சிறையில் எப்படி இருக்கிறார் லாலு பிரசாத்?
Published : 26 Dec 2017 11:32 IST
அமர்நாத் திவேரி
லாலு பிரசாத் (கோப்பு படம்)
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், கடந்த 1990-ம் ஆண்டு பிஹார் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவான நிலையில், 2013-ல் ஒரு வழக்கில் லாலுவுக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை விதித்தது. இந்த வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, 2-வது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறை வளாகத்தில் உள்ள உயர் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டார்.
பிஹார் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதால் அவருக்கு சிறையில் விஐபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டிவி, செய்தித்தாள், கொசு வலை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவருக்கு கைதி எண் 3351 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறையின் உயர் வகுப்பில் லாலுவுடன் சேர்ந்து வேறு 6 அரசியல் விஐபிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்வான் லக்தா, தன்பாத் பாஜக எம்எல்ஏ சஞ்சய் சிங், லகர்தக்கா முன்னாள் எம்எல்ஏ கமல் கிஷோர் பகட், ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் ராஜா பீட்டர், எம்எல்ஏ எனோஸ் எக்கா உள்ளிட்டோரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லாலுவுக்கு இரண்டு சப்பாத்தியும், சாதமும் கூடுதலாக முட்டைகோஸ் உள்ளிட்ட வேகவைத்த காய்கறி உணவாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, அவர் விருப்பமுடன் மென்று சுவைக்கும் ‘பான்’ வழங்கப்படுகிறது. அவரை சந்திப்பதற்காக, நேற்று (திங்கள்) உறவின்ரகள், வழக்கறிஞர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்தனர்.
அதிகமானோர் வந்தததால் அவர்களை உள்ளே விட சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறியது. இதை கண்டித்து லாலுவின் ராஷட்ரீய ஜனதாள கட்சியினர் போராட்டம் நடத்தினர். எனினும் அனைவரையும் ஜெயிலுக்குள் அனுமதிபப்தில் சிக்கல் இருப்பதாக சிறை நிர்வாகம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவர் அன்னபூர்ணா சிங், லாலுவை சிறையில் பார்த்து விட்டு வந்து தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''லாலு பிரசாத் நலமுடன் இருக்கிறார். அவருக்கு தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றன. மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.
கடந்த 2013-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, லாலு பிரசாத் மிகவும் பதற்றத்துடனும், கோபத்துடனும் இருந்தார். ஆனால் தற்போது அமைதியுடன் காணப்படுவதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். மற்ற கைதிகளுடன் கலகலப்புடன் பேசுவதாகவும் அவர்கள் கூறினர்.
அதேசமயம் லாலு பிரசாத்துக்கு, 2014-ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், அவரது உடல்நலத்தில் சிறை நிர்வாகம் கவனத்துடன் இருக்க வேண்டும் என, அவரது மனைவியும், பிஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேசமயம் கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment