Monday, January 15, 2018

கோமாதா எங்கள் குலமாதா! குலமாதர் நலம் காக்கும் குணமாதா!

Added : ஜன 15, 2018 01:27








தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். பாலுாட்டி சீராட்டி வளர்த்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். வாழும் காலம் வரைக்கும் நமக்கு பால் கொடுத்து உதவும் கோமாதா தான். அன்பும், சாந்தமும் நிறைந்த பசுவைக் கண்டால் பெற்ற தாயைப் பார்த்தது போல மனதில் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே 'அம்மா' என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பும்.

குழந்தையாக இருந்தபோது மட்டுமே பெற்ற தாய் பாலுாட்டுகிறாள். பசுவோ காலம் முழுக்க நமக்கு பால் தருகிறது, இதே போல காளைகள் நமக்கு உணவளிக்கும் பணியில் கடுமையாக பாடுபடுகின்றன. கலப்பையை இழுத்துக் கொண்டு களிமண் நிறைந்த நிலத்தை கடும் பாடுபட்டு உழுகிறது. வண்டிகளை இழுக்கிறது. செக்கு இழுக்கிறது. எனவே அவற்றையும் நம் குடும்பத்தின் அங்கமாக நினைத்து நன்றியுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம்.

தங்கச்சி பசு: லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு 'கோமாதா' என்று பெயர் வழங்கப்படுகிறது. சில கோயில்களில் பராசக்தியே பசு வடிவில் வந்ததாக கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலில் அம்பாளின் பெயரே 'கோ'மதி அல்லது 'ஆ'வுடை என உள்ளது. 'கோ' என்றாலும், 'ஆ' என்றாலும் 'பசு' என்று பொருள்படும் அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து சிவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்வர்.

பெண்களே.... மனசு வையுங்க! பால் கொடுக்கும் கறவை காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர். வயதாகி கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர். இதனால் பெரும் பாவம் உண்டாகும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பெண்கள் நினைத்தால் பசுவைப் பாதுகாக்க முடியும். தினமும் வீட்டில் சமைக்கும் போது காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச் சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். வீடுகளில் இதனைச்சேகரிக்கும் பணியில் சமூகசேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் கோபால கிருஷ்ணரின் அருள் உண்டாகும்.

நெய் மணக்கும் ஊர் : சிவனுக்கு பால், தயிர், நெய் ஆகிய மூன்றாலும் தனித்தனியாக அபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் உண்டாகும் என்கிறது ஆகமம். திருவையாறு அருகிலுள்ள சிவத்தலமான தில்லைஸ்தானத்தில் உள்ள சிவன் 'நெய்யாடியப்பர்' என்று வழங்கப்படுகிறார்.

ஒரே நிமிடத்தில் உலகை வலம் வரலாம்:

பாரத தேசம் முழுவதும் புனிதமான கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை எல்லாம் தரிசிக்க வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் கூட நம் நாட்டில் நிறைய உண்டு. இவற்றில் நீராடவும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி கோமாதாவான பசுவை வணங்குவது தான். அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகள் எல்லாம் அதன் உடலில் அடங்கியுள்ளன. தினமும் காலையில் நீராடியதும் பசுவை வலம் வந்து வணங்கினால் உலகையே வலம் வந்த புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.

தானமா... உஷாரா இருங்க..!

அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவங்கள் கூட நீங்கி விடும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், பசுவை பெறுபவர் அதனை அக்கறையாக பாதுகாப்பாரா என்பதில் தானம் அளிப்பவர் உஷாராக இருப்பது அவசியம். சியவன மகரிஷி ஸ்லோகம் ஒன்றில், 'எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே ஒளி பெற்றுத் திகழும்'என சொல்லியுள்ளார். 'அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும்' என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.

கோடிமடங்கு நன்மை :

பசுவைப் பார்த்தாலே புண்ணியம் என்கிறது சகுன சாஸ்திரம். காலையில் எழுந்ததும் பசுவை தரிசித்தால் அந்த நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால் வெற்றி கிடைக்கும். மாட்டுக் கொட்டில் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் எப்போதும் நிறைந்திருக்கும். கொட்டிலுக்கு 'கோஷ்டம்' என்று பெயர். கோயிலில் மூலஸ்தான சுற்றுச்சுவரை 'கோஷ்டம்' என்பர். கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான இடம் வேறில்லை என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம் ஜெபித்தால் அதன் நன்மை கோடி மடங்காக இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024