Friday, January 19, 2018


30 பைசா குறைவுக்கு நடத்துனர் பணி நீக்கம் செல்லாது : தொழிலாளர் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட மறுப்பு

Added : ஜன 19, 2018 00:44

சென்னை: 'நடத்துனரின் பணப் பையில், 30 காசு குறைவாக இருந்ததற்காக, பணி நீக்கம் செய்தது செல்லாது' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில், நடத்துனராக, தனஞ்செயன் என்பவர் பணியாற்றினார். பணியில் இருக்கும் போது, திடீர் சோதனை நடத்தப்பட்டதில், டிக்கெட் வழங்கியதில் குறைபாடுகள், சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இருந்தது ஆகியவற்றுக்காக, தனஞ்செயன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின், விசாரணை நடத்தப்பட்டது. விளக்கம் திருப்தி அளிக்காததால், பணி நீக்கம் செய்து, 1995ல், நிர்வாகம் உத்தரவிட்டது.

2002ல் உத்தரவு : இதையடுத்து, தொழிலாளர் நீதிமன்றத்தில், தனஞ்செயன் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, பணியில் அமர்த்தும்படி, 2002ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழக நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவை பார்க்கும் போது, ஒவ்வொரு பிரச்னையையும் பரிசீலித்திருப்பது தெரிகிறது.

போக்குவரத்து கழகத்தின் நிலை உத்தரவுப்படி, ௨௦ ரூபாய் வரை குறைவாக இருந்தால், அது அனுமதிக்க கூடியது தான் என்றும், இந்த வழக்கைப் பொறுத்தவரை, ௩௦ பைசா மட்டுமே குறைவாக இருந்தது என்றும், தொழிலாளர் நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டு சரக்குகளுக்கு டிக்கெட் வழங்காததற்கு, நிர்வாகமே நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது. எனவே, 30 பைசா குறைவை நியாயப்படுத்தி, தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கான முடிவுக்கும், உரிய ஆதாரங்கள் உள்ளன.

போக்குவரத்து கழக நிலை உத்தரவுப்படி, 20 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் கூட, அந்த ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க தேவையில்லை. நடத்துனரை பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என, தொழிலாளர் நீதிமன்றம் முடிவுக்கு வந்ததில், நியாயம் உள்ளது.
அதனால், அந்த உத்தரவில், குற்றம் காண முடியாது; அதில், குறுக்கிட தேவையில்லை.

போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, 68 ஆயிரம் ரூபாயை, நிர்வாகம், டிபாசிட் செய்துள்ளது.

50 சதவீத சம்பளம் : தற்போது, தனஞ்செயன், பணி ஓய்வு பெற்று விட்டதால், மீண்டும் பணியில் சேர்க்கும் கேள்வி எழவில்லை. தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து, பணி ஓய்வு பெறும் நாள் வரை, 50 சதவீத சம்பளம் பெற உரிமை உள்ளது. மேலும், டிபாசிட் தொகையையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...