பதில்
பழங்கள், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உங்களைக் களைப்படையாமல்
பார்த்துக் கொள்ளும்.
கவனச் சிதறலைத் தவிர்த்தல்
நீங்கள்
படிக்கும் அறையில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எதுவும் இல்லாமல்
இருக்குபடி பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, பத்திரிகைகள், காமிக்ஸ்
புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை இருக்கக் கூடாது.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பதில் எந்தப் பயனுமில்லை. படிக்கும்
நேரத்தில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை என்பதை உங்களுக்கு நீங்களே
சொல்லிக்கொள்ளுங்கள்.
கைபேசியைத் தவிர்த்தல்
நண்பர்கள்
எங்கும் ஓடிவிடப் போவதில்லை. நீங்கள் சிரத்தையுடன் படித்து நன்றாகத்
தேர்வு எழுதிய பின்னும் அவர்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே, படிக்கும்
நேரத்தில் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளியுங்கள், நண்பர்களுடன்
கைபேசியில் உரையாடுவது உங்கள் நேரத்தை வீணாக்கிவிடும் என்பதை மறக்கலாகாது.
பாடம் தொடர்பான தவிர்க்க முடியாத உதவிக்கு கைபேசியைப் பயன்படுத்தலாம்.
வெளிச்சமும் காற்றோட்டமும்
படிக்கும்
அறையை நல்ல காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் வைத்து கொள்ளுங்கள்.
காற்றோட்டம் மூளையையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும். கண்கள்
எளிதில் களைப்படையாமல் வெளிச்சம் பார்த்துக்கொள்ளும்.
இடை ஓய்வு
படிப்புக்கு
இடையே ஓய்வுக்கு என்று தகுந்த நேரத்தை ஒதுக்குங்கள். எந்நேரமும்
படித்துக்கொண்டிருந்தால் மூளை ஆற்றல் மங்கிவிடும். மேலும், மனதின்
உள்வாங்கும்தன்மை குறையும். இதனால், படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும்
ஆபத்து உள்ளது. ஓய்வு என்பது தொலைக்காட்சி பார்ப்பதோ வீடியோ கேம்ஸ்
விளையாடுவதோ அல்ல. ஏனென்றால், அவை மூளையை மேலும் களைப்படையச் செய்யும்.
சொல்லப்போனால், அதன் தாக்கம் நாம் படிக்கும்போதும் தொடரும். எனவே, முடிந்த
அளவு அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது விளையாட்டில்
ஈடுபடுங்கள். இல்லையென்றால் காலாற நடந்துவிட்டுத் திரும்புங்கள்.
காலம் பொன் போன்றது
‘காலம்
பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. மாணவப்
பருவத்தில் படிப்பதுதான் முக்கியக் கடமை. எனவே, அந்தப் படிப்பை எப்போதும்
முதன்மை விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், காலம் யாருக்காகவும்
எதற்காகவும் காத்திருக்காமல் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நேரத்தை
முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு
இட்டுச்செல்லும்.
No comments:
Post a Comment