Tuesday, December 12, 2017

ரேஷன் பொருட்கள் ரத்து என, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி

Updated : டிச 12, 2017 00:58 | Added : டிச 12, 2017 00:46



'ரேஷன் பொருட்கள் மானியம் ரத்து' என, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மக்களிடம் வதந்தியை ஏற்படுத்தும் விஷமிகள் குறித்து, போலீசில் புகார் செய்ய, உணவு துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

பிரச்னை இல்லை

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்தில், அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ரேஷன் கார்டுகள், பி.எச்.எச்., எனும் முன்னுரிமை கார்டு; என்.பி.எச்.எச்., எனும் முன்னுரிமை அல்லாத கார்டுகள் என, பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்டாலும், ஏற்கனவே இருந்தபடியே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' செயலியில், 'உங்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டில், புகைப்படத்திற்கு கீழே, பி.எச்.எச்., என இருந்தால், ஒன்றும் பிரச்னை இல்லை. 'ஆனால், என்.பி.எச்.எச்., என இருந்தால், அதை மாற்ற விண்ணப்பம் பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் தர வேண்டும். 12ம் தேதி, கடைசி நாள்.

'தவறும்பட்சத்தில், மானியம் ரத்தாகும்' என, தகவல் பரவி வருகிறது. இது, பொது மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டாலும், இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முன் எப்படி வழங்கப்பட்டனவோ, அதே போல் தரப்படுகின்றன.

குறிப்பாக, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பின், நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு, 20 கிலோ இலவச அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோ அரிசி இலவசமாகவும் தரப்படுகிறது.

தவறான தகவல்

அப்படி இருக்கும்போது, சில சமூக விரோதிகள், விண்ணப்பம் என்ற பெயரில், மக்களிடம் பணம் பறிக்க, முன்னுரிமை கார்டுக்கு மாறவில்லை எனில், மானியம் ரத்தாகும் என, தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

இது, முற்றிலும் தவறு; அதை நம்ப வேண்டாம். மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல் பரப்பும் விஷமிகளை கண்டறிந்து, போலீசில் புகார் அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024